Thursday, December 16, 2021

அரௌத்ர: குண்டலீ சக்ரீ

அரௌத்3ர: குண்ட3லீ சக்ரீ விக்ரம்யூர்ஜித சாஸந: | 
ப்3தா3திக3: ப்3த3ஸஹ: சிசிர: ர்வரீகர: || 


அரௌத்ர: - ஜீவர்களின் பாபங்களை நோக்கில் மிகக் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்பு இருப்பினும் தமது குற்றமற்ற கல்யாண குணங்களின் மிகுதியாலும், திருமகள் என்றும் தம்மை விட்டுப் பிரியாமல் நின்று ஏற்படுத்தும் தயையாலும் கொடும் செய்கையோ, விருப்போ, குரோதமோ இன்றி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அரௌத்ர: என்று போற்றப்படுகிறார். 

குண்டலீ - ஆதிசேஷரூபியானவர் ஆதலாலும், ஸாங்க்யம், யோகம் என்னும் இரண்டையும் தம் காதுகளில் அழகிய குண்டலங்களாகத் தாம் அணிபவர் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குண்டலீ என்று அழைக்கப்படுகிறார். 

சக்ரீ - ‘மிகவும் அசைவதும், மிகுந்த வேகமுடன் நகர்வதுமான அந்தக்கரணமாகிய மனம் என்னும் தத்துவத்தைச் சக்ரமாகக் கையில் கொண்டவர்’ என்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் சொல்வதற்கேற்ப, மனம் என்பதையே தம் கையில் ஆழியாகத் தரித்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சக்ரீ என்று தொழப்படுகிறார். 

விக்ரமீ - தாளால் உலகளந்த தாயோன் என்னும் சிறப்பு தமக்கே வாய்த்த பிரான் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விக்ரமீ என்று கொண்டாடப்படுகிறார். 

ஊர்ஜிதசாஸந: - ஊழிதோறூழி ஒன்றும் பிறழாமல், ஒருவராலும் கடக்கலாகாக் கட்டளைகள் தந்த பிரான் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஊர்ஜிதசாஸந: என்று போற்றப்படுகிறார். 

சப்தாதிக: - சப்தம் என்னும் சாத்திரங்களால் எல்லையிட்டு வரையறை செய்து கூறிவிட முடியாதவர், எவ்வளவு விவரித்தாலும் அதனினும் மிக்குத் திகழும் இயல்பினர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தாதிகர் எனப்படுகிறார். 

சப்தஸஹ: - யானை முதலான தெளிவான பேச்சு இல்லாத உயிரினங்களின் தீனக் குரலையும் பொறுப்புடன் தாம் தாங்கித் துயர் துடைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தஸஹர் எனப்படுகிறார். 

சிசிர: - ஜீவர்களின் தாபக்குரல் எழுந்ததுமே விரைவு மயமாக ஆகிவிடுபவர், யானையின் அழுகுரலுக்கு விரைவாகி வந்து தாபம் போக்கிக் குளிரச் செய்தது போல் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சிசிர: என்று போற்றப்படுகிறார். 

சர்வரீகர: - ஸம்ஸாரமாகிய கொடிய மடுவில் சிக்கி அலறும் ஜீவனைக் காக்க வேண்டி அனைத்துக் காப்புகளையும் அனைத்து விதத்திலும் விரைவில் செய்பவர் என்பதாலும், உலக நாட்டம் கொண்டவர்க்கு இரவாகத் தெரியும் ஆன்மிகப் பாதையைத் தம் அடி அணைந்த பக்தர்களுக்குப் பகலாக ஆக்குகிறார் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சர்வரீகர: என்று தொழப்படுகிறார். 

***

No comments:

Post a Comment