Sunday, March 22, 2020

கேட்டானய்யா கேள்வி!

கோ த4ர்ம: ஸர்வ த4ர்மாணாம் ப4வத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார ப3ந்த4நாத்||

தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம்
என நீர் கருதும் தர்மம் எது?
பிறவிச் சுழற்சியெனும் பெருந்தளையினின்றும்
எதை ஜபிப்பதால் மானிடர் விடுபடல் ஆகும்?

இவ்வாறு யுதிஷ்டிரன் கேட்க பீஷ்மன் உரைத்த பதில்தான் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். இதில் ஜந்து என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லவா? இதில் ஒரு விசேஷம் இருக்கிறது. அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடிப் பிறந்த உயிர் அனைத்தும் குறிக்கப்படுகிறது. இந்த விசேஷத்தைக் காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ஜந்து: என்றால் பிறவியெடுத்த அனைத்து உயிரும் என்ற பொருளில் ஜந்து: - ஜனன தர்மா: என்கிறார். அது மட்டுமின்றி இன்னும் விளக்கமாக 'அநேந ஜந்து சப்தேந ஜப அர்ச்சன ஸ்தவநாதிஷு யதாயோக்யம் ஸர்வப்ராணிநாம் அதிகாரம் ஸூசயதி' என்று விளக்கம் அளிக்கிறார்.

பொருள் - இந்த ஜந்து சப்தத்தால் ஜபம், அர்ச்சனை, ஸ்தவம் ஆகியன செய்ய முடிந்த அனைத்து உயிர்களுக்கும் அதிகாரம் இருப்பது குறிப்பிடப்படுகிறது. ஆண், பெண், இளையர், முதியோர், குழந்தைகள் என்று அனைவருக்குமான வழி இஃது.

ஸ்ரீ பராசர பட்டரும் இந்த ஜந்து எனும் சொல்லுக்கு அப்படியே ஜனன தர்மா: பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்றுதான் பொருள் எழுதுகிறார். 

எனவே இவர் சொல்லலாமா அவர் சொல்லலாமா என்னும் தவறான எண்ணங்களுக்கு இடம் தருவோர் பாபம் புரிவோர். செய்யற்க.

கேட்டதெல்லாம் கேட்டான் தருமன். ஆனால் மனம் அமைதியுறவில்லை. வழி வழியாக வரும் சமுதாய ஒப்பந்த அமைப்புகளாகிய வழக்கமும், சட்டமும், நெறிகளும் வேண்டியது பார்த்தாயிற்றே! தன் பெயரே தர்ம புத்திரன். தர்மங்களின் பெயரால் தன் குடும்பமே நடுத்தெருவில் வந்து நின்ற கதை மறந்துவிடுமா என்ன? தர்மத்திற்கு மேல் தர்மமாகத் தன் உயிர் ஊசலாடும் நிலையிலும் அர்ஜுன பாண தீர்த்தமாகப் பொழிகின்றாரே பாட்டன், இவரே அதே தர்மங்கள், வழிவழி வழக்கங்கள் என்று சொல்லிக் கட்டுண்டு நின்றவர்தாமே! மறைகிறான் மஹாவிரதன். உயிர் போகும் முன் போய்க் கேள் என்று கேசவன் சொல்லத் தாங்கள் வந்து கேட்ட பொழுது கோவிந்தன் புகழ் பாடிக் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாரே! விதியால் ஏவப்பட்டு அன்றோ தன் வாழ்வும், ஏன் அனைத்து பிராணிகளின் வாழ்வும் இயங்குகின்றன. நேற்று காட்டில் காய் கனி கிழங்கு, இன்று அரசக் கட்டில் என்று தன்னை விதி வைக்கும் சதுரங்கக் காய் என்று தானே சொல்ல வேண்டும். எவ்வளவு தர்மங்கள் கேட்டு என்ன.. எத்தனை தர்மங்கள் இருந்தும் என்ன... இயங்கும் ஒரே தர்மம் சூட்சுமமான விதியின் தர்மம் தானே. சாத்திரங்கள் பல கற்றோரும் ஆசைச் சகதியில் சிக்கிச் சிறப்பை இழப்பதையும் பார்க்கிறோம்; கள்ளும் இறைச்சியும் விற்கும் ஒருவன் கருத்தெல்லாம் கடவுளிடம் வைத்துத் தூய்மையின் உருவமாகிறான். உலகையாளும் மன்னன் தன் புலன்களை ஆளத்தெரியாமல் பெண்ணிற்கும் மண்ணிற்கும் பொன்னிற்கும் அடிமையாகிப் புன்மை அடைகிறான். தன் உடலே தன் வசமற்ற வேசியோ தன் உள்ளத்தைப் பரம்பொருளுக்கு நிவேதனமாக்கி உன்னதம் அடைகிறாள். ஆனால் வழிவழியாக மனிதர்கள் யாத்த தர்மங்களோ, மனிதருக்கு விதித்த தர்மங்களோ வண்டி வண்டியாய் இருக்கின்றன. இதுதானே பாட்டன் கூறிய இதுகால்வரை கேட்ட அறப்பொழிவு உணர்த்துவது. இன்றிருந்து நாளை மறையும் உடலில் கோத்து வைத்த தர்ம படலங்கள் எண்ணிறந்தவை. ஆனால் என்றும் அழியாத ஆன்மாவின் இயல்பில் செழிக்கும் அந்த ஒரே தர்மம் எது? வந்து போகும் வாழ்க்கைக்குக் கடலாய்த் தர்மங்கள் இருக்கின்றன. பிறவியால் வராத வழியாகவும், மரணத்தால் போகாத நிலையாகவும் உள்ள ஆத்ம கடைத்தேற்றத்திற்கு உத்தமமான அந்தத் தர்மம் என்ன? விதியின் கைப்பாவை என்று உள்ள வாழ்க்கையில் அனைத்தும் அசுபம்தானே. எது சுபம் என்று தன்னியல்பிலேயே உணரத்தக்கதாய் இருக்கிறதோ அந்தச் சுபம் என்பதை மானிடர் எப்படி அடையலாம்?

