Thursday, December 16, 2021

அநாதி: பூர்புவோ லக்ஷ்மீ:

அநாதி3: பூ4ர்பு4வோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்க3த3: | 
ஜனனோ ஜன ஜன்மாதி3: பீ4மோ பீ4மபராக்ரம: || 



அநாதி: - படைப்புக்கு அதிகாரி தெய்வங்களாக இருக்கும் பிரம்மா முதலியவர்களாலும் அடையவும், அறியவும் அரியராய் இருப்பவர் பக்தியில் திளைக்கும் எளியவர்களால் கிட்டுவதற்குச் சுலபமானவராய் இருக்கும் காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநாதி: என்று சொல்லப்படுகிறார். 

பூர்புவ: - கடைத்தேறிய ஆத்மாக்களுக்குத் தாங்கும் நிலையமாகத் தாமே இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பூர்ப்புவ: என்று போற்றப்படுகிறார். 

லக்ஷ்மீ: - தம்மை அடைந்தவர்களுக்கு அனைத்து நன்மைகளும், சுபமும், சிறப்பும் தாமேயாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லக்ஷ்மீ: என்று கருதப்படுகிறார். 

ஸுவீர: - தம்மைச் சரணடைந்தோருக்கு உண்டாகும் தடைகளை நீக்கி நன்மையை அடைவிக்கும் திறலாகத் தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவீர; என்று கொண்டாடப்படுகிறார். 

ருசிராங்கத: - தமது திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தமது பக்தர்கள் கண்டு அனுபவித்துத் தொழும்படியாக அருள்செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ருசிராங்கத: என்று போற்றப்படுகிறார். 

ஜனன: - பக்தியே இல்லாதவர்களும் தன்னை உணர்ந்து பக்தி செய்யும்படியாக அவர்களை ஆக்கும் அருள் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனன: என்று கொண்டாடப்படுகிறார். 

ஜனஜன்மாதி: - பக்தியில் பிறக்கும் புதிய பிறவியைத் தருவதோடல்லாமல் அந்தப் பக்திமயமான பிறப்புக்குப் பலனாகவும் தாமே இருந்து அருள்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனஜன்மாதி: என்று போற்றப்படுகிறார். 

பீம: - உயர் நிலையும், உய்வும் அடைய அக்கறை கொள்ளாமல், அவன் அருள் செய்வதையும் விலக்கியபடித் தங்கள் உணர்ச்சிகளின்படிச் செல்வோருக்குப் பயமே உருவாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீம: என்று சொல்லப்படுகிறார். 

பீமபராக்ரம: - தம்முடைய பராக்ரமத்தால் தீயோர்களுக்கு அச்சம் விளைவிக்கும் லீலைகளை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீமபராக்ரம: என்று சொல்லப்படுகிறார். 

***

No comments:

Post a Comment