Wednesday, March 30, 2022

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பூர்வாங்க சுலோகங்கள் - இரண்டாம் பகுதி

ஸ்ரீவைசம்பாயன உவாச -- 

ச்ருத்வா த4ர்மாந் அசேஷேண 
பாவநாநி ச ஸர்வ: | 
யுதி4ஷ்டிர; சாந்தநவம் 
புநரேவ அப்4யபா4ஷத || 

சிறிதும் மிச்சமில்லாமல் தர்மங்கள் அனைத்தையும் கேட்டான். தூய்மைப் படுத்துவனவாகும் அனைத்தும். கேட்டுவிட்டு யுதிஷ்டிரன் சந்தனு புத்திரனை மீண்டும் வினவினான். 

யுதிஷ்டிர உவாச -- 

கிமேகம் தை3வதம் லோகே 
கிம் வாப்யேகம் பராயணம் | 
ஸ்துவந்த: கம் கமர்சந்த: 
ப்ராப்னுயுர் மாநவா: சுப4ம் || 

சாத்திர உலகில் ஒரு பெரும் தெய்வமாகக் காணப்படுவது யார், தங்களின் கருத்துப் படி? சென்றடையத்தக்க ஒரே புகலிடம் எது தங்கள் நோக்கில்? யாரை துதிப்பதால். யாரை அர்ச்சனை செய்து பூஜிப்பதால் மனித குலம் உயர்ந்த சுபம் என்பதை அடையும்? 

கோ த4ர்ம: ஸர்வத4ர்மாணாம் 
ப4வத: பரமோ மத: | 
கிம் ஜபந் முச்யதே ஜந்து: 
ஜன்ம ஸம்ஸார ப3ந்த4னாத் || 

அனைத்து தர்மங்களிலும் உயர்ந்த தர்மம் என்பது எது, தங்கள் கருத்தில்? யாருடைய திருநாமத்தை ஜபம் செய்வதால் பிறக்கும் ஜந்துக்கள் பிறவியாகிய ஸம்சாரக் கட்டிலிருந்து விடுபட முடியும்? 

ஸ்ரீபீஷ்ம உவாச -- 

ஜக3த்ப்ரபு4ம் தே3வதே3வம் அநந்தம் புருஷோத்தமம் | 
ஸ்துவந் நாமஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தி2த: || 

உலகிற்கு ப்ரபுவாய் இருப்பவரும், தேவர்களுக்கெல்லாம் தேவரும், காலத்தால், இடத்தால், பொருள்தன்மையால் ஒருநாளும் எல்லைப்படுத்தப்படாதவரும், புருஷோத்தமரும் ஆனவரை அவரது ஆயிரம் நாமங்களால் துதிப்பதன் மூலம் மனிதன் எப்பொழுதும் துயர் நீங்கி உயர்நிலையை அடைகின்றான். 

தமேவ சார்ச்சயந் நித்யம் ப4க்த்யா புருஷமவ்யயம் | 
த்4யாயந் ஸ்துவந் நமஸ்யம்ச்ச யஜமானஸ் தமேவ ச || 

குறைவே அற்ற அந்தப் புருஷோத்தமரையே நித்யமும் அர்ச்சிப்பவனாய், பக்தியுடன் பூஜிப்பவனாய், மனத்தால் தியானித்து, வாக்கால் துதித்து, தேகத்தால் வணங்கி வழிபடும் அந்த யஜமானன் (பலனை அனுபவிப்பவன்) துக்கம் நீங்கி சுகம் அடைகிறான். 

அநாதி3நித4னம் விஷ்ணும் ஸர்வலோக மஹேச்வரம் | 
லோகாத்4யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வ து3க்கா2திகோ3 ப4வேத் || 

ப்3ரஹ்மண்யம் ஸர்வத4ர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்த4னம் | 
லோகநாத2ம் மஹத்3பூ4தம் ஸர்வபூ4த ப4வோத்3ப4வம் || 

தோற்றம் கேடு எதுவும் அற்றவர், அங்கிங்கென்னாதபடி எங்கும் பரந்த விஷ்ணுவானவர், அனைத்து உலகங்களுக்கும் மகத்தான ஈசுவரர், உலகங்களை எல்லாம் பிறழாமே நோக்குபவர், வேதங்கள் அனைத்தும் விளக்கும் பரம்பொருள், அனைத்து தர்மங்களும் அறிந்தவர், உலகங்கள் எங்கும் உள்ள உயிர்களால் பரவப்படுபவர், உலகங்கள் அனைத்திற்கும் நாதன் ஆனவர், மகத்தான ஐஸ்வர்யம் அளவில்லாமல் நிறைந்தவர், அசித்தினின்றும் சித் தத்துவம் துலங்கி எழக் கருணை புரிபவர் -- அவரையே நித்யமும் துதிப்பதால் துக்கத்தை எளிதில் கடந்து போகிறான் மனிதன். 