சொல்லப்பட்டவற்றில் இல்லை சூட்சுமம். சொல்லில்தான் இருக்கிறது. ஆம். சிறைக் கைதியாகிக் கர்மச் சங்கிலிகளில் பிணைப்புண்டு பிறவியினின்றும் பிறவிக்குப் பிணைக்கைதியாகி இழுப்புண்ணும் நம் ஜீவன் ஏதோ ஒரு சொல்லை மறந்துவிட்டது. அதைச் சொன்னால் சங்கிலிகள் விட்டுப் போகும். சிறைக் கதவுகள் விலகும். சிறகு முளைக்கும். சிந்தை சிறக்கும். சிறப்பின் பாதை திறக்கும். சவமெனக் கிடந்த வாழ்வு சிவமெனச் சிறந்து பொலியும். அந்தச் சொல்? சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்ய சொல் ஒன்று வேண்டும். தேடித் தேடிக் கடைசியில் வாயில் இருக்கிறது வாய்மை. சொல்லில் இருக்கிறது சுதந்திரம். கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்? எதைச் சொல்லுவதால் பிறவி உயிர்கள் பிறவிச் சுழல் என்னும் கடுந்தளைக் கட்டு அவிழ விடுதலை பெறலாகும்? அதை அறிவானா நம் பாட்டன்? கேட்டுப் பார்ப்போமா? பதில் வருமா? அல்லது பழைய தர்மக்கட்டு ஒன்றை விரிப்பானா? 

கேட்டதெல்லாம் கேட்டு மீண்டும் கேட்கிறான் யுதிட்டிரன் என்கிறார் வைசம்பாயனர். என்ன கேட்டான் அப்படி? ஆறு கேள்விகள் கேட்டான் தருமன். மிக்குயர்ந்த பெருந்தெய்வம் எது? அறுதியான இறுதி நிலையம் உயிர்களுக்கு எது? சுபம் அடைய யாரைத் துதிப்பது? யாரைப் பூஜை செய்வது? தர்மங்களில் சிறந்த தர்மம் உங்கள் கருத்துப்படி எது? எந்த ஜபத்தால் உயிர்கள் முத்தி அடைகின்றன? தாகத்திற்குத் தவிக்கும் மனிதன் காதில் தண்ணீர் பற்றிய செய்திதான் முதலில் விழும். தருமனுக்கு உயிரின் பிரிவு என்பது என்றோ நடக்கப் போகும் ஒன்று. ஆனால் பாட்டனுக்கு அது நிகழ்காலம். அதுவும் நீட்டிவைத்த நிகழ்காலம். The moment of dying extended to obey his wish but still remains a moment.

புறத்திலும் அம்புப் படுக்கை. அகத்தின் மர்ம ஸ்தானத்திலும் அம்புப் படுக்கை. அம்புகளின் கூரிய முனைகளாகிய மலர்களால் தன் வாழ்வு என்னும் படையலைக் கண்ணனுக்கு ஆக்குகிறான் காங்கேயன். உண்மையில் அவன் ஒருவனே வீரன். ஆனால் அவன் உபதேசம் செய்வதோ ஆன்ம தீரத்தைப் பற்றி. அவனைச் செய்ய வைக்கிறான் அச்சுதன். ஆகாதவற்றை ஆக்குவோன். கூடாதவற்றைக் கூட்டுவோன். பேசாதவற்றைப் பேச வைப்போன்; பாராதவற்றைப் பார்க்கவும் அவன் அருளல்லால் நமக்கு ஏது கதி?

