Sunday, March 22, 2020

கேட்டானய்யா கேள்வி!

கோ த4ர்ம: ஸர்வ த4ர்மாணாம் ப4வத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார ப3ந்த4நாத்||

தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம்
என நீர் கருதும் தர்மம் எது?
பிறவிச் சுழற்சியெனும் பெருந்தளையினின்றும்
எதை ஜபிப்பதால் மானிடர் விடுபடல் ஆகும்?

இவ்வாறு யுதிஷ்டிரன் கேட்க பீஷ்மன் உரைத்த பதில்தான் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். இதில் ஜந்து என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லவா? இதில் ஒரு விசேஷம் இருக்கிறது. அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடிப் பிறந்த உயிர் அனைத்தும் குறிக்கப்படுகிறது. இந்த விசேஷத்தைக் காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ஜந்து: என்றால் பிறவியெடுத்த அனைத்து உயிரும் என்ற பொருளில் ஜந்து: - ஜனன தர்மா: என்கிறார். அது மட்டுமின்றி இன்னும் விளக்கமாக 'அநேந ஜந்து சப்தேந ஜப அர்ச்சன ஸ்தவநாதிஷு யதாயோக்யம் ஸர்வப்ராணிநாம் அதிகாரம் ஸூசயதி' என்று விளக்கம் அளிக்கிறார்.

பொருள் - இந்த ஜந்து சப்தத்தால் ஜபம், அர்ச்சனை, ஸ்தவம் ஆகியன செய்ய முடிந்த அனைத்து உயிர்களுக்கும் அதிகாரம் இருப்பது குறிப்பிடப்படுகிறது. ஆண், பெண், இளையர், முதியோர், குழந்தைகள் என்று அனைவருக்குமான வழி இஃது.

ஸ்ரீ பராசர பட்டரும் இந்த ஜந்து எனும் சொல்லுக்கு அப்படியே ஜனன தர்மா: பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்றுதான் பொருள் எழுதுகிறார். 

எனவே இவர் சொல்லலாமா அவர் சொல்லலாமா என்னும் தவறான எண்ணங்களுக்கு இடம் தருவோர் பாபம் புரிவோர். செய்யற்க.

