Friday, October 29, 2021

ஓஜஸ்தேஜோ த்3யுதித4ர:

ஓஜஸ்தேஜோ த்3யுதித4ர: ப்ரகாசாத்மா ப்ரதாபந: | 
ருத்3த4: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரச்சந்த்3ராம்சுர் பா4ஸ்கரத்3யுதி: || 



ஸ்ரீமஹாவிஷ்ணுவின் விச்வரூபத்தைப் பற்றிய திருநாமங்கள் தொடர்கின்றன. பொருட்களை விளங்கச் செய்வது ஒளி என்று சாத்திரங்கள் கூறும். புறப்பொருட்களையும், மனத்தில் இருக்கும் பொருட்களையும் அவ்வவ்வொளிகள் விளக்கும். அனைத்து ஒளிகளாகவும் திகழ்வதோ நாராயண: பரோ ஜ்யோதி: என்னும் ஸ்ரீமந்நாராயணனே என்று காட்ட வேண்டி பீஷ்மாசாரியார் ஒளியின் திகழ்ச்சிகளைக் கூறுகிறார். 

ஓஜஸ்தேஜோத்யுதிதர: - ஒளியின் திகழ்ச்சிக்கு அடிப்படை ஒன்று தன் சொந்த இயல்பில் பொருந்தி நிற்பது. அவ்வாறு சுயநிலை நிற்கும் ஆற்றல் ஓஜஸ்; சுயநிலையினின்றும் பிறழச் செய்யும் வேகங்களைத் தடுத்து விலக்கல் தேஜ: தன்னிலையில் நின்று தன்னியல்பில் ஒளிர்தல் த்யுதி. த்யுதியை தரித்து நிற்பவர் த்யுதிதர: இத்தகைய முத்திறன்கள் விளங்கும் இடமெல்லாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சாந்நித்யம் ஆகும். எனவே அவருக்கு ஓஜஸ்தேஜோத்யுதிதர: என்றே திருநாமம். 

ப்ரகாசாத்மா - அனைவருக்கும் பொதுவாக விளக்கம் தரும் பேரொளியாவது ஆத்ம ஒளி. எனவே ப்ரகாசாத்மா. 

ப்ரதாபந: - பிரகாசத்தை விரும்பாமல் வெறுக்கும் அவற்றைத் தபித்து வற்றச் செய்யும் காரணத்தால் ப்ரதாபந: 

ருத்த: - அனைத்து கல்யாண குணங்களும் கடல் போன்று நிரம்பி நிறைவாக இருப்பவர் ஆதலால் ருத்த: 

ஸ்பஷ்டாக்ஷர: - எழுத்தும் சொல்லும் பத சக்தியினால் விளக்கம் தரும் ஒளிகளாம். சொற்களில் மிக்குயர்ந்த சொல்லான வேதங்கள் பரம்பொருளை விளக்கும் ஆகையாலே ஸ்பஷ்டாக்ஷர: 

மந்த்ர: - தம்மை விளக்கும் மந்த்ரங்களை தியானிப்போருக்கு காப்பாக இருப்பவர் ஆகையாலே மந்த்ர: 

சந்த்ராம்சு: - தியானத்தில் ஜீவனுக்குக் குளிர்த்தியைத் தரும் நிலவொளியாய் இருப்பவர் ஆகையாலே சந்த்ராம்சு: 

பாஸ்கரத்யுதி: - பக்தியால் துய்ப்போருக்கு நிலவொளியாய் மகிழ்விக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஞானத்தால் உணருங்கால் பகலொளியாய், ஞாயிறாக நின்று அறிவுப் பகல் செய்பவர் ஆகையாலே பாஸ்கரத்யுதி: 

***

No comments:

Post a Comment