வென்று வேலெடுத்த விரை திண் தோளையும், வரையன்ன உடலையும் வீழ்ச்சியின் ஆயிரம் நாவுகளாகச் சுவைக்கின்றன ஆயிரம் அம்புகள்.
ஆனால் மடியும் உடலின் ஒற்றை நா உரைப்பதோ மடியாத உயிருக்கு ஆயிரம் நாமங்கள். அம்புகளின் தாகம் தீரக் கிடந்தவன் தன் அம்புதாகம் தீர விழைந்தக்கால், அம்பால் நீரூட்டித் தாகம் தீர்த்தவனின் தேர்ச் சாரதியை அன்பால் பரவுகிறான் புனிதநீர்ப் புதல்வன். தவித்த உயிர்த்தாகத்திற்குக் காதில் முதலில் விழுவதோ ஆறாவது கேள்வி. 'எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?' அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். --

"நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்; இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல் அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்"

பராசர பட்டரின் உரை பேசுகிறது --

"திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்; அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல்தன்மை கொண்டவன்; அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால் மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்."

அம்பின் நுனி குளிக்க அம்பின் துளி குளிரக் கிடந்து உரைத்தவனின் அன்பு மொழி நம் வாழ்வின் வறட்சியைப் போக்காதோ!

வீரர்களின் வாழ்க்கை வில், அம்பு, வேல், கவசம், போர், அழிவு, காப்பு என்றிருப்பது. வீரர்களின் பிதாமகன் இங்கு மரணத்தின் முற்றத்தில் கிடந்தபடி அழியா உயிருக்கு ஆக்கம் தேடுகிறான். இந்த உயிரை நலியும் அறியாமை, உலக ஆசைகள், மாயை என்னும் பகை முடிக்கும் ஆயுதத்தைப் பேரனுக்குப் போதிப்பதுபோல் உலகிற்கு அளிக்கிறான். உயிரின் இந்த ஓயாப் போரில் கைகண்ட ஆயுதம், வாய்கண்ட ஆயுதமாக இருக்கிறது. வினைகளின் கட்டை அவிழ்க்கும் மர்மம் பெயர்ச்சொல்லில் இருக்கிறது. அந்த ஆயுதத்தை தன் வீர வாழ்க்கையின் பழக்கத்தால் விளக்குகிறான்.

'தருமா! எந்த ஆயுதத்திற்கும் தேவதை உண்டு, பீஜம் உண்டு, சக்தி என்பது உண்டு, இதயம் என்பது உண்டு. அந்த ஆயுதத்திற்கான பிரயோஜனம் என்பதும் உண்டு. சாதாரணமாகப் போர் ஆயுதங்களுக்கு எஃகு என்பதைப் பீஜம் என்று கூறுவோம். ஏனெனில் காரணம் ஆகிய எஃகிலிருந்துதான் ஆயுதம் உருவாகிறது. ஆயுதத்தின் அழிக்கும் திறன் அதன் முனையின் கூர்மையில் இருக்கிறது என்ற காரணத்தால் ஆயுத முனையைச் சக்தி என்று சொல்வது வழக்கம். ஆயுதத்தின் மையப் பகுதியானது அதன் இயக்கம் வேகம் இலக்கு நாட்டம் முதலிய அம்சங்களுக்கு முக்கியமாகக் கேந்திரம் என்பதால் இதயம் என்று சொல்லப்படுகிறது. ஓர் ஆயுதம் என்றால் அது என்றும் வெறும் அலங்காரமாகவும் பொழுது போகவும் செய்யப்படுவது அன்று. ஆயுதம் என்று ஒன்று உருவானால் அதற்குப் பிரயோஜனம் என்று ஒன்று கண்டிப்பாக உண்டு. பொதுவாக நாம் அறிந்து பழகிய ஆயுதங்கள் சத்ரு வதம் என்னும் பயனை நோக்காக உடையன. ஆனால் தருமா! நான் சொல்லப்போகும் இந்தப் புருஷோத்தமனின் ஆயிர நாமங்கள் என்பதும் ஒரு வகையில் ஓர் ஆயுதம்தான். சத்ரு வதம் என்பதையும் நோக்காக உடையதுதான். இந்த ஆயுதத்திற்கும் கண்டறிந்த ரிஷிகள், தேவதை என்று உண்டு. இந்தத் தேகம் நிலையில்லாதது. அதை அழிக்க வரும் எதிரிகளே சத்ருக்கள் என்று ஆயுதங்களை எறிந்து அழிக்கத் தக்கவர்கள் என்றால், இந்த ஆத்மாவிற்கு எதிரிகளாக வரும் அறியாமை, உலக ஆசைகளின் வேகம், மாயை, காமம், குரோதம் லோபம், மதம், மாச்சரியம், மோகம் ஆகிய சத்ருக் கூட்டங்கள் மாயாவிகளிலும் மாயாவிகளான பகைகள். மற்ற புறப்பகைகள் உன் உடைமைகளைக் கைப்பற்றி, உன் இருப்பிடத்தைக் கைப்பற்றிப் பின் உன்னை அழிக்கும். ஆனால் இந்தக் கொடிய அகப்பகைகளோ முதலில் உன்னை அடிமைப் படுத்திப் பின்னர் உன் நித்ய வாழ்வு, அளவிலா ஆநந்தம், எல்லையற்ற ஞானம் ஆகிய உன் சொந்த இயல்புகளாகிய செல்வங்களை உன்னைக் கொண்டே தங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடும். இவற்றுக்கு அழிவு என்பது ஒரே ஆயுதத்தினால்தான். அதுதான் பகவானின் நாமஜபம்.

இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள். வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி. பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்குச் சந்தஸ். தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு. பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது. தேவகீநந்தன: என்பது சக்தி. திரிஸாமா என்பது இதயம். அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம். பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியைத் தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும், போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.' என்கிறான் பீஷ்மன். மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி அவன் சொன்னவை இவை. அவனைவிட வீரனும் இருந்ததில்லை. அவனுடைய சொற்களைவிட தீரமும் இருந்ததில்லை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்

பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை ஈர்த்ததும், பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவ்ய நாமங்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது. அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான்.

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதைச் சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். ( ‘விஷ்ணும் ஸஹஸ்ரமூர்தானம் சராசரபதிம் விபும் | ஸ்துவந் நாமஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் அபோஹதி ||’ - சரக ஸம்ஹிதா, சிகித்ஸா ஸ்தானம், ஜ்வர சிகித்ஸா). மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம். என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விடப் பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம். 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு Aufrecht அவர்களின் கணக்குப்படி 15 வியாக்கியானங்கள் பட்டியலிடப்படுகின்றன என்று தகவல் தருகிறார் ஸ்ரீ அநந்தகிருஷ்ண சாஸ்திரியார். அவை - 

1) ப்ருஹத் பாஷ்யம்
2) விஷ்ணு வல்லபம்
3) ஆநந்த தீர்த்தரின் உரை
4) கிருஷ்ணாநந்தரின் உரை
5) கங்காதர யோகீந்திரரின் உரை
6) பாரசர பட்டரின் பாஷ்யம்
7) மஹாதேவ வேதாந்தியின் உரை
8) ரங்கநாதாசாரியரின் உரை
9) ராமாநந்த தீர்த்தரின் உரை
10) ஸ்ரீராமாநுஜரின் உரை
11) வித்யாரண்ய தீர்த்தரின் உரை
12) பிரஹ்மாநந்த பாரதியின் உரை
13) ஸ்ரீ சங்கராசாரியரின் உரை
14) சுதர்சன பட்டரின் உரை
15) கோவிந்த பட்டரின் உரை 

இவையும் சிலவே. இவை தவிர சுலோக ரூபத்தில் நாமங்களை விளக்கிக் காரிகைகளாகச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு.
*


ஸ்ரீ பகவந் நாமாம்ருத ரஸோதயம் என்பது ஸ்ரீபகவந் நாம போதேந்திர ஸரஸ்வதி செய்த அற்புதமான நூல். முழுக்க முழுக்கப் பகவந் நாமத்தின் மகிமையை ஆசாரியர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரின் வாக்குகளைக் கொண்டு நிர்ணயிக்கிறார் ஸ்ரீ போதேந்திரர். (தமிழில் இந்த நூலைச் சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்). 

"நாவலிட் டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே நின் நாமம கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே!" என்று பாடுகிறார் ஆழ்வார். 

'ஒரு தடவை நீ அவன் நாமத்தைச் சொன்னால் பாபங்களின் குடியிருப்பில் சுனாமியே வந்துவிடுகிறது' என்கிறார் கபீர். 

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்கள் தமது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் அசைக்க முடியாமல் நாம சித்தாந்தமே செய்கிறார். அவர் செய்த நாம சித்தாந்தப் பகுதியை அழகாகச் சுருக்கித் தருகிறார் தமது ஸ்ரீபகவந் நாம ரஸோதய நூலில் ஸ்ரீ போதேந்திரர். 

"வசமிழந்து நாமகீர்த்தனம் செய்தாலும் சிம்மத்தைக் கண்ட மிருகங்கள் போல் பாபங்கள் ஓடிவிடும். நாமகீர்த்தனமே குப்பைகளை அக்னிபோல் எல்லா பாபங்களையும் பொசுக்கிவிடும். நரகத்தைத் தரும் மிக உக்கிரமான கலிகல்மஷம் ஒருதரம் செய்த நாமஸ்மரணத்தாலேயே (கடவுள் நாமத்தின் நினைவு) நாசமாகும். 

" தெரிந்தோ தெரியாமலோ வாஸுதேவ கீர்த்தனம் செய்தால் தண்ணீரில்பட்ட உப்புபோல் பாபம் கரைந்துவிடும். ஒருதரம் கோவிந்த நாமத்தைச் சொன்னாலும் பலபிறவிகளில் செய்த பாபங்கள் அனலில்பட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். 

" ஹரி என்ற இரண்டு எழுத்தை ஒருதரம் உச்சரித்தவன் கூட மோக்ஷத்திற்காக மூட்டை கட்டிவிட்டான். 