கேட்டதெல்லாம் கேட்டான் தருமன். ஆனால் மனம் அமைதியுறவில்லை. வழி வழியாக வரும் சமுதாய ஒப்பந்த அமைப்புகளாகிய வழக்கமும், சட்டமும், நெறிகளும் வேண்டியது பார்த்தாயிற்றே! தன் பெயரே தர்ம புத்திரன். தர்மங்களின் பெயரால் தன் குடும்பமே நடுத்தெருவில் வந்து நின்ற கதை மறந்துவிடுமா என்ன? தர்மத்திற்கு மேல் தர்மமாகத் தன் உயிர் ஊசலாடும் நிலையிலும் அர்ஜுன பாண தீர்த்தமாகப் பொழிகின்றாரே பாட்டன், இவரே அதே தர்மங்கள், வழிவழி வழக்கங்கள் என்று சொல்லிக் கட்டுண்டு நின்றவர்தாமே! மறைகிறான் மஹாவிரதன். உயிர் போகும் முன் போய்க் கேள் என்று கேசவன் சொல்லத் தாங்கள் வந்து கேட்ட பொழுது கோவிந்தன் புகழ் பாடிக் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாரே! விதியால் ஏவப்பட்டு அன்றோ தன் வாழ்வும், ஏன் அனைத்து பிராணிகளின் வாழ்வும் இயங்குகின்றன. நேற்று காட்டில் காய் கனி கிழங்கு, இன்று அரசக் கட்டில் என்று தன்னை விதி வைக்கும் சதுரங்கக் காய் என்று தானே சொல்ல வேண்டும். எவ்வளவு தர்மங்கள் கேட்டு என்ன.. எத்தனை தர்மங்கள் இருந்தும் என்ன... இயங்கும் ஒரே தர்மம் சூட்சுமமான விதியின் தர்மம் தானே. சாத்திரங்கள் பல கற்றோரும் ஆசைச் சகதியில் சிக்கிச் சிறப்பை இழப்பதையும் பார்க்கிறோம்; கள்ளும் இறைச்சியும் விற்கும் ஒருவன் கருத்தெல்லாம் கடவுளிடம் வைத்துத் தூய்மையின் உருவமாகிறான். உலகையாளும் மன்னன் தன் புலன்களை ஆளத்தெரியாமல் பெண்ணிற்கும் மண்ணிற்கும் பொன்னிற்கும் அடிமையாகிப் புன்மை அடைகிறான். தன் உடலே தன் வசமற்ற வேசியோ தன் உள்ளத்தைப் பரம்பொருளுக்கு நிவேதனமாக்கி உன்னதம் அடைகிறாள். ஆனால் வழிவழியாக மனிதர்கள் யாத்த தர்மங்களோ, மனிதருக்கு விதித்த தர்மங்களோ வண்டி வண்டியாய் இருக்கின்றன. இதுதானே பாட்டன் கூறிய இதுகால்வரை கேட்ட அறப்பொழிவு உணர்த்துவது. இன்றிருந்து நாளை மறையும் உடலில் கோத்து வைத்த தர்ம படலங்கள் எண்ணிறந்தவை. ஆனால் என்றும் அழியாத ஆன்மாவின் இயல்பில் செழிக்கும் அந்த ஒரே தர்மம் எது? வந்து போகும் வாழ்க்கைக்குக் கடலாய்த் தர்மங்கள் இருக்கின்றன. பிறவியால் வராத வழியாகவும், மரணத்தால் போகாத நிலையாகவும் உள்ள ஆத்ம கடைத்தேற்றத்திற்கு உத்தமமான அந்தத் தர்மம் என்ன? விதியின் கைப்பாவை என்று உள்ள வாழ்க்கையில் அனைத்தும் அசுபம்தானே. எது சுபம் என்று தன்னியல்பிலேயே உணரத்தக்கதாய் இருக்கிறதோ அந்தச் சுபம் என்பதை மானிடர் எப்படி அடையலாம்?

சொல்லப்பட்டவற்றில் இல்லை சூட்சுமம். சொல்லில்தான் இருக்கிறது. ஆம். சிறைக் கைதியாகிக் கர்மச் சங்கிலிகளில் பிணைப்புண்டு பிறவியினின்றும் பிறவிக்குப் பிணைக்கைதியாகி இழுப்புண்ணும் நம் ஜீவன் ஏதோ ஒரு சொல்லை மறந்துவிட்டது. அதைச் சொன்னால் சங்கிலிகள் விட்டுப் போகும். சிறைக் கதவுகள் விலகும். சிறகு முளைக்கும். சிந்தை சிறக்கும். சிறப்பின் பாதை திறக்கும். சவமெனக் கிடந்த வாழ்வு சிவமெனச் சிறந்து பொலியும். அந்தச் சொல்? சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்ய சொல் ஒன்று வேண்டும். தேடித் தேடிக் கடைசியில் வாயில் இருக்கிறது வாய்மை. சொல்லில் இருக்கிறது சுதந்திரம். கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்? எதைச் சொல்லுவதால் பிறவி உயிர்கள் பிறவிச் சுழல் என்னும் கடுந்தளைக் கட்டு அவிழ விடுதலை பெறலாகும்? அதை அறிவானா நம் பாட்டன்? கேட்டுப் பார்ப்போமா? பதில் வருமா? அல்லது பழைய தர்மக்கட்டு ஒன்றை விரிப்பானா? 

