ஸுமேதா4 மேத4ஜோ த4ந்ய: ஸத்யமேதா4 த4ராத4ர: ||
அமாநீ -- உயிர்களுக்கு உள்ளுயிராய் அவரே இருப்பதால் தம் சரீரமாக இருக்கும் ஜீவர்களின் துயர் துடைக்க மானாபிமானம் பார்க்காமல் தம் அக்கறையாகக் கொண்டு அருள்பவர்
மாநத: -- தம் பக்தர்களை, தம்மை நாடி வந்த ஜீவர்களை மிகவும் கௌரவிப்பவர்
மாந்ய: -- பக்தர்கள் தம்மிடம் உரிமை எடுத்துக்கொண்டு தம்மிடம் சொல்வதையும், அவர்களுக்காகத் தாம் இறங்கி வந்து செய்யும் எளிமையான இயல்பையும் தம்முடைய பெருமையாகக் கருதுபவர்
லோகஸ்வாமீ -- அவ்வாறு எளிவரும் இயல்பினராகப் பக்தர்களின் வேண்டுக்கோளை நிறைவேற்றச் சுலபராய் வருபவர் யார் எனில் அனைத்து உலகங்களுக்கும் உடைமையாளரும், படைத்தவரும், தலைவரும் ஆவார்.
த்ரிலோகத்ருத் -- அவர் ஏன் இவ்வாறு இவ்வளவு எளிமையாக இறங்கி வரவேண்டும் என்றால் அவர் வெறுமனே புறத்தே அனைத்துக்கும் சொந்தக்காரராக இல்லாமல் மூவுலகத்தையும் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் நின்று தாங்குவதால் அன்றோ!
ஸுமேதா -- அவர் எப்பொழுதும் தம் பக்தர்களிடம் கனிந்த உள்ளம் கொண்டவராக இருக்கிறார்
மேதஜ: -- தயையின் காரணமாகவே அவர் பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, அவர்களின் தீவிர வேண்டுதல் என்னும் வேள்வியின் பயனாகப் புவியில் அவதாரம் எடுக்கிறார்.
தந்ய: -- அவ்வாறு அவதாரம் எடுக்கும் பொழுது இன்னாரின் குழந்தை என்று சொல்லப்படுவதை பெரும் பேறு போன்று கருதுகிறார்
ஸத்யமேத: -- அவ்வாறு உறவினால் உரிமை கொண்டாடுவதை ஓர் அலங்காரமாகக் கருதாமல் ஆர்வத்துடன் சத்யமாகவே அவ்வாறு கருதுபவர் ஆகிறார்
தராதர: -- உலகைத் தாங்குவது மட்டுமின்றி அவதாரம் எடுக்கும் காலங்களில் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பல்லுயிர்களைக் காப்பது போன்ற அதிசயச் செயல்களைச் செய்கிறார்
***
No comments:
Post a Comment