"'நாராயண' என்ற நாமம் இருக்கிறது. வாக்கும் வசமாக இருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் நரகில் விழுகின்றனரே! என்பதுதான் அதிசயம். நரகவேதனைப் படும் ஜீவனைப் பார்த்து யமன் கேட்கிறானாம், 'ஏனடா! நீ கேசவனை பூஜிக்கவில்லையா? இங்கு வந்து அவதிப்படுகிறாயே!' 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஞான புத்திரன் என்று கொண்டாடப்பட்ட சுவாமி பிரம்மாநந்தர் கூறுவது -- 

"Repeat his name and call upon him. He is very near and he is dear to all. Why should he not reveal himself? Open your heart to him. He will guide you along the right path. There is nothing more purifying than his name and meditation upon him. He is our very own. He easily becomes revealed to us." 

தாரக் மஹராஜ் என்னும் சுவாமி சிவாநந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யர். அவர் கூறுவது -- 

"It is people with gross ideas alone who think that the more one tells beads, the more propitious does God become. Does He really look at the number? He only watches how much the heart is dedicated to Him. If the proper divine mood prevails, what does it matter whether you keep count or not?" 

ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் ஒவ்வொருவரும் ஆன்ம சாதனையில் நன்கு பழுத்த பெரும் மகான்கள். அவர்களில் சுவாமி அத்புதாநந்தர் என்னும் லாட்டு மஹராஜ் என்பவர் விசேஷமானவர். ஸ்ரீராமகிருஷ்ணர் நிகழ்த்திய அற்புதம் இந்த லாட்டு மஹராஜ் என்பதாலேயே சுவாமி விவேகாநந்தர் இவருக்கு அத்புதாநந்தர் என்னும் துறவுத் திருநாமத்தைச் சூட்டினார். அத்புதாநந்தர் என்பவரை ஜப சித்தர் என்றே கூறலாம். இவரை ஒப்பிட்டால் ஸ்ரீராமகிருஷ்ணர் படிப்பறிவில் மிகவும் கற்றவர் என்று சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு லாட்டு படிப்பறிவு சிறிதும் இல்லாதவர். ஆனால் ஆன்ம சாதனையினாலும், குருவின் பேரருளாலும் லாட்டு மஹராஜ் அடைந்த ஆன்மிகப் பெருநிலை சொல்லும் அளவன்று. அவர் ஜபத்தைப் பற்றிக் கூறும் கருத்து -- 

"Sri Ramakrishna used to say that before starting to chant the name of the Lord, one should salute the name. One should take refuge in the name of the Lord. The name and the named, that is, the Lord, are one." 

நாம மஹிமையைப் பற்றி அதை அனுஷ்டித்தவர்கள் சொன்னவற்றைத் தொகுத்தாலே பல பெரிய நூல் அளவிற்கு வந்துவிடும். நான் சொல்லக் கூடியது -- நல்ல பொழுது போக்கு. தத்துவச் சிந்தனைக்குச் சுருக்கு வழி. தனிமை மிகவும் இனிமை என்று ஆக்கவல்ல உயர்ந்த சத்சங்கம் இந்த நாம ஜபம் என்பது ஆகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


***


ஸ்ரீகிருஷ்ணன் அருளிய பகவந் நாம விளக்கம்

பகவந் நாமங்களுக்கு உரையாசிரியர்கள் பொருள் சொல்லி அதைத்தான் படித்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணனே தன்னுடைய ரகஸ்யமான நாமங்களுக்கு என்ன பொருள் என்று அர்ஜுனனுக்கு விளக்குவதை ஸ்ரீ மஹாபாரதம், சாந்தி பர்வம் பதிவு பண்ணி வைத்திருக்கிறது. இதைக் கிட்டத்தட்ட ஸ்ரீ கிருஷ்ணன் எழுதிய உரை என்றே கொள்ளலாம் போல இருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்னது -

ஓ! பாரதனே! முக்காலத்திலிமுள்ள எல்லாருக்குமே விஷ்ணுவானவர் தலைவர். வணங்கப்படத் தக்கவர். பூசிக்கப்படத் தக்கவர். குந்தி புத்திரனே! புகல் அளிப்பவரும், வரம் அளிப்பவருமான விஷ்ணுவை நமஸ்காரம் செய்; வணங்கு. துயரடைந்தவன், ஞானத்தை விரும்புபவன், பொருளை விரும்புபவன், ஞானி ஆகிய நால்வரும் என்னுடைய பக்தர்களே. மற்ற தெய்வங்களை வணங்குபவர்களும் என்னையே வணங்குகிறார்கள், விருப்பத்தை விட்டு, கர்மங்களைக் கர்ம யோகமாகச் செய்யும் ஞானிகளுக்கு நானே கதி. பயனை விரும்பும் பக்தர்களுக்குப் பலனானது அழிவுடையது. ஆனால் என்னையே விரும்பும் பக்தர்களின் பலனோ அழியாதது. ஞானி மிகச்சிறந்த முக்தியை அடைகிறான். ஞானத்துடன் கூடிய அனுஷ்டானம் உடையவர்கள் பிரம்மாவையோ, ஈசவரரையோ மற்றத் தேவர்களையோ தொழுதாலும் என்னையே பயனாக அடைவார்கள். ஓ! பார்த்தனே! பக்தர்களைப் பற்றிய இந்தச் சிறப்பானது உனக்குச் சொல்லப்பட்டது. ஓ! குந்திபுத்திரா! நீயும் நானும் நர நாராயணர்களாகக் கருதப்பட்டவர்கள். பூபாரத்தைத் தொலைப்பதற்காக மனுஷ்ய சரீரத்தில் பிரவேசித்தோம்.

