Thursday, December 16, 2021

ஸத்த்வவாந் ஸாத்த்விக:

ஸத்த்வவான் ஸாத்த்விக: ஸத்ய: ஸத்யத4ர்மபராயண: | 
அபி4ப்ராய: ப்ரியார்ஹோSர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்த4ன: || 


ஸத்த்வவான் - ஜீவர்கள் முக்தி பெறுவதற்கு முதலில் முக்கியமானது அவற்றினுள்ளே ஸத்வ குணம் தலை தூக்க வேண்டும் ஆகையால், அந்த ஸத்வ குணத்தை உயிர்களுக்குத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்த்வவான் என்று கொண்டாடப்படுகிறார். 

ஸாத்த்விக: - ஸத்வ குணத்தால் ஞானம், ஆத்மகுணங்கள், தேஜஸ், வீர்யம் ஆகிய தகுதிகள் ஏற்பட்டு அதனால் மோக்ஷ சிந்தையானது ஏற்படுவதை ஸாத்த்விகம் என்ற வார்த்தை குறிப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸாத்த்விகர் என்று சொல்லப் படுகிறார். ( மோக்ஷம் இச்சேத் ஜநார்தனாத் ) 

ஸத்ய: - ஸாத்விக சாத்திரங்களால் சொல்லப்படும் மகிமை உடையவர் என்பதாலும், ஸத்யம் என்பதற்கு ஆதாரம் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்யர் எனப்படுகிறார். 

ஸத்யதர்மபராயண: - ஸத்யத்தையே தர்மமாக உடைய நிவ்ருத்தி தர்மத்தைப் பெரிதும் உகந்து போற்றுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்யதர்மபராயணர் என்று கொண்டாடப் படுகிறார். 

அபிப்ராய: - ஸத்வ குணம் ஓங்குவதால் ஸாத்விக தர்மத்தைக் கைக்கொண்டவர்கள் அனைவரும் மாற்றுக் கருத்தே இன்றி மோக்ஷத்திற்கான ஒரே புகலாகக் கொள்ளும் அபிப்ராய வடிவாகத் திகழ்பவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஆனதினால் அவர் அபிப்ராயர் எனப்படுகிறார். 

( ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்யச புனப்புன: |
இதம் ஏகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா || 

அனைத்து சாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் நன்கு ஆலோசித்து விசாரித்துப் பார்த்ததில் இந்த ஒன்றே மிக நிச்சயமாகவும் தெளிவாகவும் தெரிய வருகின்றது. - நாராயணனையே எப்பொழுதும் தியானிக்க வேண்டும். 
(வியாசர்) 

நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்!
(பரிபாடல்) ) 

ப்ரியார்ஹ: - பிரேமையுடன் வந்தடையும் ஞானிக்கு வந்தடையத்தக்க ஒரே புகலிடமாக இருப்பவர் ஆகையாலே ப்ரியார்ஹ: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கொண்டாடப்படுகிறார். 

அர்ஹ: - தமக்கான காப்பு, தாம் மோக்ஷம் அடைவதற்கான நெறி, தாம் அடையும் உயர்ந்த பேறு என்று அனைத்து விதத்திலும் பிறிதொன்றின்பால் செல்லாத சிந்தையால் பக்தியுடன் விரும்பப்படத்தக்க ஒரே தத்துவமாக இருப்பவர் ஆகையாலே அர்ஹ:. 

ப்ரியக்ருத் - ஞானிக்குத் தாம் பிரியமானவர் என்றும், ஞானி தமக்குப் பிரியமானவன் என்றும் தாமே சொல்லியிருப்பதற்கேற்பத் தம்மை நாடிப் பக்தி செய்வோர்களைப் பிறிதொரு பலன் கருதாது தம்மையே வேண்டும்படியான தமக்குப் பிரியமானவர்களாய் ஆக்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ரியக்ருத் எனப்படுகிறார். 

ப்ரீதிவர்தன: - உலக விஷயங்களில் விரக்தி முழுமையாகவும், ஜீவனின் இயல்பான ஞானம் நன்கு மலர்வதால் தனக்கு, தான் உணராத காலம் தொட்டே, நன்மையைச் செய்து வருபவர் தன்னுடைய உயிரான ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதை உணர உணர மேன்மேலும் ப்ரீதி அளவிறந்து வளர்ந்து கொண்டே போகும்படி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ரீதிவர்தன: என்று போற்றப் படுகிறார். 

***

No comments:

Post a Comment