Thursday, December 16, 2021

குமுத: குந்தர: குந்த:

குமுத3: குந்த3ர: குந்த3: பர்ஜன்ய: பாவந: அநில:| 
அம்ருதா: அம்ருதவபு: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக2:|| 


குமுத: - எழுத்துக்குப் பொருள் என்று பார்க்கையில் கு என்னும் பூமி, மு என்னும் முத்தியைப் பற்றி வருவதால், முத்தி என்னும் பூமியைத் தருபவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகையால் அவர் குமுதர் எனப்படுகிறார் 

குந்தர: - கும் எனப்படும் பாவத்தைப் போக்கி, குந்தம் என்னும் பரதத்வ ஞானத்தை அருள்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குந்தர: என்று அழைக்கப்படுகிறார். 

குந்த: - அழிக்கப்பட்ட பாவம் மீளாவகை செய்பவரும், ஞானம், வைராக்கியம் ஆகிய முதற்படிகளில் ஏறினார்க்கு அடுத்தடுத்து பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகிய உயர்நிலைகளைத் தந்தருள்பவர் ஆகையாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குந்தர் என்று அழைக்கப்படுகிறார். 

பர்ஜன்ய: - மழையால் உலகத்தின் புறத்துன்பம், சமுதாயத் துன்பம், உள்ளத்துத் துன்பம் என்னும் முத்துன்பங்களான ஆதிதைவிக, ஆதிபௌதிக, ஆத்யாத்மிக துன்பங்கள் அனித்தும் நீங்குவது போன்று, தம் ஸ்வரூபத்தைப்பற்றிய ஞானத்தால் நமக்கு ஏற்படும் மூவித துன்பங்கள் அகற்றி ஆனந்தம் தருபவர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்ஜன்யர் எனப்படுகிறார். 

பவந: - தூய்மைப் படுத்துபவர், அதுவும் பக்தர்கள் பால் தாமே வலியச் சென்று, அதுவும் விரைவில் சென்று தூய்மை நல்கும் தாய்மை குணத்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பவநர் என்று சொல்லப் படுகிறார். 

அநில: - அருள் செய்வதற்கு ஒரு ஹேது வேண்டும் என்ற இயல்பு இல்லாதவன், அடியார்களின் க்ஷேமத்தில் என்றும் விழித்திருப்பவன், பக்தியால் காதல் மீக்கூற வேண்டும் அடியார்க்கு, கண்ணுக்குப் புலனாகி அருள் செய்பவன் என்ற இயல்புகள் பிரத்தியேகமாகத் தம் ஒருவரிடமே நிறைந்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநிலர் என்று அழைக்கப்படுகிறார். 

அம்ருதாச: - அழிவற்ற ஆத்மானந்தமாகிய இயல்பில் சுகித்திருப்பவன், அமுதம் பிறர்க்கீந்து அவருண்ணத் தானுண்பவன், அடியார்க்குத் தன் குணங்களாகிற அமுதை அருந்தத் தருபவன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அம்ருதாசர் எனப்படுகிறார். 

அம்ருதவபு: - அழியாத வடிவுடையவர் ஆகையாலே அம்ருதவபு; என்று அழைக்கப் படுகிறார் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர். 

ஸர்வக்ஞ: - தாம் அனைத்தும் அறிந்தவர் என்பதோடன்றி அடியார்களின் திறமை திறமையின்மை, போதாமை, தாங்கும் சக்தி என அனைத்தும் அவர்கள் அறியாததையும் தாம் அறிந்தவராய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வக்ஞர் எனப்படுகிறார். 

ஸர்வதோமுக: - தம்மை அடியார்கள் வந்து அடைவதற்கும், தாம் அடியார்களைச் சென்று அடைவதற்கும் இதுதான் வழி என்று எந்த நியதியும் இன்றி எவ்வழியும் எவ்விதத்திலும் தம்மையே வந்து சேரும்படியான பரமசத்யம் அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வதோமுகர் எனப்படுகிறார்.

( Truth is a pathless land - J K ) 

***

No comments:

Post a Comment