Sunday, October 24, 2021

பிரணவமும் நமஸ்காரமும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம் என்கிறோம். பிறகு நாமாவளி என்கிறோம். நூல்களிலும் முதலில் செய்யுள் வடிவில் இரண்டு இரண்டு வரிகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள். அப்புறம் வரிசையாகப் பெயர்ப் பட்டியல் மாதிரி போட்டு எல்லா நாமங்களிலும் தொடக்கத்தில் பிரணவமும், அந்த நாமத்தின் முடிவில் நம: என்றும் போட்டு முடித்திருக்கிறார்கள். 

அப்படியென்றால் ஸ்தோத்திரம் என்றால் என்ன? நாமாவளி என்றால் என்ன? இரண்டு விதங்களிலும் அதே ஆயிரம் நாமங்கள்தாமே வருகின்றன? என்று ஒரு நண்பர் கேட்டார். அவருக்குத் தந்த விளக்கத்தை இங்கேயும் தருகிறேன். 

ஸ்தோத்திரம் என்பது பகவானின் நாமங்களைச் செய்யுள் வகை ஒன்றில் பாக்களாகச் சேர்த்துத் தரப்படும் வடிவம். இங்கு அனுஷ்டுப் என்னும் சந்தத்தில் ஸ்ரீவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களும் செய்யுள் வடிவில் தரப்பட்டிருக்கின்றன. இப்படித் தந்தால் அந்த வடிவத்தில் அதற்குப் பெயர் ஸ்தோத்திரம். 

சரி. அனுஷ்டுப் சந்தம் என்றால் என்ன? அதாவது வடமொழியில் பொதுவாக ஒரு செய்யுள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வரிகள் இருக்கும். முதல் வரியின் முடிவில் | - இப்படி ஓர் ஒற்றைக் கோடு இட்டிருக்கும். இரண்டாவது வரி அந்தச் செய்யுளின் முடிவு வரியாக இருக்கும். அதன் முடிவில் || - இப்படி இரண்டு செங்குத்துக் கோடுகள் இடப்படும். அப்படி இட்டால் அந்தச் செய்யுள் முடிவடைகிறது என்று பொருள். 

ஒவ்வொரு வரியையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதிக்கும் பாதம் என்று பெயர். அப்படி என்றால் ஒவ்வொரு செய்யுளிலும் இரண்டுவரிகள் இருக்கும். ஒவ்வொரு வரியிலும் இரண்டு பாதங்கள் இருக்கும். ஆக மொத்தம் ஒவ்வொரு செய்யுளும் நான்கு பாதங்கள் கொண்டது. ஒவ்வொரு பாதத்திலும் எண்ணினால் எட்டு உயிரெழுத்துகள் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வரிக்கும் 16 உயிரெழுத்துகள். முழுச் செய்யுளுக்கு 32 உயிரெழுத்துகள். அப்படி உள்ள செய்யுளுக்கு அனுஷ்டுப் சந்தஸ் என்று பெயர். 

இப்பொழுது தர்ம புத்திரன் கேட்ட கேள்வி ச்லோகம், அதையே எடுத்துக்கொள்வோம். 

கிமேகம் தை3வதம் லோகே கிம்வாப்யேகம் பராயணம் | 
ஸ்துவந்தக்கம் கமர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா:சுப4ம் || 

இதில் 1) கிமேகம் தைவதம் லோகே, 2) கிம்வாப்யேகம் பராயணம், 3) ஸ்துவந்தக்கம் கமர்ச்சந்த:, 4) ப்ராப்நுயுர் மாநவா:சுபம் - என்பன நான்கு பாதங்கள். 

ஒவ்வொரு பாதத்திலும் எண்ணிப்பாருங்கள். எட்டு உயிரெழுத்துகள் இருக்கும். இப்படிப் பாடுவது அனுஷ்டுப் சந்தஸ். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் முழுவதும் இப்படி அனுஷ்டுப் சந்தஸில் பாடப்பட்டிருக்கிறது. இது ஸ்தோத்திரம். 

இந்த ஸ்தோத்திரம் தொடங்கும் போது ஹரி: ஓம் என்று ஹரி நாமத்தோடும், பிரணவத்தோடும் தொடங்கி முடிவில் ஸர்வப்ரஹரணாயுத ஓம் நம இதி என்று நமஸ்காரத்தில் முடிகிறது. அதாவது இது எப்படி என்றால் ராமா கிருஷ்ணா கோபாலா நாராயணா அச்சுதா என்று வரிசையாகக் கூப்பிட்டு உனக்கு நமஸ்காரம் என்று ஸ்தோத்திர முடிவில் வணங்குவது.