கேட்டதெல்லாம் கேட்டு மீண்டும் கேட்கிறான் யுதிட்டிரன் என்கிறார் வைசம்பாயனர். என்ன கேட்டான் அப்படி? ஆறு கேள்விகள் கேட்டான் தருமன். மிக்குயர்ந்த பெருந்தெய்வம் எது? அறுதியான இறுதி நிலையம் உயிர்களுக்கு எது? சுபம் அடைய யாரைத் துதிப்பது? யாரைப் பூஜை செய்வது? தர்மங்களில் சிறந்த தர்மம் உங்கள் கருத்துப்படி எது? எந்த ஜபத்தால் உயிர்கள் முத்தி அடைகின்றன? தாகத்திற்குத் தவிக்கும் மனிதன் காதில் தண்ணீர் பற்றிய செய்திதான் முதலில் விழும். தருமனுக்கு உயிரின் பிரிவு என்பது என்றோ நடக்கப் போகும் ஒன்று. ஆனால் பாட்டனுக்கு அது நிகழ்காலம். அதுவும் நீட்டிவைத்த நிகழ்காலம். The moment of dying extended to obey his wish but still remains a moment.

புறத்திலும் அம்புப் படுக்கை. அகத்தின் மர்ம ஸ்தானத்திலும் அம்புப் படுக்கை. அம்புகளின் கூரிய முனைகளாகிய மலர்களால் தன் வாழ்வு என்னும் படையலைக் கண்ணனுக்கு ஆக்குகிறான் காங்கேயன். உண்மையில் அவன் ஒருவனே வீரன். ஆனால் அவன் உபதேசம் செய்வதோ ஆன்ம தீரத்தைப் பற்றி. அவனைச் செய்ய வைக்கிறான் அச்சுதன். ஆகாதவற்றை ஆக்குவோன். கூடாதவற்றைக் கூட்டுவோன். பேசாதவற்றைப் பேச வைப்போன்; பாராதவற்றைப் பார்க்கவும் அவன் அருளல்லால் நமக்கு ஏது கதி?

வென்று வேலெடுத்த விரை திண் தோளையும், வரையன்ன உடலையும் வீழ்ச்சியின் ஆயிரம் நாவுகளாகச் சுவைக்கின்றன ஆயிரம் அம்புகள்.
ஆனால் மடியும் உடலின் ஒற்றை நா உரைப்பதோ மடியாத உயிருக்கு ஆயிரம் நாமங்கள். அம்புகளின் தாகம் தீரக் கிடந்தவன் தன் அம்புதாகம் தீர விழைந்தக்கால், அம்பால் நீரூட்டித் தாகம் தீர்த்தவனின் தேர்ச் சாரதியை அன்பால் பரவுகிறான் புனிதநீர்ப் புதல்வன். தவித்த உயிர்த்தாகத்திற்குக் காதில் முதலில் விழுவதோ ஆறாவது கேள்வி. 'எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?' அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். --

"நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்; இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல் அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்"

பராசர பட்டரின் உரை பேசுகிறது --

"திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்; அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல்தன்மை கொண்டவன்; அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால் மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்."

அம்பின் நுனி குளிக்க அம்பின் துளி குளிரக் கிடந்து உரைத்தவனின் அன்பு மொழி நம் வாழ்வின் வறட்சியைப் போக்காதோ!

வீரர்களின் வாழ்க்கை வில், அம்பு, வேல், கவசம், போர், அழிவு, காப்பு என்றிருப்பது. வீரர்களின் பிதாமகன் இங்கு மரணத்தின் முற்றத்தில் கிடந்தபடி அழியா உயிருக்கு ஆக்கம் தேடுகிறான். இந்த உயிரை நலியும் அறியாமை, உலக ஆசைகள், மாயை என்னும் பகை முடிக்கும் ஆயுதத்தைப் பேரனுக்குப் போதிப்பதுபோல் உலகிற்கு அளிக்கிறான். உயிரின் இந்த ஓயாப் போரில் கைகண்ட ஆயுதம், வாய்கண்ட ஆயுதமாக இருக்கிறது. வினைகளின் கட்டை அவிழ்க்கும் மர்மம் பெயர்ச்சொல்லில் இருக்கிறது. அந்த ஆயுதத்தை தன் வீர வாழ்க்கையின் பழக்கத்தால் விளக்குகிறான்.

