Thursday, December 16, 2021

அநந்த ஹுதபுக் போக்தா

அநந்த ஹுதபு4க்3 போ4க்தா ஸுக2தோ3 நைகஜோSக்3ரஜ: | 
அநிர்விண்ண: ஸதா3மர்ஷீ லோகாதி4ஷ்டா2நம் அத்3பு4த: || 


அநந்தஹுதபுக்போக்தா - காலத்தாலும், இடத்தாலும், பொருள் தன்மையாலும் அளவுபடுத்தப்படாதவர், தம்முள் அனைத்துப் பொருள்களும் பிரபஞ்சம் முழுவதும் வேள்வியாக நடைபெறத் தக்க வகையில் அனைத்து முயற்சிகளையும் தாம் ஏற்று, அனைத்துப் பலன்களையும் தாமே தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஹுதபுக்போக்தா என்று போற்றப்படுகிறார். 

ஸுகத: - உண்மையான உயர்ந்த மோக்ஷ சுகத்தைத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சுகத: என்று போற்றப்படுகிறார். 

நைகஜ: - பக்தர்களுக்கு முக்தியை விளைவிக்கப் பல வழிகளிலும் தாம் தோன்றி அருள் பாலிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நைகஜ: என்று கொண்டாடப்படுகிறார். 

அக்ரஜ: - முக்தர்களுக்குப் பரமானந்தத்தை விளைவிப்பவராய் என்றும் முன்னின்று பிரகாசிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரஜ: என்று சொல்லப்படுகிறார். 

அநிர்விண்ண: - தம்மை அண்டிய ஜீவனைத் தாம் அந்த ஜீவன் அண்டுவதற்கு வெகுகாலம் முன்னம் இருந்தே அதைக் கரையேற்றுவதற்காகப் பெரும் பிரயத்தனங்கள் எடுத்து, எப்பொழுது ஜீவன் தாம் செய்யும் ரக்ஷணத்தை விலக்காமலும் வெறுக்காமலும் மனம் ஒப்பி இசையுமோ என்று காலம் பார்த்து இருந்தவர் ஆதலால், ஜீவன் தம்மை அண்டியவுடன் மிக விரைவாக அதைக் கரையேற்றிவிட்டுச் சிறிதும் பின்னர் தாம் கவலையின்றி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநிர்விண்ண: என்று கொண்டாடப் படுகிறார். 

ஸதாமர்ஷீ - தாம் அருள் செய்து உய்யக் கொண்ட பக்தர்கள் தாங்கள் செய்யும் கைங்கரியங்களில் நேரும் தவறுகளை அன்புடன் சகித்துக் கொள்பவர் ஆகையாலே ஸதாமர்ஷீ என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சொல்லப் படுகிறார். 

லோகாதிஷ்டாநம் - உலகின் தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகிய அனைத்திற்கும் தாம் ஆதாரமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லோகாதிஷ்டாநம் என்று போற்றப் படுகிறார். 

அத்புத: - என்றும் இமையா நாட்டத்து நித்ய சூரிகள் கால அவதியின்றி நோக்கிக் களித்தாலும் அவர்களுக்கும் கணம் தொறும் புதுமையாக இருப்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அத்புதர் எனப்படுகிறார். 

***

No comments:

Post a Comment