ஓ! பாரதனே! ஆத்மாவைப் பற்றிய யோகங்களை அறிகிறவனும், நிவிருத்தி ரூபமான வளர்ச்சியைச் செய்கின்றவனும், என்றும் இருப்பவனான நான் ஒருவனுமே நரர்களுக்குப் பிரசித்தமான ஸ்தானம். அப்புக்கள் நரனிடமிருந்து உண்டாயின. ஆகையால் அப்புக்கள் நாரங்கள் என்று சொல்லப்படுகின்றன. முதன்முன்னம் அவை எனக்கு ஸ்தானமாயின. எனவே எனக்குப் பெயர் நாராயணன்.

நான் எல்லாமுமாகி சூர்யன் கிரணங்களால் மறைப்பது போல் மறைக்கிறேன். அதனாலும் அனைத்து உயிர்களுக்கும் வசிக்கும் இடமாக நான் இருப்பதால் எனக்குப் பெயர் வாசுதேவன்.

ஓ! பாரதனே! எல்லாப் பிராணிகளுக்கும் அடங்கும் இடமாகவும், உற்பத்தி ஆகும் இடமாகவும் நான் இருக்கிறேன். என்னால் ஆகாயமும், பூமியும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றன. என்னுடைய காந்தி மிகப்பெரியது. பூதங்களில் பிரவேசித்து ஜகத்தாய் இருக்கிறேன். எங்கும் பரந்து நீக்கமற நிற்கிறேன். எனவே என் பெயர் விஷ்ணு.

இந்திரியங்களை அடக்கித் தவம் செய்வோர் பலர். அவர்களில் சிலர் தேவ லோகத்தை அடைய விரும்புகின்றனர். சிலர் பூமியில் சிறந்த நிலையை விரும்புகின்றனர். சிலர் உயர்ந்த நிலைகளை அடைய விரும்புகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் எண்ணம் பூர்த்தி அடைய வேண்டி என்னை விரும்புகின்றார்கள். அதனால் என் பெயர் தாமோதரன்.

அன்னம், வேதங்கள், ஜலம், அமிருதம் இவையிற்றுக்கு ப்ருச்னி என்று பெயர். அவைகளை எப்பொழுதும் நான் என்னுள் சுமப்பதால் எனக்கு ப்ருச்னி கர்ப்பன் என்று பெயர்.

உலகங்களைத் தபிக்கச் செய்கின்ற சூர்யன், அக்னி, சந்திரன் இவர்களுடைய கிரணங்கள் பிரகாசிக்கின்றன. இவைகள் என்னுடைய கேசங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆகையால் என்னுடைய பெயர் கேசவன்.

சூர்யனும், சந்திரனும் கிரணங்கள் என்று பெயர் கொண்ட என்னுடைய கேசங்களாலே உலகத்தை அடிக்கடி விழிக்கச் செய்தும், தபிக்கச் செய்தும் தனித்தனியாக கிளம்புகிறார்கள். போதிப்பதனாலும், தபிக்கச் செய்வதனாலும் உலகத்திற்குச் சந்தோஷம் ஏற்படும். ஓ! பாண்டு புத்திரனே! சூரியனாலும், சந்திரனாலும், அக்னியாலும் செய்யப்படும் இந்தக் கர்மங்களால் ஈசானனும், வரமளிப்பவனும் உலகங்களை உண்டு பண்ணுகிறவனுமான எனக்கு ஹ்ருஷீகேசன் என்று பெயர்.

நான் வீடுகளில் நடக்கும் யாகங்களில், 'இலோபஹூத' என்கிற மந்திரத்தினால் அழைக்கப்பட்டுப் பாகத்தை 'ஹரிக்கிறேன்', உள்வாங்குகிறேன். அப்பொழுது என்னுடைய நிறமும் ஹரித வர்ணமானது. எனவே எனக்குப் பெயர் ஹரி.

தாம என்றால் உலகங்களின் சாரமான பகுதி. விசாரிக்கப்பட்ட உண்மை எதுவோ அது ரிதம். எனவேதான் என் பெயர் ரிததாமா என்பது.

முன் காலத்தில், பூமியானது ஜலத்தில் முழுவதும் முழுகிப் போய், ஜலத்தின் குகை என்பதனுள் சென்று மறைந்தது. அவ்வாறு மறைந்த பூமியாகிய 'கோ'வை நான் தேடி அடைந்தேன் என்ற காரணத்தால் என் பெயர் கோவிந்தன்.