இனி நாமாவளி என்னும் வடிவத்திற்கு வருவோம். ஒவ்வொரு நாமத்தையும் ப்ரணவத்தோடு சொல்லி இன்ன பெயர் கொண்ட கடவுளே உனக்கு நமஸ்காரம் என்று முடித்து, மீண்டும் அடுத்த நாமத்திற்கும் அப்படியே செய்வது. இந்த  வடிவத்தில் ஒவ்வொரு நாமத்தோடும் நான்காம் வேற்றுமை உருபு சேரும். ராமனுக்கு, கிருஷ்ணனுக்கு, நாராயணனுக்கு, அச்சுதனுக்கு என்று. 

ஏன் ப்ரணவம் சொல்லவேண்டும்? ஏன் சொல்கிறோம்? அங்குதான் ஒரு முக்கியமான சூக்ஷுமம் இருக்கிறது. நாம் யாரையாவது மனிதர்களைப் பார்த்தால் அவர் பெயரைச் சொல்லியே நினைத்தோ வணக்கம் சார் என்கிறோம். இங்கு நாம் வணங்குவது ஓர் ஆளை அன்று. ஏதோ பெரிய அதிகாரி, சக்ரவர்த்தி என்பவரை நாம் வணங்கவில்லை. நாம் இங்கு வணங்குவது எல்லாம் அனைத்துப் பிரபஞ்சமாகவும் ஆகி, அனைத்தினுள்ளும்  இருக்கும் அந்தப் பரம தத்துவமான ஆத்மாவையே, பரமாத்மாவையே நாம் வணங்குகிறோம். அந்தப் பரமாத்மாவைக் குறிப்பிடும் பெயர் பிரணவம். 
எனவேதான் பிரணவத்தைச் சொல்லி வணங்குகிறோம். பரமாத்மாவாகிய ராமனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய கிருஷ்ணனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய அச்சுதனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய நாராயணனை வணங்குகிறேன் என்பதை நமக்கு மனத்தில் தியானிக்கப் பிரணவம் தூண்டுகிறது. 

அந்தந்த நாமத்தின் முடிவில் நம: என்பது என்ன? நம: என்பதில் இரண்டு எழுத்துகள் உள்ளன. ந + ம:. ம: என்றால் எனக்கு என்று பொருள். அதனோடு ந என்னும் எதிர்மறை ஒட்டைச் சேர்த்தால் எனக்கு இல்லை என்று பொருளாகும். எனவே ஒவ்வொரு நாமத்தையும் 'பரமாத்மாவுக்கு என்னை நான் உரியவன் என்று உணர்கிறேன், நான் எனக்கு உரியவன் இல்லை' - என்று பரமாத்மாவிடம் நம் அஹங்கார மமகாரங்களை அதாவது நான் எனக்கு என்னும் எண்ணங்களை ஒப்படைத்துவிடுதலுக்குப் பெயர்தான் நமஸ்காரம். 

ஆனால் எல்லோரும் சர்வ சாதாரணமாகத் தெருவில் யாரையாவது பார்த்தால் கூட 'நமஸ்காரம் சார்' என்கிறோம். என்ன பொருள் இருக்கிறது? நாம் நமஸ்காரம் என்பதன் பொருளைச் சரியாக உணராததால் அப்படிச் சொல்லுகிறோம். பரவாயில்லை. அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று இல்லை. ஆனால் அப்படிச் சொல்வதோடு ஒரு சிந்தனையையும் நாம் மனத்தில் கூடச் சேர்த்துக்கொண்டால் போதும் அதுவே, அதாவது தெருவில் யாரையாவது நாம் பார்த்துச் சொல்லும் வணக்கமே, நமஸ்காரமே கூட உயர்ந்த வழிபாடாக ஆகிவிடும். என்ன சிந்தனையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்? அதாவது நாம் வணங்குவது அந்த மனிதருக்குள் அந்தர்யாமியாக வீற்றிருக்கும் பகவானுக்குத்தான், நாராயணருக்குத்தான் நாம் வணங்குகிறோம் என்ற சிந்தனையைச் சேர்த்துக்கொண்டால் போதும், அங்கும் நம் நமஸ்காரம் பொருள் வாய்ந்ததாக ஆகிவிடும். அப்படி மனிதருக்குள் வீற்றிருக்கும் நாராயணரை அவ்வாறு சிந்தித்து வழிபடுவதே சிறந்த பூஜை என்கிறார் விவேகாநந்தர். நரனுக்குள் நாராயணனை வழிபடுவதே மிக உயர்ந்த பூஜை முறை என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். 

