Friday, December 17, 2021

பொருளடக்கம்

 ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் சுலோகங்களுக்கான பொருளடக்கம் 

( For English Version -- Click Here

(ஒலிக்குறிப்பு:-- உதாரணம் - க2 - க என்பதன் அழுத்து ஒலி kha; க3 - ga; க4 - gha; இவ்வாறே அனைத்து வல்லின உயிர்மெய்களுக்கும். ச என்பதற்கு ச2 - அழுத்து ஒலி cha; ஜ என்னும் எழுத்து ஏற்கனவே இருப்பதால் ஜ2 - jha. 

ஸ, ஷ போன்ற எழுத்துகள் இருக்கின்றன. ஆனால் சங்கரர் என்பதில் வரும் ச என்பதன் ஒலியைக் குறிக்க Italics ச - என்பதைப் பயன்படுத்தியிருக்கிறேன். 

ஆங்கில எழுத்து S என்பது போல் சுலோகங்களுக்கு நடுவில் சிலசமயம் வரும். அது அவக்ரஹம் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுகிறது. அவக்ரஹம் என்பது அந்த இடத்தில் ‘அ’ என்ற ஒலி இருப்பதைக் காட்டும் குறிப்பு. 

தங்களுடைய மிக அதிக ஆதரவு இந்த முயற்சிக்கு நல்கியிருப்பதற்கு நன்றி. சிலர் ஒலிக்குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதால் இதைத் தருகிறேன்.)


ஸ்ரீகிருஷ்ணன் அருளிய பகவந்நாம விளக்கம் 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அறிமுகம் 

கேட்டானய்யா கேள்வி! 

பிரணவம் நமஸ்காரம் நாமாவளி அமைப்பின் விளக்கம் 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பூர்வாங்க சுலோகங்கள் - முதல் பகுதி 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பூர்வாங்க சுலோகங்கள் - இரண்டாம் பகுதி 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - தியான சுலோகம் 

தியான சுலோகம் பற்றிய விளக்கம் 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம சுலோகங்கள் வரிசையாக : 

001) விச்வம் விஷ்ணு: 

002) பூதாத்மா 

003) யோகோ யோகவிதாம் 

004) ஸர்வ: 

005) ஸ்வயம்பூ: 

006, 007) அப்ரமேய:, அக்ராஹ்ய: 2 சுலோகங்கள் 

008) ஈசான:  

009) ஈச்வர:  

010) ஸுரேச: 

011) அஜ: 

012) வஸு; 

013) ருத்ர: 

014) ஸர்வக: 

015) லோகாத்யக்ஷ: 

016) ப்ராஜிஷ்ணு: 

017) உபேந்த்ரோ வாமந: 

018) வேத்ய: 

019) மஹாபுத்தி: 

020) மஹேஷ்வாஸ: 

021) மரீசி: 

022) அம்ருத்யு: 

023) குரு: 

024) அக்ரணீ:  

025) ஆவர்தன: 

026) ஸுப்ரஸாத: 

027) அஸங்க்யேய: 

028) வ்ருஷாஹீ 

029) ஸுபுஜ: 

030) ஓஜ: 

031) அம்ருதாம்சூத்பவ: 

032) பூதபவ்யபவந்நாத: 

033) யுகாதிக்ருத் 

034) இஷ்டோSவிசிஷ்ட: 

035) அச்யுத: 

036) ஸ்கந்த: 

037) அசோக: 

038) பத்மநாப: 

039) அதுல: 

040) விக்ஷர: 

041) உத்பவ: 

042) வ்யவஸாய: 

043) ராம: 

044) வைகுண்ட: 

045) ருது: 

046) விஸ்தார: 

047) அநிர்விண்ண: 

048) யக்ஞ: 

049) ஸுவ்ரத: 

050) ஸ்வாபந: 

051) தர்மகுப் 

052) கபஸ்திநேமி: 

053) உத்தர: 

054) ஸோமப: 

055) ஜீவ: 

056) அஜ: 

057) மஹர்ஷி: 

058) மஹாவராஹ: 

059) வேதா: 

060) பகவாந் 

061) ஸுதந்வா 

062) த்ரிஸாமா 

063) சுபாங்க: 

064) அநிவர்த்தீ 

065) ஸ்ரீத: 

066) ஸ்வக்ஷ: 

067) உதீர்ண: 

068) அர்சிஷ்மாந் 

069) காலநேமிநிஹா 

070) காமதேவ: 

071) ப்ரஹ்மண்ய: 

072) மஹாக்ரம: 

073) ஸ்தவ்ய: 

074) மநோஜவ: 

075) ஸத்கதி: 

076) பூதாவாஸ: 

077) விச்வமூர்த்தி: 

078) ஏகோ நைக: 

079) ஸுவர்ணவர்ண: 

080) அமாநீ 

081) தேஜோவ்ருஷ: 

082) சதுர்மூர்த்தி: 

083) ஸமாவர்த்த: 

084) சுபாங்க: 

085) உத்பவ: 

086) ஸுவர்ணபிந்து: 

087) குமுத: 

088) ஸுலப: 

089) ஸஹஸ்ரார்ச்சி: 

090) அணு: 

091) பாரப்ருத் 

092) தனுர்தர: 

093) ஸத்த்வவாந் 

094) விஹாயஸகதி: 

095) அநந்தஹுதபுக்போக்தா 

096) ஸநாத் 

097) அரௌத்ர: 

098) அக்ரூர: 

099) உத்தாரண: 

100) அநந்தரூப: 

101) அநாதி: 

102) ஆதாரநிலய: 

103) ப்ரமாணம் 

104) பூர்புவஸ்வஸ்தரு: 

105) யக்ஞப்ருத் 

106) ஆத்மயோநி: 

107) சங்கப்ருந்நந்தகீ 

108) வனமாலீ 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கற்பதால் விளையும் பலன்கள் 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

To go to my English Rendering of the meanings --> CLICK HERE 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கற்பதால் விளையும் பலன்கள்

கேசவனின் புகழ் பாடும் ஆயிர நாமங்கள் இவை. திவ்யத்தின் திரட்டு இவை. இவற்றைப் பாடினாலோ, கேட்டாலோ இவ்வுலகிலும் மற்று அவ்வுலகிலும் அசுபம் என்பது சிறிதும் நெருங்க இயலாது. வாழ்க்கையில் பல தொழில்களில் உள்ளோரும் இதனால் பலன் பெறுகின்றனர். பல நோக்குகள் உள்ளோரும் தம் தம் நோக்கத்தில் இதனால் வெற்றி பெறுகின்றனர். அறிவு மற்றும் ஞானம் குறித்து முனைபவர்களுக்குத் தெளிந்த தத்துவ ஞானம் ஏற்படுகிறது. உலக வாழ்க்கையில் நியாயமான முறையில் சிறக்க வேண்டும், நல்ல ஆட்சியாளர்களாக வெற்றி பெற வேண்டும்; நல்ல வியாபாரிகளாகச் செழிக்க வேண்டும்; அலுவலகப் பணிகளில் நல்ல வளர்ச்சியும், சந்தோஷமும் அடைய வேண்டும் என்பவர்களுக்கு இந்த ஆயிர நாமம் கற்பதால் நல்ல பலன் உண்டாகிறது. நல்ல புகழ், கீர்த்தி, பெருமை முதலியன இதைக் கற்பவர்களுக்கு உண்டாகின்றன. நோயிலிருந்து விடுதலை; பயத்திலிருந்து விடுதலை; ஆபத்திலிருந்து விடுதலை; மனத்துயர்களினின்றும் விடுதலை இவையெல்லாம் இதைக் கற்பதால் விளைகின்றன. தினமும் பக்தியுடன் ஆயிர நாமங்களால் துதிப்பவர் பல இடர்ப்பாடுகளையும் கடக்கின்றனர். வாஸுதேவனைச் சரணடைந்து வழிபடும் மனிதர் அனைத்துப் பாங்களினின்றும் விடுபட்டு என்றும் நிலைத்த பெருநிலையான பிரம்மத்திடமே செல்கின்றனர். 

ந வாஸுதே3வ ப4க்தாநாம் அசுப4ம் வித்3யதே க்வசித் | 
ஜன்மம்ருத்யு ஜரா வ்யாதி4ப4யம் நைவோபஜாயதே || 

வாஸுதேவனின் பக்தர்கள் அசுபம் என்றால் என்ன என்றே அறியார்கள். அவர்களுக்கு பிறப்பால் பயம், இறப்பால் பயம், முதுமையால் பயம், வியாதியினால் பயம் என்பவை ஒரு நாளும் உண்டாகா. 

புருஷோத்தமனின் பக்தர்கள் எப்படி இருப்பார்கள்? 

அவர்களிடம் குரோதம் இருக்காது; மாச்சரியம் என்பது இருக்காது; லோபத்தனம் இருக்காது; நன்மையற்ற மதி என்பது இருக்காது. மாறாகப் பலவித புண்ணியங்களும் அவர்களிடத்தே ஒருங்கு திகழும். அப்படி இருப்போரே புருஷோத்தமனின் பக்தர்கள் ஆவர். 

என்ன கஷ்டம் இருந்தாலும், என்ன இடைஞ்சல்கள் இருந்தாலும், என்ன வியாதிகள் இருந்தாலும், மனக்கிலேசங்கள் இருந்தாலும் ’நாராயண’ என்னும் நாமத்தை உச்சரிப்பதால் அத்தனை துக்கங்களும் விடுபட்டுச் சுகம் ஏற்படுகிறது. 

காயேன வாசா மனஸேந்த்3ரியைர்வா 
பு3த்3த்4யாSSத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபா4வாத் | 
கரோமி யத்3யத் ஸகலம் பரஸ்மை 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி || 

உடலால், வாக்கால், மனத்தால், இந்திரியங்களால், புத்தியால், என்னால் நானாகவோ அல்லது பிரகிருதியின் சுபாவத்தாலோ எதை எதைச் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே பரமாகச் சமர்ப்பித்து விடுகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

வனமாலீ கதீ சார்ங்கீ

வனமாலீ க3தீ3 சார்ங்கீ3 ங்கீ2 சக்ரீ ச நந்த3கீ | 
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதே3வோSபி4ரக்ஷது || 


வனமாலையைத் தரித்தவரும், கௌமோதகீ என்னும் கதையைத் தரித்தவரும், சார்ங்கம் என்னும் வில்லுடையவரும், சங்கம் சக்ரத்தைத் தரித்தவரும், நந்தகீ என்னும் ஒள்வாள் தரித்தவரும் ஆன திருமால் ஆகிய ஸ்ரீமாந் நாராயணர், விஷ்ணு, வாஸுதேவர் நம்மைக் காப்பாற்றட்டும். 

***

சங்கப்ருந்நந்தகீ சக்ரீ

ங்க2ப்4ருந்நந்த3கீ சக்ரீ சார்ங்க3த4ந்வா கதா3த4ர: | 
ரதா2ங்க3பாணிரக்ஷோப்4ய: ஸர்வப்ரஹரணாயுத4: || 
 
ஸர்வப்ரஹரணாயுத4 ஓம் நம:


சங்கப்ருத் -- பிரகிருதி தத்வத்தையே சங்கமாகக் கொண்டு தரிக்கிறார் 

நந்தகீ -- வித்யைகளின் முழுத்தொகுதியான நந்தகி என்னும் வாளைத் தரிப்பவர் 

சக்ரீ -- மனம் என்னும் தத்துவத்தையே சக்ரமாகத் தரிக்கிறார் 

சார்ங்கதந்வா -- இந்திரியங்கள் எல்லாம் எழுகின்ற மூலமான அகங்கார தத்துவத்தைச் சார்ங்கம் என்னும் வில்லாகத் தரிக்கிறார் 

கதாதர: -- புத்தி தத்துவம் என்னும் கௌமோதகீ என்னும் கதையைத் தரிக்கிறார் 

ரதாங்கபாணி: -- ரதத்தின் அங்கமான தேர்ச்சக்கிரத்தை அன்றோ கையிலேந்திச் சுழட்டியபடி அன்று என்னை நோக்கி வந்தார் இந்தத் தேவகீநந்தனர்! 

அக்ஷோப்ய: -- சரணாகதி அடைந்தவர்களைக் காத்தே தீருவது என்னும் அவருடைய தீர்மானமான உறுதியை அவர் தம்மாலும் கூட அசைக்க முடியாது என்பதால் அவர் அக்ஷோப்யர் 

ஸர்வப்ரஹரணாயுத: -- இந்த ஆயுதம்தான் என்று இல்லாமல் கணக்கற்ற ஆயுதங்கள் உடையவர். அதுமட்டுமின்றி எதையும் எந்நேரத்தும் எவ்வாறும் ஆயுதமாக ஆக்கிக்கொள்ளும் வல்லபர். 

மீண்டும் ஸர்வப்ரஹரணாயுத: என்னும் நாமத்தைச் சொல்வதால் மிக உயர்ந்த கிரந்தமான ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவு அடைகிறது என்பதைக் காட்டுகிறது. ஓம் என்னும் பிரணவத்தைச் சொல்லுவதால் ஸர்வமங்களமும் உண்டாவதைக் குறிக்கிறது. நம: என்று சொல்லி முடிப்பதால் திருமாலைச் சரணடைந்தோம் என்பதற்கு அடையாளமாக நம்மால் செய்யலாகும் அனுஷ்டானம் நம: என்னும் கைகூப்புச் செய்கையே என்பது உணர்த்தப் படுகிறது. ஸ்ரீவைகுண்டத்திலும் நித்யசூரிகளும் கூட எப்பொழுதும் நம: நம: என்று கைகூப்பியவண்ணம் திகைத்துப் பார்த்தவண்ணம் நிற்கின்றனர் என்று சுருதியே முழங்குகிறது. 

***

ஆத்மயோநி: ஸ்வயம்ஜாதோ

ஆத்மயோநி: ஸ்வயம்ஜாதோ வைகா2ந: ஸாமகா3யன: | 
தே3வகீநந்த3ன: ஸ்ரஷ்டா க்ஷிதீ: பாபநாந: || 


ஆத்மயோநி: -- உலகின் அடிப்படைக் காரணமும் அவரே; பக்தர்களுடன் பாலில் இனிப்பு போல் கலந்து பழகும் பண்பினர் 

ஸ்வயம்ஜாத: -- உலகின் நிமித்த காரணமும் அவரே; பக்தர்களின் பிரார்த்தனைகள் இல்லாமலும் சில சமயம் அவரே அவதாரம் எடுக்கின்றார் 

வைகாந: -- அவர் அருளால் ஜீவன் முக்தி அடையும் பொழுது பவநோய் என்பது இருந்த சுவடே தெரியாமல் அகழ்ந்து அகற்றப்பட்டு விடுகிறது. 

