Thursday, December 16, 2021

ஸுவர்ணபிந்து: அக்ஷோப்ய:

ஸுவர்ணபி3ந்து: அக்ஷோப்4ய: ஸர்வவாகீ3ச்வர: ஈச்வர: | 
மஹாஹ்ரதோ3 மஹாக3ர்தோ மஹாபூ4தோ மஹாநிதி4: || 


ஸுவர்ணபிந்து: - பொன்னினும் துலங்கும் பூர்ண அழகுடைய அவயவங்கள் உடையவர்; நன்மையாகிய எழுத்தும் பிந்துவெனும் அநுஸ்வரமும் கூடிய பிரணவமாய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸுவர்ணபிந்து: எனப்படுகிறார் 

( பூதத்தாழ்வார் -

கதையின் பெரும்பொருளும் கண்ணா!
நின்பேரே.
இதயம் இருந்து அவையே ஏத்தில்
கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே!
உன்னைப்
பருமொழியால் காணப் பணி. ) 

அக்ஷோப்ய: - யாவராலும் எதனாலும் கலக்கக் கூடாதவர்; காம குரோதாதிகளாலும், சப்தாதி விஷயங்களாலும், அசுரர்களாலும் கலக்க முடியாதவர்; ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு அக்ஷோப்ய: என்று சொல்லப் படுகிறார். 

( நம்மாழ்வார் -

கண்ணும் செந்தாமரை
கையும் அவை
அடியோ அவையே
வண்ணங்கரியதோர் மால்
வரை போன்று
மதி விகற்பால்
விண்ணும் கடந்து
உம்பரப்பால் மிக்கு
மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ?
எம்பிரானது எழில் திறமே. ) 

ஸர்வவாகீச்வரேச்வர: - சொல் என்னும் சக்திக்குத் தலைவர்களாய் உள்ள பிரம்மாதி தேவர்களுக்கும் ஈசுவரராய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸர்வவாகீச்வரேச்வர: என்னப்படுகிறார். 

( திருமங்கையாழ்வார் - 

....அறுவகைச் சமயமும் 
அறிவரு நிலையினை; 
ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை; 
அறம்முதல் நான்கவையாய் 
மூர்த்தி மூன்றாய் 
இருவகைப் பயனாய் 
ஒன்றாய் விரிந்து நின்றனை..) 

மஹாஹ்ரத: - யோகிகளாகிய ஆழ்வார்கள் எந்த மடுவில் முழுகி அளவற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறார்களோ அந்தப் பெரும் மடுவாக, தரைதட்டாத குழியாக இருப்பவன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு மஹாஹ்ரத: என்று போற்றப் படுகிறார் 

( நம்மாழ்வார் -

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
பர நன் மலர்ச் சோதீயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
சுடர்ஞான இன்பமேயோ!
சூழ்ந்து அதனில் பெரிய
என் அவா அறச் சூழ்ந்தாயே! ) 

மஹாகர்த: - அடியார்களை ஆனந்திப்பிக்கும் மடுவாக, குழியாக மட்டும் இல்லாமல், உலக மக்களை மயக்கி உள்ளே அமிழ்த்தும் கடுங்குழியாகவும் அவன் அமைந்திருக்கிறான். உலக மயக்கம் கொண்ட மக்கள் விஷயத்தில் எது அமிழ்த்தும் சுழல் குழியாக ஆகிறதோ அதுவே அவனுடைய உலக ரீதியான வடிவமாக மஹாகர்த: என்று அவன் சொல்லப்பட காரணமாக ஆகிறது. 

மஹாபூத: - காலத்தால் மாறாத ஸ்வரூபத்தை உடையவர், முக்காலமும் ஒரேபடித்தான ஸ்வரூபத்தைக் கொண்டவர், எக்காலமும் தன்னியல்பிலேயே நிலைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாபூதர் என்று அழைக்கப்படுகிறார். 

மஹாநிதி: - அனைத்துப் பொருள்களும், அனைத்து உயிர்களும் சேமக் காப்பு அடைந்து வெளிப்பட்டு வளர்ந்து தம் இலக்காகிய அவரையே அடையத் தகுந்த ஒன்றாகத் தொடக்கம் முதல் நிறைவுவரை அவரே திகழ்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாநிதி என்று அழைக்கப்படுகிறார் 

( பெரியாழ்வார் -

துப்பு உடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவர் என்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு
என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும் உன்னை
நான் நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு
இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! ) 

***

No comments:

Post a Comment