'தருமா! எந்த ஆயுதத்திற்கும் தேவதை உண்டு, பீஜம் உண்டு, சக்தி என்பது உண்டு, இதயம் என்பது உண்டு. அந்த ஆயுதத்திற்கான பிரயோஜனம் என்பதும் உண்டு. சாதாரணமாகப் போர் ஆயுதங்களுக்கு எஃகு என்பதைப் பீஜம் என்று கூறுவோம். ஏனெனில் காரணம் ஆகிய எஃகிலிருந்துதான் ஆயுதம் உருவாகிறது. ஆயுதத்தின் அழிக்கும் திறன் அதன் முனையின் கூர்மையில் இருக்கிறது என்ற காரணத்தால் ஆயுத முனையைச் சக்தி என்று சொல்வது வழக்கம். ஆயுதத்தின் மையப் பகுதியானது அதன் இயக்கம் வேகம் இலக்கு நாட்டம் முதலிய அம்சங்களுக்கு முக்கியமாகக் கேந்திரம் என்பதால் இதயம் என்று சொல்லப்படுகிறது. ஓர் ஆயுதம் என்றால் அது என்றும் வெறும் அலங்காரமாகவும் பொழுது போகவும் செய்யப்படுவது அன்று. ஆயுதம் என்று ஒன்று உருவானால் அதற்குப் பிரயோஜனம் என்று ஒன்று கண்டிப்பாக உண்டு. பொதுவாக நாம் அறிந்து பழகிய ஆயுதங்கள் சத்ரு வதம் என்னும் பயனை நோக்காக உடையன. ஆனால் தருமா! நான் சொல்லப்போகும் இந்தப் புருஷோத்தமனின் ஆயிர நாமங்கள் என்பதும் ஒரு வகையில் ஓர் ஆயுதம்தான். சத்ரு வதம் என்பதையும் நோக்காக உடையதுதான். இந்த ஆயுதத்திற்கும் கண்டறிந்த ரிஷிகள், தேவதை என்று உண்டு. இந்தத் தேகம் நிலையில்லாதது. அதை அழிக்க வரும் எதிரிகளே சத்ருக்கள் என்று ஆயுதங்களை எறிந்து அழிக்கத் தக்கவர்கள் என்றால், இந்த ஆத்மாவிற்கு எதிரிகளாக வரும் அறியாமை, உலக ஆசைகளின் வேகம், மாயை, காமம், குரோதம் லோபம், மதம், மாச்சரியம், மோகம் ஆகிய சத்ருக் கூட்டங்கள் மாயாவிகளிலும் மாயாவிகளான பகைகள். மற்ற புறப்பகைகள் உன் உடைமைகளைக் கைப்பற்றி, உன் இருப்பிடத்தைக் கைப்பற்றிப் பின் உன்னை அழிக்கும். ஆனால் இந்தக் கொடிய அகப்பகைகளோ முதலில் உன்னை அடிமைப் படுத்திப் பின்னர் உன் நித்ய வாழ்வு, அளவிலா ஆநந்தம், எல்லையற்ற ஞானம் ஆகிய உன் சொந்த இயல்புகளாகிய செல்வங்களை உன்னைக் கொண்டே தங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடும். இவற்றுக்கு அழிவு என்பது ஒரே ஆயுதத்தினால்தான். அதுதான் பகவானின் நாமஜபம்.

இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள். வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி. பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்குச் சந்தஸ். தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு. பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது. தேவகீநந்தன: என்பது சக்தி. திரிஸாமா என்பது இதயம். அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம். பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியைத் தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும், போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.' என்கிறான் பீஷ்மன். மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி அவன் சொன்னவை இவை. அவனைவிட வீரனும் இருந்ததில்லை. அவனுடைய சொற்களைவிட தீரமும் இருந்ததில்லை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

3 comments:

  1. Excellent work done by you.Thank you so much.

    ReplyDelete
  2. Wonderful and clear meanings explanations and nice flow of language !! Great service to tamil readers !! God bless you with many more translations of His teachings !!zillion thanks!!

    ReplyDelete
  3. Very clear explanation. Superb flow and writing. Thank you so much 🙏🏽

    ReplyDelete