Thursday, December 16, 2021

சுபாங்கோ லோகஸாரங்க:

சுபா4ங்கோ3 லோகஸாரங்க3ஸ் ஸுதந்துஸ்தந்துவர்த்த4ந :|
இந்த்3ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாக3ம :|| 


சுபாங்க: -- தியானத்தில் மனம் தானாகக் குவிந்து லயிக்கும் படியான மிகவும் சுபமயமான அங்கங்களை உடையவர் என்பதால் சுபாங்கர் 

லோகஸாரங்க: - லோகஸார: என்று பிரணவத்திற்குப் பெயர். பிரணவத்தினால் அடையப்படுபவராக இருப்பதால் ஸ்ரீவிஷ்ணுவானவர் லோகஸாரங்க: என்று சொல்லப்படுகிறார். 

ஸுதந்து: - சிலந்தி எப்படித் தன் உடம்பிலிருந்தே நூலை உண்டாக்கி வலை பின்னுமோ அப்படி அழகிய நூல் வலையாகிய பிரபஞ்சத்தைத் தம்மிலிருந்து உண்டாக்கிப் பின்னுபவர் ஆகையாலே ஸுதந்து: என்று அழைக்கப்படுகிறார் 

தந்து வர்த்தன: - சிலந்தி நூலை மேலும் மேலும் உண்டாக்கும், தன்னுள் இழுத்தும் கொள்ளும். அது போல் இந்தப் பிரபஞ்ச வலையை வளர்க்கவும், பின்னர் தன்னுள் ஒடுக்கவும் வல்லவர் ஆகையால் அவர் தந்து வர்த்தனர் ஆகிறார் 

இந்த்ர கர்மா - இவ்வாறு ஒவ்வொன்றும் பரஸ்பரம் தொடர்பில் இருக்கும் வண்ணம், வலை போல் பின்னுவதால் அவர் இந்த்ர ஜாலம் ஆகிய (ஜாலம் - வலை) கர்மாவைச் செய்பவர் என்பதால் இந்த்ர கர்மா என்று சொல்லப்படுகிறார் 

மஹாகர்மா - உலகக் கர்மங்கள் அனைத்தும் பஞ்ச மஹா பூதங்களை அடிப்படையாகக் கொண்டவை. அந்தப் பஞ்ச மஹா பூதங்களையே சிருட்டி செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீவிஷ்ணுவானவர் மஹாகர்மா என்று அழைக்கப்படுகிறார் 

க்ருதகர்மா - இவ்வாறு கர்மங்கள் செய்வதால் அவருக்கு ஏதோ புதிதாகப் பயன் உண்டு என்று இல்லை. ஏனெனில் அனைத்து கர்மங்களாலும் ஆக வேண்டிய பயன் அவரிடத்தில் பூரணமாக எப்பொழுதும் இருக்கிறது. எனவே அவர் க்ருதகர்மா எனப்படுகிறார். 

க்ருதாகம: - மனிதர்கள் பலவித கர்ம வினைப் பயன்களில் இழுப்புண்டு பின்னர் தம் விடுதலைக்கு ஏங்குங்கால், அவரை அடைதலாகிய வீடு பேறு என்பதை அடைவிக்கும் வழிகளைக் கூறுவது ஆகமம். அனைத்து ஆகமங்களையும் அவரவர் பரிபக்குவத்திற்குத் தக்க வண்ணம் செய்தவர் ஸ்ரீவிஷ்ணு ஆகையாலே அவர் க்ருதாகமர் என்று அழைக்கப் படுகிறார் 

***

No comments:

Post a Comment