ஸாமகாயந: -- அழுகையில் புதைந்திருந்த ஜீவர்கள் முக்தியில் ஆனந்தத்தில் முழுகிப் பாடி உகக்கும்படி ஆக்குகின்றார் 

தேவகீநந்தன: -- இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்த திவ்ய நாமங்கள் எல்லாம் இதோ இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தத் தேவகீ நந்தனனைக் குறித்துத்தான் என்பதை அறிவாயாக 

ஸ்ரஷ்டா -- உங்கள் உறவினன் போலும், நண்பன் போலும் இருக்கும் இந்தத் தேவகீநந்தனனே உலகைப் படைத்தவன். இதுவே உண்மை. 

க்ஷிதீச: -- புவியின் தலைவன் இவனே. எனவேதான் பூமியின் துயர் தீர்க்க அவதரித்துள்ளான். 

பாபநாசந: -- அவனை நினைத்தாலே போதும். பாபங்கள் பறந்தோடும். 

***

யக்ஞப்ருத் யக்ஞக்ருத் யக்ஞீ

யக்ஞப்4ருத்3 யக்ஞக்ருத்3 யக்ஞீ யக்ஞபு4க் யக்ஞஸாத4ந: | 
யக்ஞாந்தக்ருத்3 யக்ஞகு3ஹ்யமந்நமந்நாத3 ஏவ ச || 


யக்ஞப்ருத் -- யக்ஞத்தின் முழுமையையும் பேணிக் காப்பவரும், குறைகளை நிறைவு செய்து முழுமை அடைய வைப்பவரும் அவரே 

(யக்ஞம் என்பது தேவதைக்காகச் செய்யப்படும் திரவியத் தியாகம் என்று ஒரு பொருள். மேலும் ஆழ்ந்து நோக்கினால் மனிதன் தன்னிடம் இருக்கும் கண்ணிற்குத் தெரிந்த சௌகரியங்களைக் கண்ணிற்குத் தெரியாததும் எதிர்காலத்தில் மிகுந்த முயற்சியால் அடையப்பட வேண்டியதுமான இலட்சியங்களுக்காகத் தியாகம் செய்துதான் பெற வேண்டியிருக்கிறது. அந்த இலட்சியங்கள் ஆரம்பத்தில் விழுமியங்கள் என்னும் வடிவில்தான் கருத்துகளாக இருக்கின்றன. மிகச் சிறந்த இலட்சியம் கடவுளை அடைதல். ஆத்ம ஞானம் என்னும் பெருநிலை. ஆனால் அதுவோ இன்று கண்ணுக்குத் தெரிவதாக இல்லை. இன்று கண்கண்ட சுகங்களான பொருள், இன்பம் ஆகியவற்றில் நாட்டத்தை விட்டுத்தான் அந்தப் பெரும் இலட்சியத்தை நோக்கிப் பெரும் யக்ஞம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த யக்ஞத்தில் தியாகம் செய்யப்படுவதோ மூன்று விஷயங்கள். ஒன்று நான், எனது என்னும் அகங்காரத்தையும், மமகாரத்தையும் தியாகம் செய்தல். இரண்டு, நான் தான் செயல்களைச் செய்கிறேன் என்னும் கர்த்தா என்னும் எண்ணத்தை விடுதல். மூன்று பலன்களில் நாட்டத்தை விடுதல். ஆத்ம ஞானம் என்னும் இலக்கை எட்டத் தடையாய் இருப்பவை இவை. இந்த யக்ஞத்தில் அவன் அருளே ஆரம்பம் முதல் நிறைவு வரையிலும் துணை) 

யக்ஞக்ருத் -- உலகில் மக்களின் நன்மைக்காக வேண்டி இந்த யக்ஞம் என்னும் முறையை அவரே ஏற்படுத்தியுள்ளார் 

யக்ஞீ -- யக்ஞத்தின் தலைவரும் பிரபுவும் அவரே 

யக்ஞபுக் -- யக்ஞத்தின் பலன்களை அனுபவிப்பவரும் அவரே 

யக்ஞஸாதந: -- யக்ஞம் நிறைவேறுவதற்கான துணையாக இருப்பவரும் அவரே 

யக்ஞாந்தக்ருத் -- பிரம்மஞானம் அடைவதே அனைத்து யக்ஞங்களின் இறுதி இலட்சியம். அந்தப் பிரம்ம ஞானத்தை அருள்வதன் மூலம் அவரே யக்ஞாந்தக்ருத் ஆகிறார். 

யக்ஞகுஹ்யம் -- தங்களுக்குப் பிடித்த சில பலன்களுக்காகச் செய்யப்படுவது யக்ஞம் என்னும் சாதாரண கருத்துள்ளவர்களுக்குப் புரியாத கருத்து, ‘ஏன் யக்ஞத்தை மூவிதத் தியாகத்துடன் கடவுளைக் குறித்தே செய்ய வேண்டும்?’ என்பது. யக்ஞத்தின் முழுமையாகக் கடவுள் இருப்பதால் அவரைக் குறித்து, அவருக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் யக்ஞம் அனைத்து நிறைவையும் இயல்பாகவே பெற்று நிற்கும். யக்ஞத்தின் இரகசியம் கடவுளே என்பதால்தான் யக்ஞகுஹ்யம் எனப்படுகிறார். 

அந்நம் -- உயிரையும், உடலையும் வளர்ப்பது அன்னம். உயிர்களையும், உலகங்களையும் போஷிப்பவர் ஆகையால் திருமால் அந்நம் எனப்படுகிறார் 

அந்நாத: -- உணவைத் துய்ப்பவரை அந்நாதர் என்று சொல்லலாம். அனைத்துப் பலன்களையும் உள்ளுயிராய் நின்று திருமாலே துய்ப்பவர் ஆக இருப்பதால் அவரே அந்நாத: எனப்படுகிறார். 

ஏவ ச - திருமாலே உணவும், உண்போனும் இரண்டுமாக இருக்கின்றார் என்று வலியுறுத்துகிறது. 

***

Thursday, December 16, 2021

பூர்புவ: ஸ்வஸ்தருஸ்தார:

பூ4ர்பு4வ: ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ: | 
யக்ஞோ யக்ஞபதிர் யஜ்வா யக்ஞாங்கோ3 யக்ஞவாஹந: || 


பூர்புவ: ஸ்வஸ்தரு: -- பூமி, புவர்லோகம், ஸுவர்லோகம் என்னும் மூவுலகிலும் ஜீவர்கள் தம்தம் கர்மங்களினால் உந்தப்பட்டுப் பிறப்பு இறப்பு என்ற மாற்றங்களுக்கு ஆட்பட்டுத் திரிவது பறவைகள் கிளைக்குக் கிளை பறந்து திரிவதைப் போன்றது ஆகும். ஜீவர்களாகிய பறவைகள் தங்கி இளைப்பாறும் தருவாக, மரமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவே. 

தார: -- ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பவர் ஆகையால் தார: 

ஸவிதா -- அனைத்து உலகங்களையும் படைத்தவர் ஆகையால் ஸவிதா 

ப்ரபிதாமஹ: -- பிதாமஹர் ஆகிய பிரம்மனையும் படைத்தவர் ஆகையால் ப்ரபிதாமஹ: 

யக்ஞ: -- தாமே யக்ஞ ரூபமாக நின்று பக்தர்களுக்குப் பலன்களைத் தருகிறார் 

யக்ஞபதி: -- யக்ஞத்தின் ஸ்வாமி அவரே 

யஜ்வா -- அவரே யக்ஞம் இயற்றுவோரின் உள்ளே அந்தர்யாமியாக இருப்பதால் அவரே யஜமானர் (யக்ஞம் இயற்றுவோர்) என்று அறியப்படுகிறார். 

யக்ஞாங்க: -- யக்ஞத்தையே தம் சரீரமாகக் கொண்ட யக்ஞ வராஹர்; துணையாகச் செய்யப்படும் வேள்விகளும் தாமே ஆனவர். 

யக்ஞவாஹந: -- சரீரம் நல்லபடியாக இருந்தால்தான் எந்த அறமும் இயற்ற முடியும். அதுபோல் யக்ஞங்கள், ஆத்ம சாதனங்கள் எல்லாம் இயற்கை, ஆரோக்கியம், சூழ்நிலை என்று பலவிதமான காரணங்கள் நன்கு அமையப் பெற்றால்தான் நடைபெற்றுப் பலன்களை அடையலாகும். அந்தக் காரணங்கள் உட்பட அனைத்திற்கும் அவர் அருள் இருந்தால்தான் நடக்கும் என்பதால் அவரே யக்ஞத்தைச் சுமந்து செலுத்தி, நடைபெற வைத்து, பூர்த்தியாக ஆக்கிப் பலன்களையும் தருகிறார் என்பதால் அவரே யக்ஞவாஹனம் எனப்படுகிறார். 

***

ப்ரமாணம் ப்ராணநிலய:

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணத்4ருத் ப்ராணஜீவந: | 
தத்வம் தத்வவிதே3காத்மா ஜன்மம்ருத்யு ஜராதிக3: || 



ப்ரமாணம் -- அறியாமை, ஒன்றை வேறொன்றாக அறிதல், விபரீதமாக அறிதல் என்பவை அறிவதில் உண்டாகும் மூன்று குறைகள். இந்த மூன்று குறைகளும் அற்ற ஐயம் திரிபு இல்லாத அறிவை எது ஏற்படுத்துமோ அதற்குப் பிரமாணம் என்று பெயர். மயர்வற மதிநலம் தருபவர் அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவே பிரமாணம் எனப்படுகிறார் 

ப்ராணநிலய: -- பறவைகள் தம் கூட்டில் சென்று அடைவது போன்று அவரிடமே உயிர்வர்க்கங்கள், ஜீவர்கள் புகலாக அடைகின்றனர்; அன்றாடம் வாழ்க்கையில் பிராணன்களும் அவரிடமே இலயம் அடைகின்றன என்பதால் ப்ராணநிலய: 

ப்ராணத்ருத் -- பெற்ற தாயாய்த் தந்தையாய் ஜீவர்களைத் தாங்குவதால் அவர் ப்ராணத்ருத் 

ப்ராணஜீவந: -- உடலில் ஜீவர்கள் தங்கி ஜீவிதம் நடைபெறப் பிராணன்களை அவரே நோக்கி நடத்துவதால் ப்ராணஜீவந: 

தத்வம் -- அறியப்படும் பொருளின் உள்ளது உள்ளபடியான மாறா இயல்பிற்குத் தத்வம் என்று பெயர். பிரபஞ்சம் அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பவை ஆகையால் மாறாத தத்வம் பரமாத்மாவே என்பதால் அவருக்குப் பெயரே தத்வம். 

தத்வவித் -- அறியப்படும் பிரபஞ்சத்தின் உள்ளபடியான தத்வமாக அவர் இருப்பதுமட்டுமின்றி அறியும் சித் என்னும் ஜீவனின் உள் தத்வமாகவும் அவரே இருக்கிறார் 

ஏகாத்மா -- சித், அசித் என்னும் இரண்டும் அவருக்குச் சேஷமாகவும், அவருக்குச் சரீரமாகவும் இருப்பவை ஆதலால் அவர் ஒருவரே ஒரே ஆத்மாவாக ஏகாத்மா என்று அழைக்கப்படுகிறார். 

ஜன்மம்ருத்யுஜராதிக: -- அவ்வாறு அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய் அவர் இருப்பினும் ஜீவர்கள், உலகப் பொருட்கள் ஆகியவற்றின் மாற்றங்கள், குறைகள் ஆகியவை தம்மிடம் நிழலாடாத வகையில் அவற்றைக் கடந்தவராக இருக்கிறார் 

***

ஆதாரநிலயோSதாதா

ஆதா4ரநிலயோ தா4தா புஷ்பஹாஸ: ப்ரஜாக3ர: | 
ஊர்த்4வக3: ஸத்பதா2சார: ப்ராணத3: ப்ரணவ: பண: || 


ஆதாரநிலய: - சாதுக்கள் இருப்பதால்தான் உலகம் நிலைபெறுகிறது. அந்தச் சாதுக்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆதாரநிலய: என்று போற்றப்படுகிறார். 

(அ)தாதா - ஆதாரமாய் இருக்கும் நெறிகளைத் தாமே உபதேசித்தும், தாமே நடத்திக் காட்டியும் தாங்குபவராயும், தம்மை ஒருவர் தாங்குதல் அற்றவராயும் உள்ளவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தாதா என்னப்படுகிறார். 

புஷ்பஹாஸ: -- பூவிரிவது போல் புவனம் படைப்பவன்; பூவிரிந்து மணம் பரப்புவது போல் பக்தர்களின் உள்ளத்தில் மணப்பவன் 

ப்ரஜாகர: -- வயலை உழவன் விழித்திருந்து நோக்குவது போல் உயிர்களை உறங்காமல் காப்பவன் 

ஊர்த்வக: -- உலகளந்த உத்தமனாய் இருப்பதால் உறங்காது உலகம் காக்கின்றான் 

ஸத்பதாசார: -- பக்தர்களை எப்பொழுதும் முக்திக்கான சாதனங்களில் முனைப்பு கொள்ளச் செய்பவன் 

ப்ராணத: -- உலகத் துயர்களில் உழலும் ஜீவர்களைக் காப்பாற்றி உயிர் தருபவன் 

ப்ரணவ: -- ப்ரணவத்தைப் போதிப்பதன் மூலம் தனக்கும் ஜீவனுக்கும் உள்ள நித்யமான உறவை உணர்த்தித் தனக்கு என்றும் ஜீவன் சேஷமானது என்னும் ஞானத்தைத் தருபவன்; அவனும் ப்ரணவமும் ஒன்றே. 

பண: -- பக்தர்களிடம் சில சமயம் அவர்களைத் தனக்கு மேல் வைத்து அவர்களுக்கு அடங்கி நடப்பது போன்ற லீலைகளைச் செய்பவர். 

