Thursday, December 16, 2021

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த:

ஸுலப4: ஸுவ்ரத: ஸித்3த4: த்ருஜித் த்ருதாபந: | 
ந்யக்3ரோத4: உது3ம்ப3ர: அச்வத்த2: சாணூராந்த்4ர நிஷூத3ந: || 


ஸுலப: - உலகத்தில் மிகச்சுலபமாகக் கிடைக்கும் பொருட்கள் என்ன என்ன உண்டோ அவற்றையெல்லாம் விட அதி சுலபம் ஆனவர் ஆக அவர் என்றும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சுலபர் எனப்படுகிறார். 

(அய்யே அதிசுலபம் - ஆன்ம வித்தை
அய்யே அதிசுலபம் ! -- ஸ்ரீரமண மஹரிஷி ) 

ஸுவ்ரத: - அடைவதற்குச் சுலபனாய் இருப்பவர் அடைந்தவரைக் காப்பதில் சிறிதும் கூடத் தளர்ச்சி இன்றி, அலட்சியம் இன்றிச் சரணடைந்தாரைக் காப்பதுவே தம் உறுதியான விரதமாகக் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவ்ரதர் எனப்படுகிறார். 

ஸித்த: - உயிருக்கு அவர் ரக்ஷகராய் இருப்பது என்பது ஜீவன் ஏதோ சாதனத்தை அனுஷ்டித்து அதன் விளைவாக ஏற்படும் காப்பு என்று இராமல் ஜீவனுக்கும் தமக்கும் உள்ள ஒழிக்கவியலா இயற்கையான சம்பந்தத்தால் அவர் ஏற்கனவே ஸித்தமாக இந்த ஜீவனுக்கு ரக்ஷகராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸித்தர் என்று அழைக்கப் படுகிறார். 

’ நெறிகாட்டி நீக்குதியோ? ‘ 

சத்ருஜித் - பகைவர்களை வென்றவர்; சத்ருதாபந: - பகைவர்களை வாட்டுகின்றவர்

உயிரோடு பகையான உடல் வாடி நாசம் உறுகிறது என்பதைப் போல உயிருக்கு உயிரான ஸ்ரீமஹாவிஷ்ணுவோடு பகைத்தவர்கள் தீராத தாபத்தால் பீடிக்கப் பட்டு, பின்னர் அவருடைய காரணமற்ற கருணையால் ஜயிக்கப்படுகிறார்கள். அவரைத் தம்முடைய அந்தராத்மா என்று அறியாமையால் பகைப்போருக்கு அவன் அருளும் வாழ்ச்சியே அவர்களை ஜயிப்பது ஆகையாலே இந்த இரட்டை நாமத்தாலும் சத்ருஜித்-சத்ருதாபநர் என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவே அழைக்கப்படுகிறார். 

ந்யக்ரோத; உதும்பர: - மண்ணுள்ளார் உய்ய, வன்பெரு வானகம் உய்ய எளிமையும் பெருமையும் உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ந்யக்ரோத: உதும்பர: என்று அழைக்கப் படுகிறார். 

அச்வத்த: - நித்யப் பொருள்களாக மட்டும் தாம் இராமல் அநித்யப் பொருள்களாகவும், ஒரு காலத்தில் முடிவு பெறும் அநித்யப் பதங்களாகவும், அந்தப் பதங்களுக்குரிய தேவர்களாகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அச்வத்தர் எனப்படுகிறார். 

(அச்வத்தம் - மேலே வேரும் கீழே கிளைகளும் பரப்பி வளரும் உலகப் பெருமரம்.) 

சாணூராந்த்ரநிஷூதந: - சாணூரன் ஆகிய அந்த்ரனை, அவன் தேவர்களுக்கும், உலகத்தினருக்கும் துன்பம் இழைத்ததால் அந்த மல்லனை ஸம்ஹாரம் செய்தவர். 

***

No comments:

Post a Comment