Thursday, December 16, 2021

உத்தாரணோ துஷ்க்ருதிஹா

உத்தாரணோ து3ஷ்க்ருதிஹா புண்யோ து3:ஸ்வப்நநாந: | 
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தி2த: || 


உத்தாரண: - ஸம்ஸாரச் சுழலிலிருந்து காப்பாற்றி மேலெடுத்து மோக்ஷம் தந்து நித்ய நிலையைத் தருகிறார் என்பதால் உத்தாரண: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் போற்றப்படுகிறார். 

துஷ்க்ருதிஹா - நன்மையைக் காப்பது மட்டுமின்றித் தீமையைச் சிறிதும் கருணையின்றித் தவறாமல் அழிக்கவும் செய்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் துஷ்க்ருதிஹா என்று சொலப்படுகிறார். 

புண்ய: - தம்மைச் சரணடைந்தோருக்குத் தாமே மிகச்சிறந்த புண்ணியமாகவும் இருப்பவர் ஆதலால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்ய: என்று போற்றப்படுகிறார். 

(நன்மைசேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி, எண் இல் மூர்த்தியாய், நாக மூர்த்தி சயனமாய் -- திருச்சந்தவிருத்தம்)

து:ஸ்வப்நநாசந: - ஸ்ரீகஜேந்திர மோக்ஷத்தில் கூறியவாறு காப்பாற்றப்பட்ட சாதுக்களையும், காப்பாற்றிய தம்மையும் நினைப்பவர்களை நலியும் கெட்ட கனவுகளை நாசம் செய்து விடுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் து:ஸ்வப்நநாசநர் என்று தொழப்படுகிறார். 

வீரஹா - ஜீவர்களை முக்தி பெற மாட்டாமல் தடுக்கும் பல வழிகளையும் தடுத்து நற்கதி அருள்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வீரஹா என்று போற்றப்படுகிறார். 

ரக்ஷண: - உடலால், உள்ளத்தால், உயிர்க்கு உற்ற நல் துணையால் ஆன்ற காப்புகள் அனைத்தும் சரணடைந்த ஜீவர்களுக்குச் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரக்ஷண: என்று போற்றப்படுகிறார். 

ஸந்த: - காப்பதோடன்றி அவர்களை ஆன்மிக உணர்விலும், அதனடியாகப் பகவானாகிய தம்மிடத்தில் ஊன்றிய பக்தியிலும் எக்கணமும் நன்கு வளரும்படி வளர்ப்பதால் அவர்களை நன்கு இருப்பவர்களாக ஆக்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸந்த: என்று கொண்டாடப்படுகிறார். 

ஜீவந: - தம்மைச் சரணடைந்தாரின் யோக க்ஷேமங்களைத் தாம் வகிப்பதோடன்றித் தம்மால் ஒறுக்கப்பட்ட தீயோரும் நல்வழியில் வாழும்படிச் செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜீவந: என்று சொல்லப்படுகிறார். 

பர்யவஸ்தித: - அன்பினால் ஜீவராசிகளைச் சூழ்ந்தும், உள்நின்றும் காத்துத் திருத்தி நல்வழிப்படுத்தித் தம்மிடம் வந்து சேரும்படிச் செய்யும் தயாமூர்த்தியாக எப்பொழுதும் நிலைநிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்யவஸ்தித: என்று தொழப்படுகிறார். 

***

No comments:

Post a Comment