***

அநாதி: பூர்புவோ லக்ஷ்மீ:

அநாதி3: பூ4ர்பு4வோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்க3த3: | 
ஜனனோ ஜன ஜன்மாதி3: பீ4மோ பீ4மபராக்ரம: || 



அநாதி: - படைப்புக்கு அதிகாரி தெய்வங்களாக இருக்கும் பிரம்மா முதலியவர்களாலும் அடையவும், அறியவும் அரியராய் இருப்பவர் பக்தியில் திளைக்கும் எளியவர்களால் கிட்டுவதற்குச் சுலபமானவராய் இருக்கும் காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநாதி: என்று சொல்லப்படுகிறார். 

பூர்புவ: - கடைத்தேறிய ஆத்மாக்களுக்குத் தாங்கும் நிலையமாகத் தாமே இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பூர்ப்புவ: என்று போற்றப்படுகிறார். 

லக்ஷ்மீ: - தம்மை அடைந்தவர்களுக்கு அனைத்து நன்மைகளும், சுபமும், சிறப்பும் தாமேயாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லக்ஷ்மீ: என்று கருதப்படுகிறார். 

ஸுவீர: - தம்மைச் சரணடைந்தோருக்கு உண்டாகும் தடைகளை நீக்கி நன்மையை அடைவிக்கும் திறலாகத் தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவீர; என்று கொண்டாடப்படுகிறார். 

ருசிராங்கத: - தமது திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தமது பக்தர்கள் கண்டு அனுபவித்துத் தொழும்படியாக அருள்செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ருசிராங்கத: என்று போற்றப்படுகிறார். 

ஜனன: - பக்தியே இல்லாதவர்களும் தன்னை உணர்ந்து பக்தி செய்யும்படியாக அவர்களை ஆக்கும் அருள் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனன: என்று கொண்டாடப்படுகிறார். 

ஜனஜன்மாதி: - பக்தியில் பிறக்கும் புதிய பிறவியைத் தருவதோடல்லாமல் அந்தப் பக்திமயமான பிறப்புக்குப் பலனாகவும் தாமே இருந்து அருள்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனஜன்மாதி: என்று போற்றப்படுகிறார். 

பீம: - உயர் நிலையும், உய்வும் அடைய அக்கறை கொள்ளாமல், அவன் அருள் செய்வதையும் விலக்கியபடித் தங்கள் உணர்ச்சிகளின்படிச் செல்வோருக்குப் பயமே உருவாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீம: என்று சொல்லப்படுகிறார். 

பீமபராக்ரம: - தம்முடைய பராக்ரமத்தால் தீயோர்களுக்கு அச்சம் விளைவிக்கும் லீலைகளை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீமபராக்ரம: என்று சொல்லப்படுகிறார். 

***

அநந்தரூபோSனந்தஸ்ரீ:

அநந்தரூபோSனந்தஸ்ரீர் ஜிதமன்யுர் ப4யாபஹ: | 
சதுரச்ரோ க3பீ4ராத்மா விதி3சோ வ்யாதி3சோ தி3: || 


அநந்தரூப: - தமது பக்தர்கள் எந்த ரூபத்தில் தம்மைக் காண வேட்கிறார்களோ அவ்வித ரூபத்தில் எல்லாம் தாம் தோன்றி அவர்களுக்கு அருள்பாலிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தரூப: என்று கொண்டடப்படுகிறார். 

அநந்தஸ்ரீ: - தமது அடியார்களுக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் அளவில்லாது வழங்கும் தன்மையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஸ்ரீ: என்று போற்றப் படுகிறார். 

ஜிதமன்யு: - தீயவர்களிடத்தும் சினம் காவாமல் அவர்களிடம் உள்ள தீய குணத்தை அகற்றி அவர்களும் நல்வழி அடைந்து உய்யும் வழிவகைகளைச் செய்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜிதமன்யு: என்று அழைக்கப் படுகிறார். 

பயாபஹ: - தாம் எப்பொழுதும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுடன் ஜீவர்களுக்கு ஏற்படுவதான தாங்கள் ஒரு நாதனற்ற அநாதைகளோ என்ற பயத்தையும் நீக்கிக் காப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயாபஹ: என்று போற்றப்படுகிறார். 

சதுரச்ர: - என்றும் எதற்கும் உசிதமானவற்றையே செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சதுரச்ர; என்று சொல்லப்படுகிறார். 

கபீராத்மா - இவ்வளவினர் என்று யாவராலும் அறியக் கூடாத ஸ்வரூபம் உள்ளவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபீராத்மா என்று போற்றப் படுகிறார். 

விதிச: - எவ்வளவு உயர்ந்தோராயினும் தம்மை எத்தனை காலம் எவ்வளவு முயன்று துதித்தாலும் அந்தத் துதிக்கெல்லாம் எட்டாத சிறப்புகளும் மகிமையும் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விதிச: என்று போற்றப்படுகிறார். 

வ்யாதிச: - அவரவர்க்கு உரிய சிறப்புகளை அளித்து, உரிய அதிகாரங்களைத் தந்து, அவரவர்க்கு உரிய பலன்களையும் நியதியாகப் பெற நியமிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வ்யாதிச: என்று சொல்லப்படுகிறார். 

திச: - அவரவர்க்கு உரிய நிலையிலும், தகுதியிலும் நிறுத்தி உயிர்களைப் பூரணமாக மலரச் செய்கிறார் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் திச: என்று சொல்லப்படுகிறார். 

***

உத்தாரணோ துஷ்க்ருதிஹா

உத்தாரணோ து3ஷ்க்ருதிஹா புண்யோ து3:ஸ்வப்நநாந: | 
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தி2த: || 


உத்தாரண: - ஸம்ஸாரச் சுழலிலிருந்து காப்பாற்றி மேலெடுத்து மோக்ஷம் தந்து நித்ய நிலையைத் தருகிறார் என்பதால் உத்தாரண: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் போற்றப்படுகிறார். 

துஷ்க்ருதிஹா - நன்மையைக் காப்பது மட்டுமின்றித் தீமையைச் சிறிதும் கருணையின்றித் தவறாமல் அழிக்கவும் செய்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் துஷ்க்ருதிஹா என்று சொலப்படுகிறார். 

புண்ய: - தம்மைச் சரணடைந்தோருக்குத் தாமே மிகச்சிறந்த புண்ணியமாகவும் இருப்பவர் ஆதலால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்ய: என்று போற்றப்படுகிறார். 

(நன்மைசேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி, எண் இல் மூர்த்தியாய், நாக மூர்த்தி சயனமாய் -- திருச்சந்தவிருத்தம்)

து:ஸ்வப்நநாசந: - ஸ்ரீகஜேந்திர மோக்ஷத்தில் கூறியவாறு காப்பாற்றப்பட்ட சாதுக்களையும், காப்பாற்றிய தம்மையும் நினைப்பவர்களை நலியும் கெட்ட கனவுகளை நாசம் செய்து விடுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் து:ஸ்வப்நநாசநர் என்று தொழப்படுகிறார். 

வீரஹா - ஜீவர்களை முக்தி பெற மாட்டாமல் தடுக்கும் பல வழிகளையும் தடுத்து நற்கதி அருள்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வீரஹா என்று போற்றப்படுகிறார். 

ரக்ஷண: - உடலால், உள்ளத்தால், உயிர்க்கு உற்ற நல் துணையால் ஆன்ற காப்புகள் அனைத்தும் சரணடைந்த ஜீவர்களுக்குச் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரக்ஷண: என்று போற்றப்படுகிறார். 

ஸந்த: - காப்பதோடன்றி அவர்களை ஆன்மிக உணர்விலும், அதனடியாகப் பகவானாகிய தம்மிடத்தில் ஊன்றிய பக்தியிலும் எக்கணமும் நன்கு வளரும்படி வளர்ப்பதால் அவர்களை நன்கு இருப்பவர்களாக ஆக்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸந்த: என்று கொண்டாடப்படுகிறார். 

ஜீவந: - தம்மைச் சரணடைந்தாரின் யோக க்ஷேமங்களைத் தாம் வகிப்பதோடன்றித் தம்மால் ஒறுக்கப்பட்ட தீயோரும் நல்வழியில் வாழும்படிச் செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜீவந: என்று சொல்லப்படுகிறார். 

பர்யவஸ்தித: - அன்பினால் ஜீவராசிகளைச் சூழ்ந்தும், உள்நின்றும் காத்துத் திருத்தி நல்வழிப்படுத்தித் தம்மிடம் வந்து சேரும்படிச் செய்யும் தயாமூர்த்தியாக எப்பொழுதும் நிலைநிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்யவஸ்தித: என்று தொழப்படுகிறார். 

***

அக்ரூரோ பேசலோ தக்ஷோ

அக்ரூர: பேலோ த3க்ஷோ த3க்ஷிண: க்ஷமிணாம் வர: | 
வித்3வத்தமோ வீதப4ய: புண்யச்ரவண கீர்த்தன: || 


அக்ரூர: - தாம் பக்தர்களைக் காக்கும் போதும், சாதுக்களை நலியும் தீய சக்திகளை அழிக்கும் போதும் ஒரே படித்தாக அன்பே அன்றிக் கொடிய தன்மை சிறிதும் இல்லாதவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரூரர் எனப்படுகிறார். 

பேசல: - எவ்வளவு விரைவாகச் செயல் புரிந்தாலும், என்ன பேசினாலும், எந்நிலையிலும் பூரண அழகு மிளிரும்படி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பேசல: என்று சொல்லப்படுகிறார். 

தக்ஷ: - தம்முடைய பூரண அமைதியும், நிறைந்த அழகும் சிறிதும் நலுங்காமல் இருந்தாலும் அவருடைய செயல்கள் மிக விரைவாகவும், மிகத் துல்லியமாகவும், தவறாமலும் இருக்கும்படியான காரியத் திறன் அவரிடம் நிறைந்து காணப் பெறுவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தக்ஷ: என்று போற்றப்படுகிறார். 

தக்ஷிண: - காரியத் திறமையும், செயல் விரைவும் பூரணமாகத் துலங்குகிறவர் என்றாலும் தாம் தம்மைச் சரணடைந்த ஜீவர்களுக்குத் தமக்குத் திருப்தியாகப் போதிய அளவு செய்யவில்லையே என்ற ஆற்றாமையைக் கொண்டவர் என்பதால் அடியவர்களின் மிக்க உள்ள நெகிழ்வுக்குக் காரணம் ஆகிறார் என்பதால் அவர் தக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார். 

க்ஷமிணாம்வர: - பொறுமையில் சிறந்த பூமியையும் தாம் தாங்குபவர் என்பதால் பொறுமையினும் பொறுமை மிக்கவர் எனவே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ஷமிணாம்வர: என்று சொல்லப்படுகிறார். 

வித்வத்தம: - அறிவில் எல்லாம் மிக்க அறிவாகவும், அறிபவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வித்வத்தம: என்று போற்றப்படுகிறார். 

வீதபய: - அறிவும் அறிவோனும் அவரே ஆக இருப்பதால் அவருக்கு அந்நியமாக ஒன்று இல்லாமையால் பயம் என்ற ஒன்று இல்லாதவர் என்பதாலும் தம்மைப் புகலடைந்தோருக்குத் தம்மைப் பற்றிய நினைவாலேயே பயத்தை இல்லாமல் செய்பவராகவும் இருப்பதால் வீதபய:

புண்யச்ரவணகீர்த்தந: - தம்மைப் பற்றிய சரித்திரங்களையும், புகழ்த்துதிகளையும் கேட்பதனாலேயே ஜீவர்களின் அசுபங்கள் நீங்கவும், அவ்வாறு கேட்பதுவே மிகவும் பெரிய புண்ணியமாக அமைந்தவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்யச்ரவணகீர்த்தந: என்று போற்றப்படுகிறார். 

***



அரௌத்ர: குண்டலீ சக்ரீ

அரௌத்3ர: குண்ட3லீ சக்ரீ விக்ரம்யூர்ஜித சாஸந: | 
ப்3தா3திக3: ப்3த3ஸஹ: சிசிர: ர்வரீகர: || 


அரௌத்ர: - ஜீவர்களின் பாபங்களை நோக்கில் மிகக் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்பு இருப்பினும் தமது குற்றமற்ற கல்யாண குணங்களின் மிகுதியாலும், திருமகள் என்றும் தம்மை விட்டுப் பிரியாமல் நின்று ஏற்படுத்தும் தயையாலும் கொடும் செய்கையோ, விருப்போ, குரோதமோ இன்றி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அரௌத்ர: என்று போற்றப்படுகிறார். 

குண்டலீ - ஆதிசேஷரூபியானவர் ஆதலாலும், ஸாங்க்யம், யோகம் என்னும் இரண்டையும் தம் காதுகளில் அழகிய குண்டலங்களாகத் தாம் அணிபவர் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குண்டலீ என்று அழைக்கப்படுகிறார். 

சக்ரீ - ‘மிகவும் அசைவதும், மிகுந்த வேகமுடன் நகர்வதுமான அந்தக்கரணமாகிய மனம் என்னும் தத்துவத்தைச் சக்ரமாகக் கையில் கொண்டவர்’ என்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் சொல்வதற்கேற்ப, மனம் என்பதையே தம் கையில் ஆழியாகத் தரித்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சக்ரீ என்று தொழப்படுகிறார். 

விக்ரமீ - தாளால் உலகளந்த தாயோன் என்னும் சிறப்பு தமக்கே வாய்த்த பிரான் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விக்ரமீ என்று கொண்டாடப்படுகிறார். 

ஊர்ஜிதசாஸந: - ஊழிதோறூழி ஒன்றும் பிறழாமல், ஒருவராலும் கடக்கலாகாக் கட்டளைகள் தந்த பிரான் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஊர்ஜிதசாஸந: என்று போற்றப்படுகிறார். 

சப்தாதிக: - சப்தம் என்னும் சாத்திரங்களால் எல்லையிட்டு வரையறை செய்து கூறிவிட முடியாதவர், எவ்வளவு விவரித்தாலும் அதனினும் மிக்குத் திகழும் இயல்பினர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தாதிகர் எனப்படுகிறார். 

சப்தஸஹ: - யானை முதலான தெளிவான பேச்சு இல்லாத உயிரினங்களின் தீனக் குரலையும் பொறுப்புடன் தாம் தாங்கித் துயர் துடைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தஸஹர் எனப்படுகிறார். 