ஆனால் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? கொஞ்சம் ஏடாகூடமாகச் செய்கிறோம். அவ்வளவே. என்னவென்றால் மனிதர்கள் சிலரைத் தெய்வங்களாகக் கருதி வழிபடுகிறோம். சிந்தனை செம்மையானால் செயலும், வணக்கமும் செம்மை ஆம். 

சரி நாமாவளிக்கு வருவோம். அப்படிப் பிரணவத்துடன் நாமம் நமஸ்காரம் ஆகிய வடிவத்தில் ஒவ்வொரு நாமத்தையும் ஜபிக்கும் போது அதுவே சிறந்த தியானமாக ஆகிறது. கூடவே ஒவ்வொரு நாமத்திற்கும் பூக்களை இட்டு நாராயணனைத் தொழுதக்கால் அதுவே சிறந்த அர்ச்சனை ஆகிறது. ஏன் பூக்களை இட்டு அர்ச்சிக்கிறோம்? உள்ளம் என்பது மலர வேண்டும். மலர்ந்த உள்ளத்தில்தான் மாதவன் வீற்று அருள் புரிவான். உள்ளம் மலர்வது என்பது என்ன? உலகக் கவலைகள், ஆசைகள், புலன் நாட்டங்கள், கீழ்மை, பொறாமை, வஞ்சம், அஹங்காரம் ஆகிய வாட்டங்கள் எல்லாம் நீங்கி உள்ளம் உள்முகமாகக் கடவுளை நோக்கி விரிவதுதான் மலர்வது என்று பொருள். அவ்வாறு 'என் உள்ளம் உன்னை நோக்கி மலர வேண்டும்' என்று அவனிடம் பிரார்த்திக்கும் புறச் சடங்கே பூக்களை இட்டு அர்ச்சிப்பதன் உட்பொருள். 

எனவேதான் நாமாவளி என்ற வடிவத்தில் வரிசையாக ஆயிரம் நாமங்களையும் கொடுத்திருக்கிறார்கள். எப்படியும் நாம் இழந்து போகாமல் இருக்க நமது முன்னோர்கள் செய்து வைத்துப் போன நம் சொத்துகள் இவை. 
யார் யாரையோ அர்ச்சிக்கிறோம், யார் யாரையோ துதி பாடுகிறோம், யார் யாரையோ அல்ப விஷயங்களுக்கு வணங்குகிறோம், நாம் வணங்கும் அவர்களோ நமக்கு முன் போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். இது ஒரு பக்கம்.... ஆனால் நம் முன்னோர்களோ நாம் வணங்க வேண்டியது எங்கே எப்படி என்று பல வடிவங்களில் தந்துள்ளனர். ஆனால் அதை நாம் அவமானம் என்று கருதுகிறோம். பரவாயில்லை. தெரிந்துகொள்ளும் வரையில்தானே தடுமாட்டம்!  
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

3 comments:

  1. Sir,excellent hard work.ettu vuyir ezhuthukkal andru.avai vuyirmei ezhuthukkal.

    ReplyDelete
    Replies
    1. In the edition which contains both Sankara Bhashya and Parasara Bhattar Bhashya and their Tamil translation by SRi U Ve M V Ramanujachariya Swami of Mahabharata in Tamil fame, which came in 1943, 'anushtub' is explained like this. 'this Sahasranama is composed in anushtub metre which contains eight vowels per pada' - 'பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்கள் அடங்கிய அனுஷ்டுப் என்னும் சந்தஸில் இந்த ஸஹஸ்ரநாமம் இருக்கிறது.’

      Delete
  2. அருமையான விளக்கத்துடன் இருக்கும் ப்ளாக்.இப்பொதான் நான் பாராயணம் பண்ணும் விஷ்ணு சஹஸ்ரநாமம் முழு சந்தோஷமான அனுபவத்தை தருகிறது.

    ReplyDelete