அவயவங்கள் அற்றவன் என்பதனால் எங்கும் உள்புகுந்து பிரவேசிப்பவன். அதன் காரணமாக எனக்குச் சிபி ஆவிஷ்டன் என்ற காரணத்தால் சிபிவிஷ்டன் என்ற பெயர் வந்தது. யாஸ்கர் என்ற முனிவர் இந்த நாமத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல யாகங்களிலும் சிபிவிஷ்டன் என்றே யாகம் செய்தார். அவர் அவ்வாறு சிபிவிஷ்டன் என்று ஜபித்ததால் அவருக்கு மறைந்து போன நிருக்தம் என்ற வேதச் சொற்களை ஆய்கின்ற நூல் மீண்டும் கிடைத்தது.

எல்லாப் பிராணிகளுக்கும் க்ஷேத்திரஜ்ஞன், அதாவது உணர்வு உருவாக இருப்பவன் நான். எனவே ஒரு பொழுதும் நான் பிறப்பவனுமில்லை, பிறந்தவனுமில்லை, பிறக்கின்றவனுமில்லை. எனவே என் பெயர் அஜன் - பிறவாதவன் என்பதாகும்.

குந்தியின் புத்திரா! அற்பமானவையும், அமங்களமானவையும் என்னால் ஒரு பொழுதும் சொல்லப்பட்டதில்லை. என்னுடைய வாக் சக்தி என்றும் தவறானது இல்லை. உண்மையானதும் ஆகும். கண்ணுக்குப் புலப்படும் மண், நீர், தீ ஆகிய மூன்றும், கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஆகாயம் ஆகிய இரண்டும் ஸத் - உள்ளதாக என் நாபி கமலத்தில் வைக்கப்பட்டமையாலும் என் பெயர் சத்யன்.

தனஞ்சயா! ஸத்வ குணத்திலிருந்து நான் ஒரு நாளும் நழுவாதவன். முன்னர் எப்பொழுதும் நழுவியதும் இல்லை. ஸத்வம் என்பதே என்னால் செய்யப்பட்டது என்னும் அளவிற்கு எனக்கு மிகவும் அணியானது. நான் எவ்வளவு ஜன்மம் எடுத்தாலும் சரி, ஸத்வ குணம் என்பது என்னிடம் கிஞ்சித்தும் மாறுவது கூட இல்லை. காரணம் என் ஜன்மங்கள் கிருபையின் காரணமாக ஏற்படுவன. கர்மத்தின் காரணமாக இல்லை. எப்பொழுதும் நிறைந்த ஸத்வ குணம் உடைமையால் என்னிடம் தோன்றும் கர்மங்கள் அனைத்தும் நிஷ்காம கர்மங்களே அன்றி வேறு எதுவும் கிடையாது. எப்பொழுதும் நிஷ்காமனாய் இருப்பதால் என்னைச் சதா களங்கம் அற்றவன் என்று அறிவாயாக. என்னைப் பிரம்மத்தை அறிந்தவர்கள் பார்க்கிறார்கள். மற்றவர்களால் நான் பார்க்கப்படுவதில்லை. பிரம்ம வித்துக்களும் என்னைக் காண்பது எப்படி என்றால் ஸாத்வதம் என்கிற பாஞ்சராத்திர சாத்திரத்தால் உண்டான ஞானத்தினால் பார்க்கிறார்களே அன்றி வேறு விதத்தால் அன்று. மேற் சொன்ன காரணங்களால் எனக்குப் பெயரே ஸாத்வதன் என்பதாகும்.

ஓ பார்த்தா! அர்ஜுனா! நான் இரும்பினால் செய்யப்பட்ட பெரிய கலப்பைக் கொழுவாக ஆகி பூமியைக் கீறுகிறேன், அதாவது கர்ஷணம் செய்கிறேன். என்னுடைய நிறமோ கார்வண்ணம். எனவே எனக்குப் பெயர் கிருஷ்ணன் என்பதாகும்.

நான் நீரையும், பூமியையும் சேர்த்தேன். வாயுவையும் ஆகாயத்தையும் சேர்த்தேன். நெருப்பையும், வாயுவையும் சேர்த்தேன். அதனால் விரியாமல் மடங்குதல் என்பது, அதாவது குண்டம் என்பது என்னிடம் இல்லாத ஒன்றாக அறியப்பட்டது. குண்டம் அற்றவன், மடங்குதல் அற்றவன் என்ற காரணத்தால் (வி+குண்ட) வைகுண்டன் என்பது என்னுடைய பெயராக ஆனது.

அமைதியே உருவான பிரம்மமே மேலானது. அதைப் போன்று உலகில் அனைத்தையும் தாங்கும் தத்துவமான தர்மம் என்பதும் மேலானது. பரம் என்று இவை சொல்லப்படுகின்றன. நான் அந்தப் பரத்திலிருந்து நழுவாதவன் ஆகையாலே என்னுடைய பெயர் அச்சுதன் ஆகும்.

