Thursday, December 16, 2021

விஹாயஸகதிர் ஜ்யோதி:

விஹாயஸக3திர் ஜ்யோதி: ஸுருசி: ஹுதபு4க் விபு4: | 
ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன:|| 


விஹாயஸகதி: - ஆன்மிக வழியில் நின்று முக்தி அடையும் வேட்கையில் நிலை நின்றார்கட்கு பக்தி யோகம் கைகூடுங்கால் இதய ஆகாசம்தன்னில் நூறு நாடிகளுக்கு மேல் நூற்றியோராவது நாடியாகப் பரமபதம் செல்லும் கதியைத் தெரியவைத்து, அவ்வழியே சுகமே நடத்திச் செல்லும் சக்தியாகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விஹாயஸகதி: என்று தொழப்படுகிறார். 

ஜ்யோதி: - பக்தர்கள் பரமபதம் போகும் அர்ச்சிராதி மார்கத்தில் முதல் நிலையான ஒளியாக இருப்பவர் என்று ஸ்ரீபராசர பட்டர் இந்தத் திருநாமத்திற்கு அர்த்தம் தருகிறார்.

( அதேபோல் ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரரும் ஒளி என்று பொருள்படும்படியாகச் சொன்னால் ஒன்றும் குறையில்லை. ஆனால் அவ்வாறு செய்யாமல் இந்தத் திருநாமத்திற்கு ஸ்ரீமந் நாராயணன் என்றே வியக்தமாக அர்த்தம் செய்கிறார் ஸ்ரீபகவத்பாதர். அதற்கு அவர் சான்று காட்டும் வேத வாக்கியம் ‘நாராயண: பரோ ஜ்யோதி:’ என்னும் உபநிஷத் வாக்கியம். அதாவது பகவந் நாமங்களிலேயே வேறு எந்த தெய்வத்திற்கும் அர்த்தம் வரும்படியாக வியாக்கியானம் செய்ய முடியாத திருநாமம் ஸ்ரீமந் நாராயண நாமம். நாராயண என்றால் பொதுப்படையான கடவுள் என்ற பொருள் தராமல் குறிப்பாக ’அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கை உறைமார்பனான’ திருமால் ஒருவரை மட்டுமே சிறப்புப் பெயராகக் குறிப்பது நாராயண நாமம். இங்கு வெறுமனே ஜ்யோதி: என்று பொதுவான நாமம் இருக்க அதற்கே ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் செய்யும் விளக்கம் நாராயண நாமம் எனில், அவருடைய சகுண பிரம்ம நிஷ்டை எவ்வளவு ஏகாக்ரதை உடையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.) 

ஸுருசி: - அர்ச்சிராதிகதியில் இரண்டாவது நிலையாகப் பகலன்ன பேரொளியாக நடத்துபவர் ஆகையாலே ஸுருசி: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கொண்டாடப் படுகிறார். 

ஹுதபுக்விபு: - அனைத்திடத்திலும் நிறைந்து உயிர்கள் அனைத்தும் தொடர் யக்ஞங்களில் பெய்யும் அனைத்து ஹோமத் திரவியங்களையும் உட்கொள்ளும் தெய்வமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஹுதபுக்விபு: என்று சொல்லப்படுகிறார். 

ரவி: - வெப்பமாய் நின்று அனைத்தையும் உட்கொள்ளுவதோடு நில்லாமல் ஓங்கிய வான் கதிராய் நின்று அனைத்தையும் பகலாக்குவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரவி: என்று தொழப்படுகிறார். 

விரோசன: - ஸம்வத்ஸர ரூபமான, ஆண்டின் சுழற்சி உருவாகிய கதிரொளியாய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விரோசன; என்று போற்றப்படுகிறார். 

ஸூர்ய: - எல்லாவற்றையும் உண்டாக்குவதாலும், அருஞ்செல்வத்தை உலகமெல்லாம் தருவதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸூர்ய: என்று போற்றப்படுகிறார். 

ஸவிதா - ஞாயிறால் மழைநலத்தையும் அதனால் உயிர் தழைப்பதையும் செய்யும் அருள் சக்தியாக இருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸவிதா என்று அழைக்கப் படுகிறார். 

ரவிலோசந: - கதிரவனைக் கண்களாக உடையவர் என்ற காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரவிலோசந; என்று கொண்டாடப்படுகிறார்.

(ஸ்ரீபராசர பட்டரின் பாஷ்யத்தில் ஒரு செய்தி - சூரியக் கிரணங்கள் பிரவேசிப்பதால்தான் சந்திரன் முதலியவற்றின் பிரகாசம் ஏற்படுகிறது.) 

***

No comments:

Post a Comment