Thursday, December 16, 2021

ஸநாத்ஸநாதன தம:

ஸநாத்ஸநாதனதம: கபில: கபிரவ்யய: | 
ஸ்வஸ்தித3: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபு4க் ஸ்வஸ்தித3க்ஷிண: || 


ஸநாத் - எப்பொழுதும் புதுமையாய் இருக்கும் ஒன்று, கணம் தொறும் அத்புதமாய் இருக்கும் ஒன்று அடுத்த கணம் முடிவடைந்து போனது என்றிருப்பது போல் இல்லாமல் தம்மைத் துய்க்கும் ஒவ்வொரு கணமும் முடிவற்ற நெடுங்காலமாய் நீளும் தகைமையர் ஆகையாலே, அநந்த கோடி ஜீவர்களுக்கும் அவரவர் துய்ப்பில் அவ்வண்ணமே தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸநாத் என்று போற்றப்படுகிறார். 

ஸநாதநதம: - எப்பொழுதும் புதுமையாய் இருப்பதோடன்றி அனைத்தினும் பழையதாகவும் இருப்பது மட்டுமல்லாமல், பழமையானவற்றிலெல்லாம் சிறந்ததாகவும் இருப்பதனால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸநாதநதம: என்று தொழப்படுகிறார். 

கபில: - மின்னல் கொடிகளால் சூழப்பட்ட காருண்ட மேகம் போல் நித்ய விபூதியில் நித்ய சூரிகள் சூழத் தாம் இருப்பவர் ஆகையாலும், தம்மை விட்டு அகலகில்லேன் இறையும் என்று பிரிவில்லாத தத்துவமாக விளங்கும் ஸ்ரீயின் ஒளியால் தாம் சூழப்பட்டிருப்பவர் ஆகையாலும் கபில: என்று ஸ்ரீமஹாவிஷ்ணு போற்றப்படுகிறார். 

கபிரவ்யய: (கபிரப்யய:) - மாறுதல் அற்ற ஒளி மிகுந்த நித்ய சுகத்தைத் தம்மிடத்தில் முழுமையாக அடங்கத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபிரவ்யய: என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்தித: - அடியார்களுக்கு அசுபம் என்பதை நீக்கி மங்களத்தைத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்தித: என்று சொல்லப்படுகிறார். 

ஸ்வஸ்திக்ருத் - அசுபம் நீங்கி மங்களம் விளைவது என்பதே பகவத் குணங்களில் ஒருவர் ஈடுபடுவதன் காரணமாக ஆகும் என்பதால், ஸர்வமங்களமாகிய தமது குணங்களில் ஈடுபாட்டையும் அவரே அருள்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திக்ருத் என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்தி - தாமே ஜீவனுக்கான சுபமாக இருப்பவர் ஆதலால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்தி என்று அழைக்கப்படுகிறார். 

ஸ்வஸ்திபுக் - ஜீவர்களாகிய நமக்கு என்றும் சுபமானவற்றையும், மங்களமானவற்றையும் அஞ்ஞானத்தின் காரணத்தினால் சுபாவமாக அனுபவிக்கத் தெரியாது ஆகையாலே சுபம், மங்களம், நன்மை என்பதை எப்படி விரும்ப வேண்டும் என்று தம்முடைய பேரருளால் ஜீவனுக்குள் இருந்து கற்பிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திபுக் என்று போற்றப்படுகிறார். 

ஸ்வஸ்திதக்ஷிண: - ஜீவர்களுக்கு உயர்ந்த மங்களம் ஆவது தம்மை அடைந்து தம் அடியிணையில் செய்யும் தொண்டு எனவே அதற்கு வேண்டிய அனைத்து நன்மைகளையும் தாமே தம்மைப் புகல் அடைந்தாருக்குத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திதக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார். 

***

No comments:

Post a Comment