பிருதிவியாகிய உலகமும், ஆகாயமும் எங்கும் வியாபித்தவை. எனவே அனைவராலும் அறியப்படும் அளவிற்குப் பிரசித்தமானவை. அவைகளைச் சேர்த்து நான் தரித்திருக்கும் காரணத்தால் நிரூபணத்துடன் சொல்கிறார்கள் என்னை அதோக்ஷஜன் என்று. அப்படி அதோக்ஷஜன் என்றே என்னை வேதங்களை அறிந்தவர்களும், வேதங்களின் அர்த்தங்களை விசாரிக்கின்றவர்களும் யாக சாலையில் சிறப்பான ஓர் இடமான பிராக்வம்சம் என்னும் ஸ்தானத்தில் என்னை அதோக்ஷஜன் என்றே கானம் செய்கிறார்கள். அதனாலும் நானே அதோக்ஷஜன் என்று அறிந்து கொள்ளலாம். பரம ரிஷிகள் ஒரே குரலில் கூறியதாவது, 'பிரபுவான நாராயணரைத் தவிர உலகில் வேறு அதோக்ஷஜன் இல்லை' என்பதாகும்.

உலகத்தில் அக்னியின் ஜ்வாலை என் உருவம் ஆகும். அந்த ஜ்வாலையில் சேர்ந்த கிருதம், (செயல் அல்லது செயலுக்குக் குறியீடான நெய்) அந்தக் கிருதங்கள் பிராணிகளின் பிராணனைத் தரிக்கிறது. எனவே நன்கு கவனம் உள்ள வேத அறிஞர்களால் எனக்குக் கிருதார்ச்சிஸ், (கிருதங்கள் சேரும் அர்ச்சிஸ், அக்கினி) என்னும் பெயர் வழங்கப்பட்டது.

மூன்று தாதுக்கள் உயிர்களுக்குக் கர்மத்தால் உண்டாகின்றன. அவை பித்தம், சிலேஷ்மம், வாதம் என்று பிரசித்தமானவை. இவை சங்காதம், ஒன்று கூடியவை என்று சொல்லப்படுகின்றவை. இவைகளால் ஜந்துவானது தரிக்கப்படுகிறது. இவை குறைந்தால் ஜந்துவானது குறைவு அடைகிறது. அதனால் ஆயுர் வேதத்தை அறிந்தவர்கள் என்னை திரிதாது என்று அழைக்கிறார்கள்.

ஓ பாரதனே! விருஷம் என்பது நிகண்டுவின்படி பார்த்தால் 'பூஜ்யமான தர்மம்' என்று பொருள். என்னை மிக உயர்ந்த தர்மம் என்று அறிவாயாக. கபி என்றால் வராஹம் என்று பொருள். ஆதலால் கச்யபர் என்னும் சிருட்டி கர்த்தா என்னை விருஷாகபி என்று அழைத்தார்.

வேதத்தை அறிந்தவர்களும், தேவர்களும் என்னுடைய ஆதியையும், மத்யத்தையும், முடிவையும் ஒரு போதும் அறிகிறதில்லை. ஆகையால் ஆதி நடு முடிவு அற்றவன் ஆகிய என்னை, ஈசவரனும், உலகங்களின் சாக்ஷியுமான என்னை விபு என்று அழைக்கிறார்கள்.

ஓ தனஞ்சயா! சுத்தமானவைகளும், கேட்பதற்கு இனிமை உள்ளவைகளுமான வார்த்தைகளையே நான் இவ்வுலகில் கேட்கிறேன். பாவங்களை ஒரு போதும் கேட்பதில்லை. அதனால் என் பெயர் சுசிச்ரவஸ், தூய கேள்வியன் என்பதாகும்.

நான் முன்காலத்தில் ஒற்றைக் கொம்புடைய வராஹமாய்ப் பூமியை எடுத்ததால் என்னுடைய பெயர் 'ஏகச்ருங்கன்' என்பதாகும். வராஹ ரூபத்தை எடுத்த நான் உயர்ந்தவைகளான தோள், நாசிகை, தெற்றுப்பல் ஆகிய இம்மூன்றும் உயர எழுந்த நிலையில் இருந்ததால் த்ரிககுத் என்று அறியப்பட்டேன்.

ஞானத்தை விசாரிக்கும் அறிஞர்களால் நான் விரிஞ்சன், விசேஷமாய்த் தத்துவங்களை லயம் செய்கிறவன் என்று அறியப்பட்டேன். சேதனன் மூலமாக எல்லா உலகங்களையும் செய்கின்ற அந்த விரிஞ்சி ஆகிய பிரம்மாவும் நானே.

உறுதியான நிச்சயத்தையுடைய சாங்கியர்களான ஆசாரியர்கள், நான் வித்யையின் சகாயம் உள்ளவன் ஆகையாலும், ஆதித்ய மண்டலத்தில் இருப்பவன் ஆகையாலும், சநாதனனுமான என்னைக் 'கபிலன்' என்று அழைக்கிறார்கள்.

வேதத்தில் துதிக்கப்பெற்றவரும், எப்பொழுதும் யோகிகளால் பூஜிக்கப்படுகிறவரும், விபுவும், காந்தியுள்ளவருமான ஹிரண்யகர்ப்பரும் நானே.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***