சிசிர: - ஜீவர்களின் தாபக்குரல் எழுந்ததுமே விரைவு மயமாக ஆகிவிடுபவர், யானையின் அழுகுரலுக்கு விரைவாகி வந்து தாபம் போக்கிக் குளிரச் செய்தது போல் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சிசிர: என்று போற்றப்படுகிறார். 

சர்வரீகர: - ஸம்ஸாரமாகிய கொடிய மடுவில் சிக்கி அலறும் ஜீவனைக் காக்க வேண்டி அனைத்துக் காப்புகளையும் அனைத்து விதத்திலும் விரைவில் செய்பவர் என்பதாலும், உலக நாட்டம் கொண்டவர்க்கு இரவாகத் தெரியும் ஆன்மிகப் பாதையைத் தம் அடி அணைந்த பக்தர்களுக்குப் பகலாக ஆக்குகிறார் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சர்வரீகர: என்று தொழப்படுகிறார். 

***

ஸநாத்ஸநாதன தம:

ஸநாத்ஸநாதனதம: கபில: கபிரவ்யய: | 
ஸ்வஸ்தித3: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபு4க் ஸ்வஸ்தித3க்ஷிண: || 


ஸநாத் - எப்பொழுதும் புதுமையாய் இருக்கும் ஒன்று, கணம் தொறும் அத்புதமாய் இருக்கும் ஒன்று அடுத்த கணம் முடிவடைந்து போனது என்றிருப்பது போல் இல்லாமல் தம்மைத் துய்க்கும் ஒவ்வொரு கணமும் முடிவற்ற நெடுங்காலமாய் நீளும் தகைமையர் ஆகையாலே, அநந்த கோடி ஜீவர்களுக்கும் அவரவர் துய்ப்பில் அவ்வண்ணமே தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸநாத் என்று போற்றப்படுகிறார். 

ஸநாதநதம: - எப்பொழுதும் புதுமையாய் இருப்பதோடன்றி அனைத்தினும் பழையதாகவும் இருப்பது மட்டுமல்லாமல், பழமையானவற்றிலெல்லாம் சிறந்ததாகவும் இருப்பதனால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸநாதநதம: என்று தொழப்படுகிறார். 

கபில: - மின்னல் கொடிகளால் சூழப்பட்ட காருண்ட மேகம் போல் நித்ய விபூதியில் நித்ய சூரிகள் சூழத் தாம் இருப்பவர் ஆகையாலும், தம்மை விட்டு அகலகில்லேன் இறையும் என்று பிரிவில்லாத தத்துவமாக விளங்கும் ஸ்ரீயின் ஒளியால் தாம் சூழப்பட்டிருப்பவர் ஆகையாலும் கபில: என்று ஸ்ரீமஹாவிஷ்ணு போற்றப்படுகிறார். 

கபிரவ்யய: (கபிரப்யய:) - மாறுதல் அற்ற ஒளி மிகுந்த நித்ய சுகத்தைத் தம்மிடத்தில் முழுமையாக அடங்கத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபிரவ்யய: என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்தித: - அடியார்களுக்கு அசுபம் என்பதை நீக்கி மங்களத்தைத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்தித: என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வஸ்திக்ருத் - அசுபம் நீங்கி மங்களம் விளைவது என்பதே பகவத் குணங்களில் ஒருவர் ஈடுபடுவதன் காரணமாக ஆகும் என்பதால், ஸர்வமங்களமாகிய தமது குணங்களில் ஈடுபாட்டையும் அவரே அருள்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திக்ருத் என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்தி - தாமே ஜீவனுக்கான சுபமாக இருப்பவர் ஆதலால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்தி என்று அழைக்கப்படுகிறார். 

ஸ்வஸ்திபுக் - ஜீவர்களாகிய நமக்கு என்றும் சுபமானவற்றையும், மங்களமானவற்றையும் அஞ்ஞானத்தின் காரணத்தினால் சுபாவமாக அனுபவிக்கத் தெரியாது ஆகையாலே சுபம், மங்களம், நன்மை என்பதை எப்படி விரும்ப வேண்டும் என்று தம்முடைய பேரருளால் ஜீவனுக்குள் இருந்து கற்பிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திபுக் என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்திதக்ஷிண: - ஜீவர்களுக்கு உயர்ந்த மங்களம் ஆவது தம்மை அடைந்து தம் அடியிணையில் செய்யும் தொண்டு எனவே அதற்கு வேண்டிய அனைத்து நன்மைகளையும் தாமே தம்மைப் புகல் அடைந்தாருக்குத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திதக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார். 

***

அநந்த ஹுதபுக் போக்தா

அநந்த ஹுதபு4க்3 போ4க்தா ஸுக2தோ3 நைகஜோSக்3ரஜ: | 
அநிர்விண்ண: ஸதா3மர்ஷீ லோகாதி4ஷ்டா2நம் அத்3பு4த: || 


அநந்தஹுதபுக்போக்தா - காலத்தாலும், இடத்தாலும், பொருள் தன்மையாலும் அளவுபடுத்தப்படாதவர், தம்முள் அனைத்துப் பொருள்களும் பிரபஞ்சம் முழுவதும் வேள்வியாக நடைபெறத் தக்க வகையில் அனைத்து முயற்சிகளையும் தாம் ஏற்று, அனைத்துப் பலன்களையும் தாமே தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஹுதபுக்போக்தா என்று போற்றப்படுகிறார். 

ஸுகத: - உண்மையான உயர்ந்த மோக்ஷ சுகத்தைத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சுகத: என்று போற்றப்படுகிறார். 

நைகஜ: - பக்தர்களுக்கு முக்தியை விளைவிக்கப் பல வழிகளிலும் தாம் தோன்றி அருள் பாலிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நைகஜ: என்று கொண்டாடப்படுகிறார். 

அக்ரஜ: - முக்தர்களுக்குப் பரமானந்தத்தை விளைவிப்பவராய் என்றும் முன்னின்று பிரகாசிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரஜ: என்று சொல்லப்படுகிறார். 

அநிர்விண்ண: - தம்மை அண்டிய ஜீவனைத் தாம் அந்த ஜீவன் அண்டுவதற்கு வெகுகாலம் முன்னம் இருந்தே அதைக் கரையேற்றுவதற்காகப் பெரும் பிரயத்தனங்கள் எடுத்து, எப்பொழுது ஜீவன் தாம் செய்யும் ரக்ஷணத்தை விலக்காமலும் வெறுக்காமலும் மனம் ஒப்பி இசையுமோ என்று காலம் பார்த்து இருந்தவர் ஆதலால், ஜீவன் தம்மை அண்டியவுடன் மிக விரைவாக அதைக் கரையேற்றிவிட்டுச் சிறிதும் பின்னர் தாம் கவலையின்றி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநிர்விண்ண: என்று கொண்டாடப் படுகிறார். 

ஸதாமர்ஷீ - தாம் அருள் செய்து உய்யக் கொண்ட பக்தர்கள் தாங்கள் செய்யும் கைங்கரியங்களில் நேரும் தவறுகளை அன்புடன் சகித்துக் கொள்பவர் ஆகையாலே ஸதாமர்ஷீ என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சொல்லப் படுகிறார். 

லோகாதிஷ்டாநம் - உலகின் தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகிய அனைத்திற்கும் தாம் ஆதாரமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லோகாதிஷ்டாநம் என்று போற்றப் படுகிறார். 

அத்புத: - என்றும் இமையா நாட்டத்து நித்ய சூரிகள் கால அவதியின்றி நோக்கிக் களித்தாலும் அவர்களுக்கும் கணம் தொறும் புதுமையாக இருப்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அத்புதர் எனப்படுகிறார். 

***

விஹாயஸகதிர் ஜ்யோதி:

விஹாயஸக3திர் ஜ்யோதி: ஸுருசி: ஹுதபு4க் விபு4: | 
ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன:|| 


விஹாயஸகதி: - ஆன்மிக வழியில் நின்று முக்தி அடையும் வேட்கையில் நிலை நின்றார்கட்கு பக்தி யோகம் கைகூடுங்கால் இதய ஆகாசம்தன்னில் நூறு நாடிகளுக்கு மேல் நூற்றியோராவது நாடியாகப் பரமபதம் செல்லும் கதியைத் தெரியவைத்து, அவ்வழியே சுகமே நடத்திச் செல்லும் சக்தியாகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விஹாயஸகதி: என்று தொழப்படுகிறார். 

ஜ்யோதி: - பக்தர்கள் பரமபதம் போகும் அர்ச்சிராதி மார்கத்தில் முதல் நிலையான ஒளியாக இருப்பவர் என்று ஸ்ரீபராசர பட்டர் இந்தத் திருநாமத்திற்கு அர்த்தம் தருகிறார்.

( அதேபோல் ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரரும் ஒளி என்று பொருள்படும்படியாகச் சொன்னால் ஒன்றும் குறையில்லை. ஆனால் அவ்வாறு செய்யாமல் இந்தத் திருநாமத்திற்கு ஸ்ரீமந் நாராயணன் என்றே வியக்தமாக அர்த்தம் செய்கிறார் ஸ்ரீபகவத்பாதர். அதற்கு அவர் சான்று காட்டும் வேத வாக்கியம் ‘நாராயண: பரோ ஜ்யோதி:’ என்னும் உபநிஷத் வாக்கியம். அதாவது பகவந் நாமங்களிலேயே வேறு எந்த தெய்வத்திற்கும் அர்த்தம் வரும்படியாக வியாக்கியானம் செய்ய முடியாத திருநாமம் ஸ்ரீமந் நாராயண நாமம். நாராயண என்றால் பொதுப்படையான கடவுள் என்ற பொருள் தராமல் குறிப்பாக ’அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கை உறைமார்பனான’ திருமால் ஒருவரை மட்டுமே சிறப்புப் பெயராகக் குறிப்பது நாராயண நாமம். இங்கு வெறுமனே ஜ்யோதி: என்று பொதுவான நாமம் இருக்க அதற்கே ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் செய்யும் விளக்கம் நாராயண நாமம் எனில், அவருடைய சகுண பிரம்ம நிஷ்டை எவ்வளவு ஏகாக்ரதை உடையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.) 

ஸுருசி: - அர்ச்சிராதிகதியில் இரண்டாவது நிலையாகப் பகலன்ன பேரொளியாக நடத்துபவர் ஆகையாலே ஸுருசி: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கொண்டாடப் படுகிறார். 

ஹுதபுக்விபு: - அனைத்திடத்திலும் நிறைந்து உயிர்கள் அனைத்தும் தொடர் யக்ஞங்களில் பெய்யும் அனைத்து ஹோமத் திரவியங்களையும் உட்கொள்ளும் தெய்வமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஹுதபுக்விபு: என்று சொல்லப்படுகிறார். 

ரவி: - வெப்பமாய் நின்று அனைத்தையும் உட்கொள்ளுவதோடு நில்லாமல் ஓங்கிய வான் கதிராய் நின்று அனைத்தையும் பகலாக்குவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரவி: என்று தொழப்படுகிறார். 

விரோசன: - ஸம்வத்ஸர ரூபமான, ஆண்டின் சுழற்சி உருவாகிய கதிரொளியாய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விரோசன; என்று போற்றப்படுகிறார். 

ஸூர்ய: - எல்லாவற்றையும் உண்டாக்குவதாலும், அருஞ்செல்வத்தை உலகமெல்லாம் தருவதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸூர்ய: என்று போற்றப்படுகிறார். 

ஸவிதா - ஞாயிறால் மழைநலத்தையும் அதனால் உயிர் தழைப்பதையும் செய்யும் அருள் சக்தியாக இருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸவிதா என்று அழைக்கப் படுகிறார். 

ரவிலோசந: - கதிரவனைக் கண்களாக உடையவர் என்ற காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரவிலோசந; என்று கொண்டாடப்படுகிறார்.

(ஸ்ரீபராசர பட்டரின் பாஷ்யத்தில் ஒரு செய்தி - சூரியக் கிரணங்கள் பிரவேசிப்பதால்தான் சந்திரன் முதலியவற்றின் பிரகாசம் ஏற்படுகிறது.) 

***

ஸத்த்வவாந் ஸாத்த்விக:

ஸத்த்வவான் ஸாத்த்விக: ஸத்ய: ஸத்யத4ர்மபராயண: | 
அபி4ப்ராய: ப்ரியார்ஹோSர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்த4ன: || 


ஸத்த்வவான் - ஜீவர்கள் முக்தி பெறுவதற்கு முதலில் முக்கியமானது அவற்றினுள்ளே ஸத்வ குணம் தலை தூக்க வேண்டும் ஆகையால், அந்த ஸத்வ குணத்தை உயிர்களுக்குத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்த்வவான் என்று கொண்டாடப்படுகிறார். 

ஸாத்த்விக: - ஸத்வ குணத்தால் ஞானம், ஆத்மகுணங்கள், தேஜஸ், வீர்யம் ஆகிய தகுதிகள் ஏற்பட்டு அதனால் மோக்ஷ சிந்தையானது ஏற்படுவதை ஸாத்த்விகம் என்ற வார்த்தை குறிப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸாத்த்விகர் என்று சொல்லப் படுகிறார். ( மோக்ஷம் இச்சேத் ஜநார்தனாத் ) 

ஸத்ய: - ஸாத்விக சாத்திரங்களால் சொல்லப்படும் மகிமை உடையவர் என்பதாலும், ஸத்யம் என்பதற்கு ஆதாரம் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்யர் எனப்படுகிறார். 

ஸத்யதர்மபராயண: - ஸத்யத்தையே தர்மமாக உடைய நிவ்ருத்தி தர்மத்தைப் பெரிதும் உகந்து போற்றுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்யதர்மபராயணர் என்று கொண்டாடப் படுகிறார். 

அபிப்ராய: - ஸத்வ குணம் ஓங்குவதால் ஸாத்விக தர்மத்தைக் கைக்கொண்டவர்கள் அனைவரும் மாற்றுக் கருத்தே இன்றி மோக்ஷத்திற்கான ஒரே புகலாகக் கொள்ளும் அபிப்ராய வடிவாகத் திகழ்பவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஆனதினால் அவர் அபிப்ராயர் எனப்படுகிறார். 

( ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்யச புனப்புன: |
இதம் ஏகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா || 

அனைத்து சாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் நன்கு ஆலோசித்து விசாரித்துப் பார்த்ததில் இந்த ஒன்றே மிக நிச்சயமாகவும் தெளிவாகவும் தெரிய வருகின்றது. - நாராயணனையே எப்பொழுதும் தியானிக்க வேண்டும். 
(வியாசர்) 

நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்!
(பரிபாடல்) ) 

ப்ரியார்ஹ: - பிரேமையுடன் வந்தடையும் ஞானிக்கு வந்தடையத்தக்க ஒரே புகலிடமாக இருப்பவர் ஆகையாலே ப்ரியார்ஹ: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கொண்டாடப்படுகிறார். 

அர்ஹ: - தமக்கான காப்பு, தாம் மோக்ஷம் அடைவதற்கான நெறி, தாம் அடையும் உயர்ந்த பேறு என்று அனைத்து விதத்திலும் பிறிதொன்றின்பால் செல்லாத சிந்தையால் பக்தியுடன் விரும்பப்படத்தக்க ஒரே தத்துவமாக இருப்பவர் ஆகையாலே அர்ஹ:. 

ப்ரியக்ருத் - ஞானிக்குத் தாம் பிரியமானவர் என்றும், ஞானி தமக்குப் பிரியமானவன் என்றும் தாமே சொல்லியிருப்பதற்கேற்பத் தம்மை நாடிப் பக்தி செய்வோர்களைப் பிறிதொரு பலன் கருதாது தம்மையே வேண்டும்படியான தமக்குப் பிரியமானவர்களாய் ஆக்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ரியக்ருத் எனப்படுகிறார். 

ப்ரீதிவர்தன: - உலக விஷயங்களில் விரக்தி முழுமையாகவும், ஜீவனின் இயல்பான ஞானம் நன்கு மலர்வதால் தனக்கு, தான் உணராத காலம் தொட்டே, நன்மையைச் செய்து வருபவர் தன்னுடைய உயிரான ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதை உணர உணர மேன்மேலும் ப்ரீதி அளவிறந்து வளர்ந்து கொண்டே போகும்படி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ரீதிவர்தன: என்று போற்றப் படுகிறார். 

***

தனுர்தரோ தனுர்வேதோ

த4னுர்த4ரோ த4னுர்வேதோ3 த3ண்டோ3 த3மயிதா த3ம: | 
அபராஜித: ஸர்வஸஹோ நியந்தா நியமோ யம: || 


தனுர்தர: - புகல் நாடும் உயிர்களுக்குப் பகையானவற்றின் மீது தாமே சினந்து பொருகின்ற வில்லைத் தரிப்பவராக என்றும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தனுர்தரர் என்று போற்றப்படுகிறார். 

தனுர்வேத: - உயிர்களை நலியும் பகை கடிந்து காக்க ஏந்திய வில்லே அந்த வில்லின் வித்தை வடிவாக இருக்கும்படியானவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தநுர்வேதர் என்று போற்றப் படுகிறார். 

தண்ட: - உயிர்கள் நல்வழியில் உய்வு அடைய ஏற்றவகையில் நெறிப்படுத்தி ஆளும் அரசனது செங்கோல், ஆட்சியின் நல்லாணையையும், நன்னெறியில் செலுத்தும் ஆற்றலையும் உருவகப்படுத்தி நிற்பதால் அந்தச் செங்கோல் ஆகிய தண்டமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவாகையாலே அவர் தண்டர் என்று அறியப் படுகிறார். 

தமயிதா - நன்னெறியில் உய்க்கும் அரச தத்துவமாக மட்டுமின்றி, தீநெறியில் செல்வதைத் தடுக்கும் அடக்கும் திறல் வடிவாகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தமயிதா என்று சொல்லப்படுகிறார். 

(அ)தம: - உய்த்தும் உறுத்தும் செய்த அடங்கிய தகைமையாகவும் அவரே இருப்பதாலும், தாம் எதனாலும் அடக்க இயலாத சுதந்திரம் கொண்டவர் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தமர் என்றும் அதமர் என்றும் சொல்லப்படுகிறார்.

[கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்/ ஏரார்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்} 

அபராஜித: - எந்த ஒன்றும் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையானும், உள்ளிலும், புறத்திலும் எதை மீற முடியாதோ, அது ஆக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அபராஜிதர் என்று அழைக்கப்படுகிறார். 

ஸர்வஸஹ: - மிக்குயர்ந்தவர் முதல் மிகவும் கீழ்நிலையுற்றவர்வரை அனைவரும் தம்மை ஏற்றித் தொழுது நற்கதி அடையும்வண்ணம் அனைவரையும், அனைத்து தெய்வங்களையும் தாங்கி நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வஸஹர் என்று சொல்லப்படுகிறார். 

நியந்தா - அனைவரையும் அவரவர் நிலை, பக்குவம், நிச்சயம் என்ற அடிப்படையில் இயக்கி, முடிவில் தம்மை அடைவதாகிய பெருநிலையை நோக்கி முன்னேறுமாறு நடத்துபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நியந்தா என்று அழைக்கப்படுகிறார். 

நியம: - ஒவ்வொரு உயிரும் வேண்டும் பலன்களை அவரவர் தெய்வங்களின் மூலமாக அவர்களுக்கு முறையாகத் தருபவரும், தம்மையே புகலடைந்தவருக்கு எவ்வித நியமமுமின்றி மிக்குயர்ந்த பலனைத் தருபவருமாக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நியம: (அநியம:) என்று சொல்லப்படுகிறார். 

யம: - வாழ்க்கை, மரணம், தோற்றம், கேடு, படைப்பு, ஒடுக்கம் என்று அனைத்து காரியங்களுக்குமான அதிகாரி தேவதைகளை உண்டாக்கி, வழிநடத்துபவர் ஆகையாலே மரணமற்றவர் என்று அயம: என்றும், மரணத்தையும் நடத்துபவர் அவர் ஆகையால் யம: என்றும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அழைக்கப்படுகிறார். 

***

பாரப்ருத் கதிதோ யோகீ

பா4ரப்4ருத் கதி2தோ யோகீ3 யோகீ3: ஸர்வகாமத3: | 
ச்ரம: ச்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: || 


பாரப்ருத் - ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் கட்டுண்ட நிலையில் அவர்கள் அறியாமையால் விளைந்த தம் கர்மத் தளைகளினின்றும் விடுபட்டுத் தாங்கள் அடைய வேண்டிய பெரும் பேறான பரமாத்மாவாகிய தம்மை அடைவதாகிற மகத்தான பொறுப்பை யார் கையிலும் ஒப்படைத்துவிடாமல் தாம் ஒருவரே முழுவதும் சுமப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பாரப்ருத் என்று போற்றப்படுகிறார். 

கதித: - போற்றப்பட்டிருப்பவர் 

( வேதங்கள் அனைத்தாலும் ஒரே பரம்பொருள் தத்வம் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறவர், வேதப் பொருளை விளக்கும் அனைத்து இதிகாச புராண, துணை நூல்கள் அனைத்தாலும் உயர்வற உயர்ந்த பரம்பொருள் என்று மூதலித்துக் காட்டிக் கொண்டாடப்படுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கதிதர் என்று சொல்லப்படுகிறார்.

குறிப்பு: - இந்த நாமத்திற்கு வெறுமனே ’புகழப்பட்டவர்’ என்று அர்த்தம் சொல்லிவிட்டுப் போய்விடலாம். குறிப்பாக உயர்வற உயர்ந்த ஒரே பரம்பொருள் என்றெல்லாம் ஆதாரங்கள் காட்டிப் பரக்க எழுத வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் பராசர பட்டர் எழுதினாலாவது சொல்லலாம் அவர் ஸ்ரீவைஷ்ணவர் ஆகையாலே எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்குத் தம் விருப்பக் கடவுளைப் புகழ்கிறார் என்று. ஆனால் பராசர பட்டர் எழுதியதை விட இரண்டு மடங்கு நீளமாக இந்தத் திருநாமத்திற்கு எழுதியிருப்பவர் பகவத்பாதரான ஸ்ரீஆதிசங்கரர்.

அவர் தமது அத்வைத ரீதியாக ஏதாவது அர்த்தம் எழுதினால் யாரும் கேட்பாரில்லை. அது இயல்பாகவும் இருக்கும். அல்லது பிற்காலத்தில் அவரைப் பற்றிப் பரப்புரைகள் எழுந்தது போல் அவர் ஆறு மதங்களை நாட்டியவர் என்றால் இந்தத் திருநாமத்திற்கு அர்த்தமாக ஆறு மதங்களிலும் அவரவர் கடவுளாகக் கொண்டாடப் படுபவர் என்று சொல்லியிருந்தாலும் யாரும் கேட்க முடியாது.

ஆனால் அவ்வாறெல்லாம் ஸ்ரீஆதிசங்கரர் எழுதாமல் வேத வேதாந்தங்களாலும், இதிகாச புராணாதிகளாலும் புகல் என்று முடிவு கட்டப்பட்ட உயர்வற உயர்ந்த ஒரே பரம்பொருள், பரதெய்வம் என்பது ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்று இந்த நாமத்தில் திட்டவட்டமாக எழுதுகிறார். காரணம் அவர் மட்டுமன்று, அவர் நாளில் வேத வேதாந்தங்களையும், இதிகாச புராணங்களையும் சான்று நூல்களாகக் கொண்ட வைதிகர்கள் யாவருமே உயர்ந்த ஈசுவர தத்வம் என்றால் அது ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்னும் கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்பதையே இஃது காட்டுகிறது.

இந்த நாமத்தில் மட்டுமன்று. பல நாமங்களிலும் பராசர பட்டரே சாதாரணமாகப் பொதுப் பொருள் எழுதும் இடத்தில் எல்லாம் கூட ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்கள் மிக விரிவாக ஆணித்தரமாக ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஒப்புயர்வற்ற உயர்வை எழுத்தில் பதிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் வந்தோரால் ஓரொரு கால அவசியத்தை முன்னிட்டு நிலைப்பாடுகள் மாற்றம் கண்டிருக்கலாம். அவற்றைத் தவறு என்று சொல்வதற்கில்லை. பல வேறு மக்களின் ஈடுபாடுகளை உள்வாங்கச் செய்த ஏற்பாடாகவும் இருக்கலாம். எல்லாம் நன்மைக்கே. ஆயினும் உண்மை நிலை ஆதிசங்கரரின் காலத்திய அவருடைய கொள்கையின் நிலைப்பாடு என்ன என்பதையும் நாம் ஒருபக்கத்தில் தெரிந்து வைத்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்தத் திருநாமத்திற்கான ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் வரிகள்:

வேதாதிபி: அயம் ஏவ பரத்வேந கதித:, ஸர்வை: வேதை: கதித இதி வா கதித:, ’ஸர்வே வேதா; யத் பதம் ஆமநந்தி’, ‘வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய’, ’வேதே ராமாயணே புண்யே பாரதே பரதர்ஷப | ஆதௌ மத்யே ததா சாந்தே விஷ்ணு: ஸர்வத்ர கீயதே’ இதி ச்ருதி ஸ்ம்ருத்யாதி வசநேப்ய:, ’ஸோSத்வந: பாரமாப்நோதி தத்விஷ்ணோ: பரமம் பதம்’ இத்யாத்யுக்தம், கிம் ததத்வநோ விஷ்ணோர்வ்யாபநசீலஸ்ய பரமம் பதம் ஸ தத்வமித்யாகாங்க்ஷ்யாம் இந்த்ரியாதிப்ய: ஸர்வேப்ய: பரத்வேந ப்ரதிபாத்யதே ‘இந்த்ரியேப்ய; பராஹ்யர்த்தா:’ இத்யாரப்ய, ’புருஷாந் ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பராகதி:’ இத்யந்தேந ய: கதித: ஸ: கதித: ) 

யோகீ - எப்பொழுதும் தத்வ ஞானத்தால் பார்க்கப்படுபவராய்க் கூடாதவற்றைக் கூட்டும் பரமகாரணராய் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் யோகி என்று அழைக்கப்படுகிறார் 

யோகீச: - யோகிகளுக்கும் யோகத்தைக் கைக்கூடச் செய்பவராய், நித்திய இயல்பான யோகம் வாய்த்தவர்களுக்கும் அவர்களது யோகம் நிலைக்கும் காரணமாய் அமைந்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் யோகீசர் என்று அழைக்கப்படுகிறார். 

ஸர்வகாமத: - அனைத்து விருப்பங்களும் நிறைவேறுவது என்பது தம்முடைய அருளின் வசமாக நடக்கும் வண்ணம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வகாமதர் என்று சொல்லப்படுகிறார். 

ஆச்ரம: - ஸம்ஸாரத்தில் ஒரு கணமும் ஓய்வில்லாமல் அலைவுறும் உயிர்கள் கடைசியாக அடைந்து பட்ட சிரமம் எல்லாம் தீர்ந்து இளைப்பாறும் நிரந்தர ஓய்விடமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆச்ரமர் என்று அழைக்கப் படுகிறார். 

ச்ரமண: - அனைத்துயிருக்கும் புகலாகத் தாமே இருப்பினும், தம்மை அவ்வண்ணம் உணரும்வரை அதற்கேற்ற பக்குவம் பெறுவதற்காகத் தன்முனைப்புடன் கூடிய தேட்டத்தில் மூட்டிப் பயிற்றுபவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ச்ரமணர் என்று சொல்லப்படுகிறார். 

க்ஷாம: - அவர்கள் அறிந்தோ அறியாமலோ தம்மை நோக்கிய தேட்டத்தில் தம்மால் முடிக்கிவிடப்பட்டு முனைந்தோர்தம் கர்ம பலன்கள் அவர்களைத் தகையும்போதும், அவர்களுடைய கடுமையான தவ வாழ்க்கையிலும் அவர்களுக்குப் போதிய பொறையும், விடாமுனைப்பும் தந்தருளுபவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகையாலே அவர் க்ஷாமர் என்று போற்றப்படுகிறார். 

ஸுபர்ண: - பக்குவம் அடைந்து வருவோரை அடுத்த அடுத்த நிலைக்கும், தன்னையே புகலும், வழியும் என்று உணரும் பக்குவம் அடைந்தோரைப் பரமப் பிராப்யமான நிலைக்கும் சம்ஸார மண்டலத்தின் எவ்வித நலிவும் வாட்டாமல் கடத்திச் செல்லும் ஒரு நல் துணையாக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுபர்ணர் என்று சொல்லப்படுகிறார். 

