யக்ஞாந்தக்ருத்3 யக்ஞகு3ஹ்யமந்நமந்நாத3 ஏவ ச ||
யக்ஞப்ருத் -- யக்ஞத்தின் முழுமையையும் பேணிக் காப்பவரும், குறைகளை நிறைவு செய்து முழுமை அடைய வைப்பவரும் அவரே
(யக்ஞம் என்பது தேவதைக்காகச் செய்யப்படும் திரவியத் தியாகம் என்று ஒரு பொருள். மேலும் ஆழ்ந்து நோக்கினால் மனிதன் தன்னிடம் இருக்கும் கண்ணிற்குத் தெரிந்த சௌகரியங்களைக் கண்ணிற்குத் தெரியாததும் எதிர்காலத்தில் மிகுந்த முயற்சியால் அடையப்பட வேண்டியதுமான இலட்சியங்களுக்காகத் தியாகம் செய்துதான் பெற வேண்டியிருக்கிறது. அந்த இலட்சியங்கள் ஆரம்பத்தில் விழுமியங்கள் என்னும் வடிவில்தான் கருத்துகளாக இருக்கின்றன. மிகச் சிறந்த இலட்சியம் கடவுளை அடைதல். ஆத்ம ஞானம் என்னும் பெருநிலை. ஆனால் அதுவோ இன்று கண்ணுக்குத் தெரிவதாக இல்லை. இன்று கண்கண்ட சுகங்களான பொருள், இன்பம் ஆகியவற்றில் நாட்டத்தை விட்டுத்தான் அந்தப் பெரும் இலட்சியத்தை நோக்கிப் பெரும் யக்ஞம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த யக்ஞத்தில் தியாகம் செய்யப்படுவதோ மூன்று விஷயங்கள். ஒன்று நான், எனது என்னும் அகங்காரத்தையும், மமகாரத்தையும் தியாகம் செய்தல். இரண்டு, நான் தான் செயல்களைச் செய்கிறேன் என்னும் கர்த்தா என்னும் எண்ணத்தை விடுதல். மூன்று பலன்களில் நாட்டத்தை விடுதல். ஆத்ம ஞானம் என்னும் இலக்கை எட்டத் தடையாய் இருப்பவை இவை. இந்த யக்ஞத்தில் அவன் அருளே ஆரம்பம் முதல் நிறைவு வரையிலும் துணை)
யக்ஞக்ருத் -- உலகில் மக்களின் நன்மைக்காக வேண்டி இந்த யக்ஞம் என்னும் முறையை அவரே ஏற்படுத்தியுள்ளார்
யக்ஞீ -- யக்ஞத்தின் தலைவரும் பிரபுவும் அவரே
யக்ஞபுக் -- யக்ஞத்தின் பலன்களை அனுபவிப்பவரும் அவரே
யக்ஞஸாதந: -- யக்ஞம் நிறைவேறுவதற்கான துணையாக இருப்பவரும் அவரே
யக்ஞாந்தக்ருத் -- பிரம்மஞானம் அடைவதே அனைத்து யக்ஞங்களின் இறுதி இலட்சியம். அந்தப் பிரம்ம ஞானத்தை அருள்வதன் மூலம் அவரே யக்ஞாந்தக்ருத் ஆகிறார்.
யக்ஞகுஹ்யம் -- தங்களுக்குப் பிடித்த சில பலன்களுக்காகச் செய்யப்படுவது யக்ஞம் என்னும் சாதாரண கருத்துள்ளவர்களுக்குப் புரியாத கருத்து, ‘ஏன் யக்ஞத்தை மூவிதத் தியாகத்துடன் கடவுளைக் குறித்தே செய்ய வேண்டும்?’ என்பது. யக்ஞத்தின் முழுமையாகக் கடவுள் இருப்பதால் அவரைக் குறித்து, அவருக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் யக்ஞம் அனைத்து நிறைவையும் இயல்பாகவே பெற்று நிற்கும். யக்ஞத்தின் இரகசியம் கடவுளே என்பதால்தான் யக்ஞகுஹ்யம் எனப்படுகிறார்.
அந்நம் -- உயிரையும், உடலையும் வளர்ப்பது அன்னம். உயிர்களையும், உலகங்களையும் போஷிப்பவர் ஆகையால் திருமால் அந்நம் எனப்படுகிறார்
அந்நாத: -- உணவைத் துய்ப்பவரை அந்நாதர் என்று சொல்லலாம். அனைத்துப் பலன்களையும் உள்ளுயிராய் நின்று திருமாலே துய்ப்பவர் ஆக இருப்பதால் அவரே அந்நாத: எனப்படுகிறார்.
ஏவ ச - திருமாலே உணவும், உண்போனும் இரண்டுமாக இருக்கின்றார் என்று வலியுறுத்துகிறது.
***
No comments:
Post a Comment