Thursday, December 16, 2021

ப்ரமாணம் ப்ராணநிலய:

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணத்4ருத் ப்ராணஜீவந: | 
தத்வம் தத்வவிதே3காத்மா ஜன்மம்ருத்யு ஜராதிக3: || 



ப்ரமாணம் -- அறியாமை, ஒன்றை வேறொன்றாக அறிதல், விபரீதமாக அறிதல் என்பவை அறிவதில் உண்டாகும் மூன்று குறைகள். இந்த மூன்று குறைகளும் அற்ற ஐயம் திரிபு இல்லாத அறிவை எது ஏற்படுத்துமோ அதற்குப் பிரமாணம் என்று பெயர். மயர்வற மதிநலம் தருபவர் அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவே பிரமாணம் எனப்படுகிறார் 

ப்ராணநிலய: -- பறவைகள் தம் கூட்டில் சென்று அடைவது போன்று அவரிடமே உயிர்வர்க்கங்கள், ஜீவர்கள் புகலாக அடைகின்றனர்; அன்றாடம் வாழ்க்கையில் பிராணன்களும் அவரிடமே இலயம் அடைகின்றன என்பதால் ப்ராணநிலய: 

ப்ராணத்ருத் -- பெற்ற தாயாய்த் தந்தையாய் ஜீவர்களைத் தாங்குவதால் அவர் ப்ராணத்ருத் 

ப்ராணஜீவந: -- உடலில் ஜீவர்கள் தங்கி ஜீவிதம் நடைபெறப் பிராணன்களை அவரே நோக்கி நடத்துவதால் ப்ராணஜீவந: 

தத்வம் -- அறியப்படும் பொருளின் உள்ளது உள்ளபடியான மாறா இயல்பிற்குத் தத்வம் என்று பெயர். பிரபஞ்சம் அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பவை ஆகையால் மாறாத தத்வம் பரமாத்மாவே என்பதால் அவருக்குப் பெயரே தத்வம். 

தத்வவித் -- அறியப்படும் பிரபஞ்சத்தின் உள்ளபடியான தத்வமாக அவர் இருப்பதுமட்டுமின்றி அறியும் சித் என்னும் ஜீவனின் உள் தத்வமாகவும் அவரே இருக்கிறார் 

ஏகாத்மா -- சித், அசித் என்னும் இரண்டும் அவருக்குச் சேஷமாகவும், அவருக்குச் சரீரமாகவும் இருப்பவை ஆதலால் அவர் ஒருவரே ஒரே ஆத்மாவாக ஏகாத்மா என்று அழைக்கப்படுகிறார். 

ஜன்மம்ருத்யுஜராதிக: -- அவ்வாறு அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய் அவர் இருப்பினும் ஜீவர்கள், உலகப் பொருட்கள் ஆகியவற்றின் மாற்றங்கள், குறைகள் ஆகியவை தம்மிடம் நிழலாடாத வகையில் அவற்றைக் கடந்தவராக இருக்கிறார் 

***

No comments:

Post a Comment