வாயுவாஹந: - தாம் எவ்வளவு கருணையோடு அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக அணைத்து எடுத்துச் சென்றாலும், ஜீவர்கள் தம் சுதந்திர இச்சையால் அவருடைய காப்புகள் அனைத்தையும் முறித்துக் கொண்டு, கீழே விழுவதற்கே வாய்ப்பு பார்த்து விழும் போதும், அவற்றின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, விழ விட்டு, அவை விழுந்த வேகமாகிய வாயுவே வாஹனமாக அவற்றைத் தம் பால் கொண்டு வந்து சேர்க்கும்படி அமைத்து வைத்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வாயுவாஹநர் என்று போற்றப்படுகிறார். 

***

அணுர்ப்ருஹத் க்ருச:

அணுர் ப்3ருஹத் க்ரு: ஸ்தூ2ல: கு3ணப்4ருந் நிர்கு3ணோ மஹாந் | 
அத்4ருத: ஸ்வத்4ருத: ஸ்வாஸ்ய: ப்ராக்3வம்சோ வம்வர்த4ந: || 


அணு: - இருக்கின்ற ஆகாசங்களிலெல்லாம் மிகச்சிறிய ஆகாசமான ஹ்ருதய ஆகாசத்தினுள்ளும் புகுந்து, அதில் அணுஸ்வரூபன் என்று சொல்லப்பட்ட ஜீவனின் உள்ளும் அந்தர்யாமியாய் நின்று காக்கும், அணிமா என்னும் திறல்வல்லோன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அணு என்றே அழைக்கப் படுகிறார். 

ப்ருஹத் - பெரிதினும் பெரிதான பரமபதத்தையும் தம் திருமேனியில் ஒரு பகுதியாக அடங்கும்படியாக மிகப் பெரியவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ருஹத் என்ரு அழைக்கப்படுகிறார். 

க்ருச: - காற்றினும் லேசானவர் ஆகையாலே எங்கும் பரவி நிற்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ருசர் என்று சொல்லப் படுகிறார். 

ஸ்தூல: - இருக்கும் ஒவ்வொரு பொருளையும் நேரடியாகத் தொட்டுக் கொண்டிருக்கும் அளவிற்கு பருத்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்தூலர் எனப்படுகிறார். 

குணப்ருத் - அனைத்துப் பொருட்களையும், அவற்றின் தன்மைகள் அனைத்தையும் தாம் தம் குணம் போலத் தாங்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குணப்ருத் என்று சொல்லப் படுகிறார். 

நிர்குண: - நற்குணங்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவர், தாம் எவ்வித குணதோஷங்களும் அற்றவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நிர்குணர் எனப்படுகிறார். 

மஹாந் - தோஷம் கலவாத குணங்களே நிறைந்தவர் ஆகையாலே என்றும், யாவருக்கும், எவ்விதத்திலும், ஒவ்வொரு கணத்திலும் மஹத்தானவராக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாந் என்று அழைக்கப்படுகிறார். 

அத்ருத: - அனைத்தையும் உள் நின்றும், தம்முள் நிலைபெறுத்தியும் தாங்குபவர் ஆகையாலே தம்மைத் தாங்கும் எதுவும் இல்லாததால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அத்ருதர் என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வத்ருத: - எதனாலும் தாங்கப்படாமல், தாம் அனைத்தையும் தாங்குபவராய் இருப்பதோடு மட்டுமன்றித் தம்மைத் தாமே தாங்கி நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வத்ருதர் என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வாஸ்ய: - அன்றலர்ந்த செவ்வி மாறாது எக்கணமும் இயல்புற மிளிரும் ஆனந்தத்தில் நிலைத்த இருப்பை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வாஸ்யர் எனப்படுகிறார். 

ப்ராக்வம்ச: - என்றும் பிற்பட்டதாக ஆகிவிடாமல் புதியதாகவே இருக்கின்ற நித்யமான தன்மையாலும், நித்யசூரிகள் என்னும் வம்சத்திற்கும் முந்தையரும் பெரியவரும் ஆனவர் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ராக்வம்சர் எனப்படுகிறார். 

வம்சவர்த்தந: - தம் வம்சமாகிய பிரபஞ்சத்தையும் நித்ய சூரிகளின் திரள் வதியும் திருநாட்டையும் பெருகி வளரச் செய்து கொண்டேயிருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வம்சவர்த்தநர் என்று சொல்லப்படுகிறார். 

***

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஜிஹ்வ:

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்த ஜிஹ்வ: ஸப்தைதா4: ஸப்தவாஹன:| 
அமூர்த்தி: அநக4: அசிந்த்ய: ப4யக்ருத்3 ப4யநான: || 


ஸஹஸ்ரார்ச்சி: - ஒளியும், வெப்பமும் கொண்டு உலகில் பரிணாமங்களைச் செய்வதான ஆயிரம்விதமான ஒளிகள் தம்மிடமிருந்து வெளிப்போந்து திகழ இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸஹஸ்ரார்ச்சி; என்று அழைக்கப்படுகிறார். 

[ பேய்க்கும் ஒரு பேய் போன்று
பித்து ஆய்த் திரிவோர்க்கும்,
வேய்க்கும்,
அணிமுத்திவரும் வேங்கடமே
வாய்க்கு அமுது ஊர்
வண்மைப்பேர் ஆயிரம் தான் மன்னினான்,
மாவலிபால்
தண்மைப் பேராய் இரந்தான்
சார்பு.

(திருவேங்கடமாலை, ஸ்ரீபிள்ளைப் பெருமாள் ஐயங்கார்) ] 

ஸப்த ஜிஹ்வ: - ஏழு நாக்குகள் கொண்டதாகச் சொல்லப்படும் அக்னி தம் உருவமாக, அந்த அக்னியைத் தம் வாயாகக் கொண்டு அனைத்து மக்களின் ஆஹுதிகளையும் புசிப்பவராகவும், எங்கெங்கு அக்னி உண்டோ அவையெல்லாம் தம் உருவம் என்றும் உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தஜிஹ்வர் எனப்படுகிறார். 

ஸப்தைதா: - ஏழு விதச் சிறப்புகள், ஏழுவித வேள்விகள் என்று பிரபஞ்சத்தையே ஏழுவித உருவமாகத்தாம் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தைதா: என்று அழைக்கப்படுகிறார். 

ஸப்தவாஹந: - ஏழு சந்தஸ்ஸுகளுக்கும் தேவதைகளாக ஏழு குதிரைகளால் பூட்டிய தேரில் வலம் வருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தவாஹநர் என்னப்படுகிறார். 

அமூர்த்தி: - உலகில் காண்கின்ற வகையில் இல்லாத தெய்விகமான மேனி உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அமூர்த்தி என்று அழைக்கப் படுகிறார். 

அநக: - உலகில் கர்மங்கள் காரணமாகப் பிறந்து தன்னுடைய ஞானம் சுருக்கமும், பின்னர் அருளால் இயல்பான விரிவும் அடைய நேரும் ஜீவனைப் போல் இன்றி, அந்த ஜீவர்களைக் கரையேற்றத் தாம் கருணையினால் எத்தனை பிறவிகள் எடுப்பினும் சிறிதும் மாற்றமோ, மழுங்கலோ தன்பால் அண்டாத பூரண நல்ஞானம் என்றுமே உடையவரும், அதனால் ஜீவர்களின் ஞானக் கேடுகளைக் களைந்து உய்வு தரவும் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநகர் என்று அழைக்கப்படுகிறார். 

அசிந்த்ய: - உலகில் காணும் இயல்புகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டு இருப்பவர் ஆகையாலே இத்தகையவர் என்று சிந்தனையின் மூலம் அறுதியிட்டு அறிய முடியாதவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அசிந்த்யர் என்று சொல்லப் படுகிறார். 

பயக்ருத் - தீவழிச் செல்வோருக்குப் பயத்தை உண்டாக்குகிறவராக நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயக்ருத் என்று அழைக்கப் படுகிறார். 

பயநாசன: - நல்வழியில் நடப்போர்க்குப் பயங்கள் ஏற்பட்டாலும் அவற்றை அழிக்கும் காப்பாக நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயநாசநர் என்று அழைக்கப் படுகிறார். 

*** 

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த:

ஸுலப4: ஸுவ்ரத: ஸித்3த4: த்ருஜித் த்ருதாபந: | 
ந்யக்3ரோத4: உது3ம்ப3ர: அச்வத்த2: சாணூராந்த்4ர நிஷூத3ந: || 


ஸுலப: - உலகத்தில் மிகச்சுலபமாகக் கிடைக்கும் பொருட்கள் என்ன என்ன உண்டோ அவற்றையெல்லாம் விட அதி சுலபம் ஆனவர் ஆக அவர் என்றும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சுலபர் எனப்படுகிறார். 

(அய்யே அதிசுலபம் - ஆன்ம வித்தை
அய்யே அதிசுலபம் ! -- ஸ்ரீரமண மஹரிஷி ) 

ஸுவ்ரத: - அடைவதற்குச் சுலபனாய் இருப்பவர் அடைந்தவரைக் காப்பதில் சிறிதும் கூடத் தளர்ச்சி இன்றி, அலட்சியம் இன்றிச் சரணடைந்தாரைக் காப்பதுவே தம் உறுதியான விரதமாகக் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவ்ரதர் எனப்படுகிறார். 

ஸித்த: - உயிருக்கு அவர் ரக்ஷகராய் இருப்பது என்பது ஜீவன் ஏதோ சாதனத்தை அனுஷ்டித்து அதன் விளைவாக ஏற்படும் காப்பு என்று இராமல் ஜீவனுக்கும் தமக்கும் உள்ள ஒழிக்கவியலா இயற்கையான சம்பந்தத்தால் அவர் ஏற்கனவே ஸித்தமாக இந்த ஜீவனுக்கு ரக்ஷகராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸித்தர் என்று அழைக்கப் படுகிறார். 

’ நெறிகாட்டி நீக்குதியோ? ‘ 

சத்ருஜித் - பகைவர்களை வென்றவர்; சத்ருதாபந: - பகைவர்களை வாட்டுகின்றவர்

உயிரோடு பகையான உடல் வாடி நாசம் உறுகிறது என்பதைப் போல உயிருக்கு உயிரான ஸ்ரீமஹாவிஷ்ணுவோடு பகைத்தவர்கள் தீராத தாபத்தால் பீடிக்கப் பட்டு, பின்னர் அவருடைய காரணமற்ற கருணையால் ஜயிக்கப்படுகிறார்கள். அவரைத் தம்முடைய அந்தராத்மா என்று அறியாமையால் பகைப்போருக்கு அவன் அருளும் வாழ்ச்சியே அவர்களை ஜயிப்பது ஆகையாலே இந்த இரட்டை நாமத்தாலும் சத்ருஜித்-சத்ருதாபநர் என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவே அழைக்கப்படுகிறார். 

ந்யக்ரோத; உதும்பர: - மண்ணுள்ளார் உய்ய, வன்பெரு வானகம் உய்ய எளிமையும் பெருமையும் உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ந்யக்ரோத: உதும்பர: என்று அழைக்கப் படுகிறார். 

அச்வத்த: - நித்யப் பொருள்களாக மட்டும் தாம் இராமல் அநித்யப் பொருள்களாகவும், ஒரு காலத்தில் முடிவு பெறும் அநித்யப் பதங்களாகவும், அந்தப் பதங்களுக்குரிய தேவர்களாகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அச்வத்தர் எனப்படுகிறார். 

(அச்வத்தம் - மேலே வேரும் கீழே கிளைகளும் பரப்பி வளரும் உலகப் பெருமரம்.) 

சாணூராந்த்ரநிஷூதந: - சாணூரன் ஆகிய அந்த்ரனை, அவன் தேவர்களுக்கும், உலகத்தினருக்கும் துன்பம் இழைத்ததால் அந்த மல்லனை ஸம்ஹாரம் செய்தவர். 

***

குமுத: குந்தர: குந்த:

குமுத3: குந்த3ர: குந்த3: பர்ஜன்ய: பாவந: அநில:| 
அம்ருதா: அம்ருதவபு: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக2:|| 


குமுத: - எழுத்துக்குப் பொருள் என்று பார்க்கையில் கு என்னும் பூமி, மு என்னும் முத்தியைப் பற்றி வருவதால், முத்தி என்னும் பூமியைத் தருபவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகையால் அவர் குமுதர் எனப்படுகிறார் 

குந்தர: - கும் எனப்படும் பாவத்தைப் போக்கி, குந்தம் என்னும் பரதத்வ ஞானத்தை அருள்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குந்தர: என்று அழைக்கப்படுகிறார். 

குந்த: - அழிக்கப்பட்ட பாவம் மீளாவகை செய்பவரும், ஞானம், வைராக்கியம் ஆகிய முதற்படிகளில் ஏறினார்க்கு அடுத்தடுத்து பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகிய உயர்நிலைகளைத் தந்தருள்பவர் ஆகையாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குந்தர் என்று அழைக்கப்படுகிறார். 

பர்ஜன்ய: - மழையால் உலகத்தின் புறத்துன்பம், சமுதாயத் துன்பம், உள்ளத்துத் துன்பம் என்னும் முத்துன்பங்களான ஆதிதைவிக, ஆதிபௌதிக, ஆத்யாத்மிக துன்பங்கள் அனித்தும் நீங்குவது போன்று, தம் ஸ்வரூபத்தைப்பற்றிய ஞானத்தால் நமக்கு ஏற்படும் மூவித துன்பங்கள் அகற்றி ஆனந்தம் தருபவர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்ஜன்யர் எனப்படுகிறார். 

பவந: - தூய்மைப் படுத்துபவர், அதுவும் பக்தர்கள் பால் தாமே வலியச் சென்று, அதுவும் விரைவில் சென்று தூய்மை நல்கும் தாய்மை குணத்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பவநர் என்று சொல்லப் படுகிறார். 

அநில: - அருள் செய்வதற்கு ஒரு ஹேது வேண்டும் என்ற இயல்பு இல்லாதவன், அடியார்களின் க்ஷேமத்தில் என்றும் விழித்திருப்பவன், பக்தியால் காதல் மீக்கூற வேண்டும் அடியார்க்கு, கண்ணுக்குப் புலனாகி அருள் செய்பவன் என்ற இயல்புகள் பிரத்தியேகமாகத் தம் ஒருவரிடமே நிறைந்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநிலர் என்று அழைக்கப்படுகிறார். 

அம்ருதாச: - அழிவற்ற ஆத்மானந்தமாகிய இயல்பில் சுகித்திருப்பவன், அமுதம் பிறர்க்கீந்து அவருண்ணத் தானுண்பவன், அடியார்க்குத் தன் குணங்களாகிற அமுதை அருந்தத் தருபவன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அம்ருதாசர் எனப்படுகிறார். 

அம்ருதவபு: - அழியாத வடிவுடையவர் ஆகையாலே அம்ருதவபு; என்று அழைக்கப் படுகிறார் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர். 

ஸர்வக்ஞ: - தாம் அனைத்தும் அறிந்தவர் என்பதோடன்றி அடியார்களின் திறமை திறமையின்மை, போதாமை, தாங்கும் சக்தி என அனைத்தும் அவர்கள் அறியாததையும் தாம் அறிந்தவராய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வக்ஞர் எனப்படுகிறார். 

ஸர்வதோமுக: - தம்மை அடியார்கள் வந்து அடைவதற்கும், தாம் அடியார்களைச் சென்று அடைவதற்கும் இதுதான் வழி என்று எந்த நியதியும் இன்றி எவ்வழியும் எவ்விதத்திலும் தம்மையே வந்து சேரும்படியான பரமசத்யம் அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வதோமுகர் எனப்படுகிறார்.

( Truth is a pathless land - J K ) 

***

ஸுவர்ணபிந்து: அக்ஷோப்ய:

ஸுவர்ணபி3ந்து: அக்ஷோப்4ய: ஸர்வவாகீ3ச்வர: ஈச்வர: | 
மஹாஹ்ரதோ3 மஹாக3ர்தோ மஹாபூ4தோ மஹாநிதி4: || 


ஸுவர்ணபிந்து: - பொன்னினும் துலங்கும் பூர்ண அழகுடைய அவயவங்கள் உடையவர்; நன்மையாகிய எழுத்தும் பிந்துவெனும் அநுஸ்வரமும் கூடிய பிரணவமாய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸுவர்ணபிந்து: எனப்படுகிறார் 

( பூதத்தாழ்வார் -

கதையின் பெரும்பொருளும் கண்ணா!
நின்பேரே.
இதயம் இருந்து அவையே ஏத்தில்
கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே!
உன்னைப்
பருமொழியால் காணப் பணி. ) 

அக்ஷோப்ய: - யாவராலும் எதனாலும் கலக்கக் கூடாதவர்; காம குரோதாதிகளாலும், சப்தாதி விஷயங்களாலும், அசுரர்களாலும் கலக்க முடியாதவர்; ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு அக்ஷோப்ய: என்று சொல்லப் படுகிறார். 

( நம்மாழ்வார் -

கண்ணும் செந்தாமரை
கையும் அவை
அடியோ அவையே
வண்ணங்கரியதோர் மால்
வரை போன்று
மதி விகற்பால்
விண்ணும் கடந்து
உம்பரப்பால் மிக்கு
மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ?
எம்பிரானது எழில் திறமே. ) 

ஸர்வவாகீச்வரேச்வர: - சொல் என்னும் சக்திக்குத் தலைவர்களாய் உள்ள பிரம்மாதி தேவர்களுக்கும் ஈசுவரராய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸர்வவாகீச்வரேச்வர: என்னப்படுகிறார். 

( திருமங்கையாழ்வார் - 

....அறுவகைச் சமயமும் 
அறிவரு நிலையினை; 
ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை; 
அறம்முதல் நான்கவையாய் 
மூர்த்தி மூன்றாய் 
இருவகைப் பயனாய் 
ஒன்றாய் விரிந்து நின்றனை..) 

மஹாஹ்ரத: - யோகிகளாகிய ஆழ்வார்கள் எந்த மடுவில் முழுகி அளவற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறார்களோ அந்தப் பெரும் மடுவாக, தரைதட்டாத குழியாக இருப்பவன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு மஹாஹ்ரத: என்று போற்றப் படுகிறார் 

( நம்மாழ்வார் -

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
பர நன் மலர்ச் சோதீயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
சுடர்ஞான இன்பமேயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
என் அவா அறச் சூழ்ந்தாயே! ) 

மஹாகர்த: - அடியார்களை ஆனந்திப்பிக்கும் மடுவாக, குழியாக மட்டும் இல்லாமல், உலக மக்களை மயக்கி உள்ளே அமிழ்த்தும் கடுங்குழியாகவும் அவன் அமைந்திருக்கிறான். உலக மயக்கம் கொண்ட மக்கள் விஷயத்தில் எது அமிழ்த்தும் சுழல் குழியாக ஆகிறதோ அதுவே அவனுடைய உலக ரீதியான வடிவமாக மஹாகர்த: என்று அவன் சொல்லப்பட காரணமாக ஆகிறது. 

மஹாபூத: - காலத்தால் மாறாத ஸ்வரூபத்தை உடையவர், முக்காலமும் ஒரேபடித்தான ஸ்வரூபத்தைக் கொண்டவர், எக்காலமும் தன்னியல்பிலேயே நிலைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாபூதர் என்று அழைக்கப்படுகிறார். 

மஹாநிதி: - அனைத்துப் பொருள்களும், அனைத்து உயிர்களும் சேமக் காப்பு அடைந்து வெளிப்பட்டு வளர்ந்து தம் இலக்காகிய அவரையே அடையத் தகுந்த ஒன்றாகத் தொடக்கம் முதல் நிறைவுவரை அவரே திகழ்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாநிதி என்று அழைக்கப்படுகிறார் 

( பெரியாழ்வார் -

துப்பு உடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவர் என்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு
என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும் உன்னை
நான் நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு
இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! ) 

***

உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ

உத்3ப4வ: ஸுந்த3ர: ஸுந்தோ3 ரத்நநாப4ஸ் ஸுலோசந: | 
அர்கோ வாஜஸநிச் ச்ருங்கீ3 ஜயந்த: ஸர்வ விஜ்ஜயீ || 


உத்பவ: - அவருடைய பிறப்புகள் கர்மத்தின் காரணமாக இன்றி, கருணையின் காரணமாக இருப்பதால் மிகச் சிறந்தவை. அவ்வாறு சிறந்த அவதாரங்களைச் செய்பவர் ஆகையாலே அவர் உத்பவர் ஆகிறார் 

ஸுந்தர: - மன்னுயிர்க்காக, மன்னுயிர் காக்க அவதரிக்கும் கருணை மிகுந்த ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர், பேரழகு மயமாகவும் திகழ்கிறார் என்பதால் அவருடைய திருநாமம் ஸுந்தர: என்று சொல்லப்படுகிறது 

ஸுந்த: - பேரழகு என்பதனோடு சேர்த்து பெருந் தயையே வடிவானவர் ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதால் அவர் ஸுந்த: என்று சொல்லப் படுகிறார் 

ரத்ந நாப: - தயையே உருவானவர் ஆகையால் உலகத்தைப் படைத்து, உயிர்கள் வீடு பேற்றிற்கு முன்னேறுவதற்காக, முதன்முன்னம் உலகைப் படைக்க என்று பிரமனைப் படைத்து, அதற்கு முன்னர் பிரமனுக்கு இருப்பிடமான நாபி கமலத்தை வெளியிட்ட அருஞ்செல்வம் அன்ன ரத்நம் போன்ற நாபியை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ரத்ந நாப: என்று சொல்லப் படுகிறார். 

ஸுலோசந: - லோசநம் என்பது காண்பது என்னும் பொருளில் கண்ணையும், ஞானத்தையும் குறிப்பதால் நன்கு அழகிய திருக்கண்களையும், செம்மையான அக அழகு பொலியும் ஞானத்தையும் உடையவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுலோசந: என்று அழைக்கப் படுகிறார் 

அர்க: - மிகப்பெரும் தெய்வங்களாலும் துதிக்கப்படுபவர் ஆகையாலே துதி என்பதற்கு இலக்காக இருப்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அர்க: என்று அழைக்கப் படுகிறார். 

வாஜஸநி: - உணவை உண்மையில் பிரம்மம் என்று அறிய வேண்டும் என்னும் மறைமொழிக்கு இணங்க, அனைத்து உயிர்க்கும் வாழ்க்கைக்கு ஆதாரமான உணவாகவும், அதற்கு உரிய பசியினால் வேண்டித் தவிப்பவர்க்கு அவ்வுணவை அளிப்பவராகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வாஜஸநி என்று சொல்லப்படுகிறார் 

ச்ருங்கீ - பிரளயகாலத்தில் ஒற்றைக் கொம்புள்ள மீனுரு எடுத்து உயிர்களை அடுத்த படைப்பு வரையில் பாதுகாத்தான் ஆகையாலே ச்ருங்கீ. கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்து உயிர்களைக் காத்தான் ஆகையாலே ச்ருங்கீ. 

(நம்மாழ்வார் - 

மீனென்னும் கம்பில்
வெறியென்னும் வெள்ளிவேய்
வான் என்னும் கேடில்லா
வான் குடைக்கு
தான் ஓர்
மணிக்காம்பு போல்
நிமிர்ந்து மண்ணளந்தான்
நங்கள் பிணிக்காம்
பெரு மருந்து பின்.) 

ஜயந்த: - நமக்கான பகைவர்களை ஜயிப்பதில் தவறாதவர், முக்கியமாக நமக்காக நம் அகங்காரத்தை ஜயித்து நம்மை ஆட்கொள்ள வல்லவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஜயந்தர் என்று சொல்லப் படுகிறார் 

( திருமழிசையாழ்வார்;

அன்பாவாய்
ஆரமுதம் ஆவாய்
அடியேனுக்கு இன்பு ஆவாய்
எல்லாமும் நீ ஆவாய்
பொன்பாவை கேள்வா!
கிளரொளி என் கேசவனே!
கேடின்றி ஆள்வாய்க்கு
அடியேன் நான்
ஆளே.) 

ஸர்வவித் ஜயீ - எல்லாம் தெரிந்தவர்களையும் ஜயிப்பவர், அனைத்து அறிவின் வழிகளிலும் ஜயிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸர்வவித்ஜயீ என்னப்படுகிறார். 

( நம்மாழ்வார்:

வாசகம் செய்வது நம் பரமே?
தொல்லை வானவர் தம் நாயகன்
நாயகர் எல்லாம் தொழுமவன்
ஞாலமுற்றும் வேயகம் ஆயினும்
சோராவகை
இரண்டே அடியால் தாயவன்
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
நம் இறையே.) 

***


சுபாங்கோ லோகஸாரங்க:

சுபா4ங்கோ3 லோகஸாரங்க3ஸ் ஸுதந்துஸ்தந்துவர்த்த4ந :|
இந்த்3ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாக3ம :|| 


சுபாங்க: -- தியானத்தில் மனம் தானாகக் குவிந்து லயிக்கும் படியான மிகவும் சுபமயமான அங்கங்களை உடையவர் என்பதால் சுபாங்கர் 

லோகஸாரங்க: - லோகஸார: என்று பிரணவத்திற்குப் பெயர். பிரணவத்தினால் அடையப்படுபவராக இருப்பதால் ஸ்ரீவிஷ்ணுவானவர் லோகஸாரங்க: என்று சொல்லப்படுகிறார். 

ஸுதந்து: - சிலந்தி எப்படித் தன் உடம்பிலிருந்தே நூலை உண்டாக்கி வலை பின்னுமோ அப்படி அழகிய நூல் வலையாகிய பிரபஞ்சத்தைத் தம்மிலிருந்து உண்டாக்கிப் பின்னுபவர் ஆகையாலே ஸுதந்து: என்று அழைக்கப்படுகிறார் 

தந்து வர்த்தன: - சிலந்தி நூலை மேலும் மேலும் உண்டாக்கும், தன்னுள் இழுத்தும் கொள்ளும். அது போல் இந்தப் பிரபஞ்ச வலையை வளர்க்கவும், பின்னர் தன்னுள் ஒடுக்கவும் வல்லவர் ஆகையால் அவர் தந்து வர்த்தனர் ஆகிறார் 

இந்த்ர கர்மா - இவ்வாறு ஒவ்வொன்றும் பரஸ்பரம் தொடர்பில் இருக்கும் வண்ணம், வலை போல் பின்னுவதால் அவர் இந்த்ர ஜாலம் ஆகிய (ஜாலம் - வலை) கர்மாவைச் செய்பவர் என்பதால் இந்த்ர கர்மா என்று சொல்லப்படுகிறார் 

மஹாகர்மா - உலகக் கர்மங்கள் அனைத்தும் பஞ்ச மஹா பூதங்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்தப் பஞ்ச மஹா பூதங்களையே சிருட்டி செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீவிஷ்ணுவானவர் மஹாகர்மா என்று அழைக்கப்படுகிறார் 

க்ருதகர்மா - இவ்வாறு கர்மங்கள் செய்வதால் அவருக்கு ஏதோ புதிதாகப் பயன் உண்டு என்று இல்லை. ஏனெனில் அனைத்து கர்மங்களாலும் ஆக வேண்டிய பயன் அவரிடத்தில் பூரணமாக எப்பொழுதும் இருக்கிறது. எனவே அவர் க்ருதகர்மா எனப்படுகிறார். 

க்ருதாகம: - மனிதர்கள் பலவித கர்ம வினைப் பயன்களில் இழுப்புண்டு பின்னர் தம் விடுதலைக்கு ஏங்குங்கால், அவரை அடைதலாகிய வீடு பேறு என்பதை அடைவிக்கும் வழிகளைக் கூறுவது ஆகமம். அனைத்து ஆகமங்களையும் அவரவர் பரிபக்குவத்திற்குத் தக்க வண்ணம் செய்தவர் ஸ்ரீவிஷ்ணு ஆகையாலே அவர் க்ருதாகமர் என்று அழைக்கப் படுகிறார் 

***

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா து3ர்ஜயோ து3ரதிக்ரம: | 
து3ர்லபோ4 து3ர்க3மோ து3ர்க்கோ3 து3ராவாஸோ து3ராரிஹா || 


ஸமாவர்த்த: -- மீண்டும் மீண்டும் நன்மையை நிலைநாட்ட வேண்டியும், பக்தர்களின் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யவும் அவதாரங்களை நிகழ்த்துபவர் 

நிவ்ருத்தாத்மா -- அவதாரம் செய்யும் பொழுது அவருடைய மனம் முழுவதும் நிவ்ருத்தியிலேயே நிலைநிற்கிறது என்பதால் நிவ்ருத்தாத்மா 

துர்ஜய: -- தம் முயற்சியால் யாவருக்கும் காண ஒண்ணா இயல்பினர் 

துரதிக்ரம: -- ஆயினும் அவருடைய பாதங்களைச் சரணடைந்து பற்றிக்கொண்டால் அந்தப் பக்தியைக் கடக்க அவராலும் இயலாத தன்மையர் 

துர்லப: -- தூய பக்தியாலன்றி வேறு எதனாலும் அடைய ஒண்ணாதவர் 

துர்கம: -- மேதையாலோ, பலவித அறிவுகளாலோ, தவத்தாலோ ஒரு நாளும் அடைய முடியாதவர் 

துர்க்க: -- அறியாமையால் மூடுண்ட மதியினரால் ஒரு நாளும் அண்ட முடியாதவர் 

துராவாஸ: -- யோகிகளின் இதயத்தில் திகழ்பவர்; யாராலும் எட்டவொண்ணாத பரமபதத்தைத் தம் இடமாகக் கொண்டவர் 

துராரிஹா -- மிகக் கொடிய பகை அசுரசக்திகளையும் அழிப்பவர் (அதனால் அவரால்தான் அந்தப் பரமபதத்தை அருளமுடியும்) 

***

சதுர்மூர்த்திர் சதுர்பாஹு:

சதுர்மூர்த்திர்சதுர்பா3ஹுச் சதுர்வ்யூஹச் சதுர்க3தி: | 
சதுராத்மா சதுர்பா4வச்சதுர்வேத3 விதே3கபாத் || 


சதுர்மூர்த்தி: -- விராட், ஸூத்ராத்மா, அவ்யாக்ருதர், துரீயர் என்னும் நான்கு வடிவினர்; வாஸுதேவனாகிய தாம், பலராமர், ருக்மிணியின் புதல்வராகிய ப்ரத்யும்னர், ப்ரத்யும்னரின் குமாரனாகிய அரவிந்தன் என்ற நான்கு பேர்களால் நான்கு வியூஹங்களை உணர்த்தி நிற்பவர்; வெள்ளை, சிகப்பு, மஞ்சள், கருநீலம் என்னும் வண்ணங்களால் சுட்டப்படுபவர் 

சதுர்பாஹு: -- நான்கு தோளும் திகழ அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர் 

சதுர்வ்யூஹ: -- நான்கு வ்யூஹ அவதாரங்களாகத் திகழ்பவர் 

சதுர்கதி: -- நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பதற்கான நான்கு வழிகளாகவும், இந்த்ரபதம், ப்ரம்மாபதம், கைவல்யம், மோக்ஷம் என்னும் நான்கு விதப் பலன்களை உத்தேசித்து அமையும் வழிகள் நான்காகவும் தாமே அமைந்தவர் 

சதுராத்மா -- விழிப்பு, கனவு, துயில், துரியம் என்னும் நான்கு நிலைகளிலும் ஸ்தூலமாகவும், சூக்ஷ்மமாகவும் உள்ளுயிராய் இருப்பவர் 

சதுர்பாவ: -- நான்கு வியூஹங்களில் நான்கு வித பாவங்களோடு உலகைக் காப்பவர் 

சதுர்வேதவித் -- நான்கு வேதங்களின் தாத்பர்யமாகவும் இருப்பவர் 

ஏகபாத் -- ஜீவர்களால் சரணடையத் தக்க ஒரே புகலாக இருப்பவர் 

***

தேஜோ வ்ருஷோ த்யுதிதர:

தேஜோவ்ருஷோ த்3யுதித4ர: ஸர்வஸ்த்ரப்4ருதாம் வர: | 
ப்ரக்3ரஹோ நிக்3ரஹோ வ்யக்3ரோ நைகச்ருங்கோ3 க3தா3க்3ரஜ: || 


தேஜோவ்ருஷ: -- காரணமற்றுப் பெருகும் அவருடைய அருளால் அடியார்களைக் காத்துப் பல நன்மைகளைப் பொழிகின்றார் 

த்யுதிதர: -- மானுட அதீதமான பொலிவும் கீர்த்தியும் தம்மிடத்தில் திகழ இருப்பவர் 

ஸர்வசஸ்த்ரப்ருதாம் வர: -- பல்வித ஆயுதங்களைக் கையாளும் சூரர்களில் மிகச் சிறந்தவர் 

ப்ரக்ரஹ: -- புறத்தில் பார்த்தால் அர்ஜுனனின் தேருக்குச் சாரதி போன்று இருந்தாலும் அர்ஜுனன் உள்ளிட்ட உயிர்களின் உள்ளே அந்தர்யாமியாக நின்று நியமிப்பவர் அவரே 

நிக்ரஹ: -- தமது சங்கல்பத்தாலேயே எதிரிகளை அழிக்கவல்லவராய் இருக்கிறார் 

வ்யக்ர: -- அடியார்களின் குறை முடிக்கத் தாமே முனைந்து பொருபவராகவும் இருக்கிறார் 

நைகச்ருங்க: -- பல வழிகளிலும் பாண்டவர்க்குத் துணையாக இருப்பவர்; நான்கு கொம்புகள் உள்ள வேதமாகிய விருஷபத்தின் வடிவாய் இருப்பவர் 

கதாக்ரஜ: -- நிகதம் என்னும் மந்திரங்களின் முன்னால் தோன்றுபவர்; கதனுக்கு முன் பிறந்தவர் 

***

Wednesday, December 15, 2021

அமாநீ மாநதோ மாந்யோ

அமாநீ மாநதோ3 மாந்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்4ருத் | 
ஸுமேதா4 மேத4ஜோ த4ந்ய: ஸத்யமேதா4 த4ராத4ர: || 


அமாநீ -- உயிர்களுக்கு உள்ளுயிராய் அவரே இருப்பதால் தம் சரீரமாக இருக்கும் ஜீவர்களின் துயர் துடைக்க மானாபிமானம் பார்க்காமல் தம் அக்கறையாகக் கொண்டு அருள்பவர் 

மாநத: -- தம் பக்தர்களை, தம்மை நாடி வந்த ஜீவர்களை மிகவும் கௌரவிப்பவர் 

மாந்ய: -- பக்தர்கள் தம்மிடம் உரிமை எடுத்துக்கொண்டு தம்மிடம் சொல்வதையும், அவர்களுக்காகத் தாம் இறங்கி வந்து செய்யும் எளிமையான இயல்பையும் தம்முடைய பெருமையாகக் கருதுபவர் 

லோகஸ்வாமீ -- அவ்வாறு எளிவரும் இயல்பினராகப் பக்தர்களின் வேண்டுக்கோளை நிறைவேற்றச் சுலபராய் வருபவர் யார் எனில் அனைத்து உலகங்களுக்கும் உடைமையாளரும், படைத்தவரும், தலைவரும் ஆவார். 

த்ரிலோகத்ருத் -- அவர் ஏன் இவ்வாறு இவ்வளவு எளிமையாக இறங்கி வரவேண்டும் என்றால் அவர் வெறுமனே புறத்தே அனைத்துக்கும் சொந்தக்காரராக இல்லாமல் மூவுலகத்தையும் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் நின்று தாங்குவதால் அன்றோ! 

ஸுமேதா -- அவர் எப்பொழுதும் தம் பக்தர்களிடம் கனிந்த உள்ளம் கொண்டவராக இருக்கிறார் 

மேதஜ: -- தயையின் காரணமாகவே அவர் பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, அவர்களின் தீவிர வேண்டுதல் என்னும் வேள்வியின் பயனாகப் புவியில் அவதாரம் எடுக்கிறார். 

தந்ய: -- அவ்வாறு அவதாரம் எடுக்கும் பொழுது இன்னாரின் குழந்தை என்று சொல்லப்படுவதை பெரும் பேறு போன்று கருதுகிறார் 

ஸத்யமேத: -- அவ்வாறு உறவினால் உரிமை கொண்டாடுவதை ஓர் அலங்காரமாகக் கருதாமல் ஆர்வத்துடன் சத்யமாகவே அவ்வாறு கருதுபவர் ஆகிறார் 

தராதர: -- உலகைத் தாங்குவது மட்டுமின்றி அவதாரம் எடுக்கும் காலங்களில் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பல்லுயிர்களைக் காப்பது போன்ற அதிசயச் செயல்களைச் செய்கிறார் 

***

Tuesday, December 14, 2021

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ3 வராங்க3ச் சந்த3நாங்க3தீ3 | 
வீரஹா விஷம: சூன்யோ க்4ருதாசீரசலச்சல: || 


ஸுவர்ணவர்ண: -- பொன்னெழில் பூக்கும் நிறத்தன் 

ஹேமாங்க: -- பொன்னொளிரும் திருமேனியன் 

வராங்க: -- திவ்விய மங்கள வடிவுடையவன் 

சந்தநாங்கதீ -- பொன்னெழில் அணிகள் பூண்டவன் 

வீரஹா -- நன்மைக்கு எதிரான அசுரர்கள் எத்தனை வலிமையரேனும் அவர்களை அழிப்பவன் 

விஷம: -- உற்றார்க்குத் தண்ணளி காட்டிச் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் 

சூன்ய: -- நிர்விசேஷன் ஆகையாலே சூன்யன் (சங்கரர்); தோஷம் சிறிதுமற்ற குணபூர்ணனாகிய ஸ்ரீகிருஷ்ணன் 

க்ருதாசீ -- ஆயர்பாடியில் வெண்ணையை விரும்பியுண்பவன் 

அசல: -- சிறிதும் மாறாத பெருங்குணத்தன் 

சல: -- பக்தர்களுக்கு ஒரு கெடுதல் என்றால் எதுவும் பொருட்டில்லை என்று வேகப்படுபவன் 

***

ஏகோ நைக: ஸவ: க:

ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத் பத3மநுத்தமம் | 
லோகப3ந்து4ர் லோகநாதோ2 மாத4வோ ப4க்தவத்ஸல: || 


ஏக: -- ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஒருவன் 

நைக: -- அவன் ஒருவனே எனினும் பல்கிய உயிர்களிலும் பொருட்களிலும் உள்ளே உள்ளுயிராய்ப் பரந்து நிற்பவனும் அவனே 

ஸவ: -- மானிடமாய் வந்து ஸ்ரீகிருஷ்ணனாய்க் குழந்தைகளும் உரிமை கொண்டாடத் திரிந்தவன் அவனே; உடல்மிசை உயிரென உயிர்கள் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் என்றும் இருப்பவனும் அவனே (ஸ;, வ: ) 

க: -- ஒளிவளர் ஆனந்தமாய் எங்கும் நிறைந்தவன் (அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி) 

கிம் -- எவனைத் தேட வேண்டும், எவனையே அறிய வேண்டும் என்று மறை புகலுமோ அவன் 

யத் -- ஜீவர்கள் அஞ்ஞான இருளில் முழுகிக் கிடந்த காலத்தே தொடங்கி அவர்கள் முக்திக்காக எவன் முனைந்தவண்னம் இருக்கின்றானோ அவன் 

தத் -- மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன் 

பதம் அநுத்தமம் -- உயர்வற உயர்நலம் என்றும், பரமம் பதம் என்றும் மறைகள் புகலும் மிக்குயர் பேறு அவன் 

லோகபந்து: -- உயிர்களுக்கு உறவுகள் அனைத்துமாய் ஆனவன் 

லோகநாத: -- உயிர்களை உடையோனும், உயிர்களை வழிநடத்துவோனும் அவனே 

மாதவ: -- தண்ணளி பூண்டு உயிர்களுக்கு இரங்கும் திருவின் மணாளன் 

பக்தவத்ஸல: -- தானீன்ற கன்றின் அழுக்குகக்கும் பசு போன்று ஜீவர்கள் பால் தாய்மை மிக்கவன் 

***

Monday, December 13, 2021

விச்வமூர்த்திர் மஹாமூர்த்தி:

விச்வமூர்த்திர் மஹாமூர்த்தி: தீ3ப்தமூர்த்திரமூர்த்திமாந் | 
அநேகமூர்த்திரவ்யக்த: தமூர்த்தி: தாநந: || 


விச்வமூர்த்தி: -- அவர் ஏன் அபராஜிதர் என்றால், எதனாலும் எவராலும் வெல்லப்பட முடியாதவர் என்றால், அவர் விச்வம் அனைத்தையும் தம் சரீரமாகக் கொண்டிருக்கிறார். 

மஹாமூர்த்தி: -- விச்வம் அனைத்தையும் தம் சரீரத்தில் காணுமாறு அர்ஜுனனுக்குக் காட்சியளித்த விச்வரூபர் 

தீப்தமூர்த்தி: -- ஒளிகொண்டு திகழும் அத்தனை வடிவும் சிறப்பும் அவரிடமிருந்தே தம் ஒளியைப் பெறுகின்றன என்னும் அளவிற்கு ஒளியாம் வடிவினர் 

அமூர்த்திமாந் -- அவரன்றித் தம் அளவில் வடிவின்றி, அசித் சித் என்னும் வேறுபாடு அறியவொண்ணாது கலசிக் கிடக்கும் உயிர்களையும், பிரகிருதியையும் தம் சரீரமாக உடையவர் 

அநேகமூர்த்தி: -- உலகின் நன்மைக்காகப் பல அவதாரங்களிலும் பலவித வடிவங்களைத் தரிக்கின்றார் 

அவ்யக்த: -- எத்தனை வடிவம் தரிப்பினும், விச்வ ரூபம் காட்டினும் அத்தனையும் மனித வடிவில் மறைந்திருக்கக் காட்சி தருபவர் 

சதமூர்த்தி: -- நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்கள் உடையவர். (திவ்ய தேசங்கள் நூற்றியெட்டிலும் திகழும் வடிவினர் என்றும் பொருள் கொள்ளலாம் அன்றோ!) 

சதாநந: -- நூற்றுக்கணக்கான முகங்கள் கொண்டவர் 

***