ஏஷ மே ஸர்வத4ர்மாணாம் த4ர்மோSதி4கதமோ மத: | 
யத்ப4க்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்ச்சேந் நர: ஸதா3 || 

தாமரைக்கண்ணன் ஆன விஷ்ணுவை பக்தியுடன் என்று துதித்துப் பூஜிக்க வேண்டும் எப்பொழுதும் மனிதன் என்பவன் என்னும் இதுவே தர்மங்கள் அனைத்திலும் பார்க்க மிக உயர்ந்ததும் முக்கியமானதுமான தர்மம் என்பதுவே என் கருத்தாகும். 

பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: | 
பரமம் யோ மஹத்3ப்3ரஹ்ம பரமம் ய: பராயணம் || 

யார் இந்த ஜீவனைக் கவிந்திருக்கும் அஞ்ஞான இருளை அகற்றி விளக்கம் தரும் உன்னத ஒளியாக இருக்கின்றாரோ, அந்த உன்னத ஒளியைப் பெற யார் உற்ற நல் அருந்தவமாகத் தாமே விளங்கி ஜீவனைக் கரை சேர்க்கின்றாரோ, எந்த ஜீவனும் சொந்த முயற்சியால் ஒரு காலத்தும் அடைய முடியாத அந்த சத்யம் ஞானம் அநந்தம் என்னும் மஹத்தான பிரம்மமாக யார் விளங்குகின்றாரோ, யாரை அடைவதால் பிறவித்தொடர் முற்றும் நின்றுவிடுகிறதோ யாரை அடைந்தபின்னர் ஸம்ஸாரகதியில் ஒருநாளும் இந்த ஜீவன் மீட்டும் வருவதில்லையோ அவரே ஜீவனுக்கும் உயர்ந்த புகலிடமாக இருப்பவர். அவரே சிறந்த பராயணம் ஆகத் திகழ்பவர். 

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்க3ளானாம்ச மங்க3ளம் | 
தை3வதம் தே3வதானாம் ச பூ4தானாம் யோSவ்யய: பிதா || 

தூய்மையைத் தரும் தீர்த்தம் ஸ்தலம் முதலிய அனைத்திற்கும் தூய்மையை நல்குபவர் யாரோ, மங்களமான அனைத்திற்கும் மங்களம் தருபவர் யாரோ, தேவர்களிலெல்லாம் சிறந்த தெய்வம் யாரோ அவரே உயிர்களுக்கு என்றும் அழியாத பிதாவாக இருக்கின்றவர். 

யத: ஸர்வாணி பூ4தாநி ப4வந்த்யாதி3 யுகா3க3மே | 
யஸ்மிம்ச்ச ப்ரளயம் யாந்தி புநரேவ யுக3க்ஷயே || 

தஸ்ய லோகப்ரதா4னஸ்ய ஜக3ந்நாத2ஸ்ய பூ4பதே | 
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ச்ருணு பாபப4யாபஹம் || 

யுகத்தின் ஆதியில் அனைத்து பூதங்களும் யாரிடமிருந்து உண்டாகிறதோ, பிரளயம் வரையில் யாரிடம் நிலைபெற்றுப் பின்னர் பிரளயத்தின் போது யுகம் முடிவுறும் தருணத்தில் யாரிடம் இலயம் அடைகின்றனவோ, சாத்திரங்கள் ஆகிய உலகில் யார் பிரதானமாகக் கூறப்படுள்ளாரோ, யார் ஜகந்நாதரோ அந்த விஷ்ணுவினுடைய நாமங்கள் ஆயிரத்தை, பாபத்தின் பயத்தைப் போக்கும் அந்த ஸஹஸ்ரநாமங்களை என்னிடம் கேட்பாயாக ஹே புவியாளும் மன்னனே ! 

யாநி நாமாநி கௌ3ணாநி விக்2யாதாநி மஹாத்மந: | 
ரிஷிபி4: பரிகீ3தாநி தாநி வக்ஷ்யாமி பூ4தயே || 

எந்த நாமங்கள் அவன் சம்பந்தமான வஸ்து, வகை, குணம், கிரியை என்று நிமித்தமாகப் பிரபலம் ஆயிற்றோ, எங்கும் மகாத்மாக்களால் கொண்டாடப்பட்டு பிரசித்தி ஆயிற்றோ, ரிஷிகள் அனைவராலும் பகவான் சம்பந்தமான சூழல்களில் உள்ளம் தோய்ந்து பாடப்பட்டதோ அந்த நாமங்களை உயிர்கொண்டு உலவும் ஜீவன்கள் வாழ்ச்சி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் நான் சொல்கிறேன். 

இதை விவரித்து முன்னர் எழுதியதை இங்கே காணலாம் --> 


ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment