Thursday, December 16, 2021

ப்ரமாணம் ப்ராணநிலய:

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணத்4ருத் ப்ராணஜீவந: | 
தத்வம் தத்வவிதே3காத்மா ஜன்மம்ருத்யு ஜராதிக3: || 



ப்ரமாணம் -- அறியாமை, ஒன்றை வேறொன்றாக அறிதல், விபரீதமாக அறிதல் என்பவை அறிவதில் உண்டாகும் மூன்று குறைகள். இந்த மூன்று குறைகளும் அற்ற ஐயம் திரிபு இல்லாத அறிவை எது ஏற்படுத்துமோ அதற்குப் பிரமாணம் என்று பெயர். மயர்வற மதிநலம் தருபவர் அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவே பிரமாணம் எனப்படுகிறார் 

ப்ராணநிலய: -- பறவைகள் தம் கூட்டில் சென்று அடைவது போன்று அவரிடமே உயிர்வர்க்கங்கள், ஜீவர்கள் புகலாக அடைகின்றனர்; அன்றாடம் வாழ்க்கையில் பிராணன்களும் அவரிடமே இலயம் அடைகின்றன என்பதால் ப்ராணநிலய: 

ப்ராணத்ருத் -- பெற்ற தாயாய்த் தந்தையாய் ஜீவர்களைத் தாங்குவதால் அவர் ப்ராணத்ருத் 

ப்ராணஜீவந: -- உடலில் ஜீவர்கள் தங்கி ஜீவிதம் நடைபெறப் பிராணன்களை அவரே நோக்கி நடத்துவதால் ப்ராணஜீவந: 

தத்வம் -- அறியப்படும் பொருளின் உள்ளது உள்ளபடியான மாறா இயல்பிற்குத் தத்வம் என்று பெயர். பிரபஞ்சம் அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பவை ஆகையால் மாறாத தத்வம் பரமாத்மாவே என்பதால் அவருக்குப் பெயரே தத்வம். 

தத்வவித் -- அறியப்படும் பிரபஞ்சத்தின் உள்ளபடியான தத்வமாக அவர் இருப்பதுமட்டுமின்றி அறியும் சித் என்னும் ஜீவனின் உள் தத்வமாகவும் அவரே இருக்கிறார் 

ஏகாத்மா -- சித், அசித் என்னும் இரண்டும் அவருக்குச் சேஷமாகவும், அவருக்குச் சரீரமாகவும் இருப்பவை ஆதலால் அவர் ஒருவரே ஒரே ஆத்மாவாக ஏகாத்மா என்று அழைக்கப்படுகிறார். 

ஜன்மம்ருத்யுஜராதிக: -- அவ்வாறு அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய் அவர் இருப்பினும் ஜீவர்கள், உலகப் பொருட்கள் ஆகியவற்றின் மாற்றங்கள், குறைகள் ஆகியவை தம்மிடம் நிழலாடாத வகையில் அவற்றைக் கடந்தவராக இருக்கிறார் 

***

ஆதாரநிலயோSதாதா

ஆதா4ரநிலயோ தா4தா புஷ்பஹாஸ: ப்ரஜாக3ர: | 
ஊர்த்4வக3: ஸத்பதா2சார: ப்ராணத3: ப்ரணவ: பண: || 


ஆதாரநிலய: - சாதுக்கள் இருப்பதால்தான் உலகம் நிலைபெறுகிறது. அந்தச் சாதுக்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆதாரநிலய: என்று போற்றப்படுகிறார். 

(அ)தாதா - ஆதாரமாய் இருக்கும் நெறிகளைத் தாமே உபதேசித்தும், தாமே நடத்திக் காட்டியும் தாங்குபவராயும், தம்மை ஒருவர் தாங்குதல் அற்றவராயும் உள்ளவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தாதா என்னப்படுகிறார். 

புஷ்பஹாஸ: -- பூவிரிவது போல் புவனம் படைப்பவன்; பூவிரிந்து மணம் பரப்புவது போல் பக்தர்களின் உள்ளத்தில் மணப்பவன் 

ப்ரஜாகர: -- வயலை உழவன் விழித்திருந்து நோக்குவது போல் உயிர்களை உறங்காமல் காப்பவன் 

ஊர்த்வக: -- உலகளந்த உத்தமனாய் இருப்பதால் உறங்காது உலகம் காக்கின்றான் 

ஸத்பதாசார: -- பக்தர்களை எப்பொழுதும் முக்திக்கான சாதனங்களில் முனைப்பு கொள்ளச் செய்பவன் 

ப்ராணத: -- உலகத் துயர்களில் உழலும் ஜீவர்களைக் காப்பாற்றி உயிர் தருபவன் 

ப்ரணவ: -- ப்ரணவத்தைப் போதிப்பதன் மூலம் தனக்கும் ஜீவனுக்கும் உள்ள நித்யமான உறவை உணர்த்தித் தனக்கு என்றும் ஜீவன் சேஷமானது என்னும் ஞானத்தைத் தருபவன்; அவனும் ப்ரணவமும் ஒன்றே. 

பண: -- பக்தர்களிடம் சில சமயம் அவர்களைத் தனக்கு மேல் வைத்து அவர்களுக்கு அடங்கி நடப்பது போன்ற லீலைகளைச் செய்பவர். 

***

அநாதி: பூர்புவோ லக்ஷ்மீ:

அநாதி3: பூ4ர்பு4வோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்க3த3: | 
ஜனனோ ஜன ஜன்மாதி3: பீ4மோ பீ4மபராக்ரம: || 



அநாதி: - படைப்புக்கு அதிகாரி தெய்வங்களாக இருக்கும் பிரம்மா முதலியவர்களாலும் அடையவும், அறியவும் அரியராய் இருப்பவர் பக்தியில் திளைக்கும் எளியவர்களால் கிட்டுவதற்குச் சுலபமானவராய் இருக்கும் காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநாதி: என்று சொல்லப்படுகிறார். 

பூர்புவ: - கடைத்தேறிய ஆத்மாக்களுக்குத் தாங்கும் நிலையமாகத் தாமே இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பூர்ப்புவ: என்று போற்றப்படுகிறார். 

லக்ஷ்மீ: - தம்மை அடைந்தவர்களுக்கு அனைத்து நன்மைகளும், சுபமும், சிறப்பும் தாமேயாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லக்ஷ்மீ: என்று கருதப்படுகிறார். 

ஸுவீர: - தம்மைச் சரணடைந்தோருக்கு உண்டாகும் தடைகளை நீக்கி நன்மையை அடைவிக்கும் திறலாகத் தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவீர; என்று கொண்டாடப்படுகிறார். 

ருசிராங்கத: - தமது திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தமது பக்தர்கள் கண்டு அனுபவித்துத் தொழும்படியாக அருள்செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ருசிராங்கத: என்று போற்றப்படுகிறார். 

ஜனன: - பக்தியே இல்லாதவர்களும் தன்னை உணர்ந்து பக்தி செய்யும்படியாக அவர்களை ஆக்கும் அருள் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனன: என்று கொண்டாடப்படுகிறார். 

ஜனஜன்மாதி: - பக்தியில் பிறக்கும் புதிய பிறவியைத் தருவதோடல்லாமல் அந்தப் பக்திமயமான பிறப்புக்குப் பலனாகவும் தாமே இருந்து அருள்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனஜன்மாதி: என்று போற்றப்படுகிறார். 

பீம: - உயர் நிலையும், உய்வும் அடைய அக்கறை கொள்ளாமல், அவன் அருள் செய்வதையும் விலக்கியபடித் தங்கள் உணர்ச்சிகளின்படிச் செல்வோருக்குப் பயமே உருவாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீம: என்று சொல்லப்படுகிறார். 

பீமபராக்ரம: - தம்முடைய பராக்ரமத்தால் தீயோர்களுக்கு அச்சம் விளைவிக்கும் லீலைகளை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீமபராக்ரம: என்று சொல்லப்படுகிறார். 

***

அநந்தரூபோSனந்தஸ்ரீ:

அநந்தரூபோSனந்தஸ்ரீர் ஜிதமன்யுர் ப4யாபஹ: | 
சதுரச்ரோ க3பீ4ராத்மா விதி3சோ வ்யாதி3சோ தி3: || 


அநந்தரூப: - தமது பக்தர்கள் எந்த ரூபத்தில் தம்மைக் காண வேட்கிறார்களோ அவ்வித ரூபத்தில் எல்லாம் தாம் தோன்றி அவர்களுக்கு அருள்பாலிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தரூப: என்று கொண்டடப்படுகிறார். 

அநந்தஸ்ரீ: - தமது அடியார்களுக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் அளவில்லாது வழங்கும் தன்மையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஸ்ரீ: என்று போற்றப் படுகிறார். 

ஜிதமன்யு: - தீயவர்களிடத்தும் சினம் காவாமல் அவர்களிடம் உள்ள தீய குணத்தை அகற்றி அவர்களும் நல்வழி அடைந்து உய்யும் வழிவகைகளைச் செய்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜிதமன்யு: என்று அழைக்கப் படுகிறார். 

பயாபஹ: - தாம் எப்பொழுதும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுடன் ஜீவர்களுக்கு ஏற்படுவதான தாங்கள் ஒரு நாதனற்ற அநாதைகளோ என்ற பயத்தையும் நீக்கிக் காப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயாபஹ: என்று போற்றப்படுகிறார். 

சதுரச்ர: - என்றும் எதற்கும் உசிதமானவற்றையே செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சதுரச்ர; என்று சொல்லப்படுகிறார். 

கபீராத்மா - இவ்வளவினர் என்று யாவராலும் அறியக் கூடாத ஸ்வரூபம் உள்ளவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபீராத்மா என்று போற்றப் படுகிறார். 

விதிச: - எவ்வளவு உயர்ந்தோராயினும் தம்மை எத்தனை காலம் எவ்வளவு முயன்று துதித்தாலும் அந்தத் துதிக்கெல்லாம் எட்டாத சிறப்புகளும் மகிமையும் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விதிச: என்று போற்றப்படுகிறார். 

வ்யாதிச: - அவரவர்க்கு உரிய சிறப்புகளை அளித்து, உரிய அதிகாரங்களைத் தந்து, அவரவர்க்கு உரிய பலன்களையும் நியதியாகப் பெற நியமிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வ்யாதிச: என்று சொல்லப்படுகிறார். 

திச: - அவரவர்க்கு உரிய நிலையிலும், தகுதியிலும் நிறுத்தி உயிர்களைப் பூரணமாக மலரச் செய்கிறார் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் திச: என்று சொல்லப்படுகிறார். 

***

உத்தாரணோ துஷ்க்ருதிஹா

உத்தாரணோ து3ஷ்க்ருதிஹா புண்யோ து3:ஸ்வப்நநாந: | 
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தி2த: || 


உத்தாரண: - ஸம்ஸாரச் சுழலிலிருந்து காப்பாற்றி மேலெடுத்து மோக்ஷம் தந்து நித்ய நிலையைத் தருகிறார் என்பதால் உத்தாரண: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் போற்றப்படுகிறார். 

துஷ்க்ருதிஹா - நன்மையைக் காப்பது மட்டுமின்றித் தீமையைச் சிறிதும் கருணையின்றித் தவறாமல் அழிக்கவும் செய்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் துஷ்க்ருதிஹா என்று சொலப்படுகிறார். 

புண்ய: - தம்மைச் சரணடைந்தோருக்குத் தாமே மிகச்சிறந்த புண்ணியமாகவும் இருப்பவர் ஆதலால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்ய: என்று போற்றப்படுகிறார். 

(நன்மைசேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி, எண் இல் மூர்த்தியாய், நாக மூர்த்தி சயனமாய் -- திருச்சந்தவிருத்தம்)

து:ஸ்வப்நநாசந: - ஸ்ரீகஜேந்திர மோக்ஷத்தில் கூறியவாறு காப்பாற்றப்பட்ட சாதுக்களையும், காப்பாற்றிய தம்மையும் நினைப்பவர்களை நலியும் கெட்ட கனவுகளை நாசம் செய்து விடுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் து:ஸ்வப்நநாசநர் என்று தொழப்படுகிறார். 

வீரஹா - ஜீவர்களை முக்தி பெற மாட்டாமல் தடுக்கும் பல வழிகளையும் தடுத்து நற்கதி அருள்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வீரஹா என்று போற்றப்படுகிறார். 

ரக்ஷண: - உடலால், உள்ளத்தால், உயிர்க்கு உற்ற நல் துணையால் ஆன்ற காப்புகள் அனைத்தும் சரணடைந்த ஜீவர்களுக்குச் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரக்ஷண: என்று போற்றப்படுகிறார். 

ஸந்த: - காப்பதோடன்றி அவர்களை ஆன்மிக உணர்விலும், அதனடியாகப் பகவானாகிய தம்மிடத்தில் ஊன்றிய பக்தியிலும் எக்கணமும் நன்கு வளரும்படி வளர்ப்பதால் அவர்களை நன்கு இருப்பவர்களாக ஆக்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸந்த: என்று கொண்டாடப்படுகிறார். 

ஜீவந: - தம்மைச் சரணடைந்தாரின் யோக க்ஷேமங்களைத் தாம் வகிப்பதோடன்றித் தம்மால் ஒறுக்கப்பட்ட தீயோரும் நல்வழியில் வாழும்படிச் செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜீவந: என்று சொல்லப்படுகிறார். 

பர்யவஸ்தித: - அன்பினால் ஜீவராசிகளைச் சூழ்ந்தும், உள்நின்றும் காத்துத் திருத்தி நல்வழிப்படுத்தித் தம்மிடம் வந்து சேரும்படிச் செய்யும் தயாமூர்த்தியாக எப்பொழுதும் நிலைநிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்யவஸ்தித: என்று தொழப்படுகிறார். 

***

அக்ரூரோ பேசலோ தக்ஷோ

அக்ரூர: பேலோ த3க்ஷோ த3க்ஷிண: க்ஷமிணாம் வர: | 
வித்3வத்தமோ வீதப4ய: புண்யச்ரவண கீர்த்தன: || 


அக்ரூர: - தாம் பக்தர்களைக் காக்கும் போதும், சாதுக்களை நலியும் தீய சக்திகளை அழிக்கும் போதும் ஒரே படித்தாக அன்பே அன்றிக் கொடிய தன்மை சிறிதும் இல்லாதவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரூரர் எனப்படுகிறார். 

பேசல: - எவ்வளவு விரைவாகச் செயல் புரிந்தாலும், என்ன பேசினாலும், எந்நிலையிலும் பூரண அழகு மிளிரும்படி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பேசல: என்று சொல்லப்படுகிறார். 

தக்ஷ: - தம்முடைய பூரண அமைதியும், நிறைந்த அழகும் சிறிதும் நலுங்காமல் இருந்தாலும் அவருடைய செயல்கள் மிக விரைவாகவும், மிகத் துல்லியமாகவும், தவறாமலும் இருக்கும்படியான காரியத் திறன் அவரிடம் நிறைந்து காணப் பெறுவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தக்ஷ: என்று போற்றப்படுகிறார். 

தக்ஷிண: - காரியத் திறமையும், செயல் விரைவும் பூரணமாகத் துலங்குகிறவர் என்றாலும் தாம் தம்மைச் சரணடைந்த ஜீவர்களுக்குத் தமக்குத் திருப்தியாகப் போதிய அளவு செய்யவில்லையே என்ற ஆற்றாமையைக் கொண்டவர் என்பதால் அடியவர்களின் மிக்க உள்ள நெகிழ்வுக்குக் காரணம் ஆகிறார் என்பதால் அவர் தக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார். 

க்ஷமிணாம்வர: - பொறுமையில் சிறந்த பூமியையும் தாம் தாங்குபவர் என்பதால் பொறுமையினும் பொறுமை மிக்கவர் எனவே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ஷமிணாம்வர: என்று சொல்லப்படுகிறார். 

வித்வத்தம: - அறிவில் எல்லாம் மிக்க அறிவாகவும், அறிபவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வித்வத்தம: என்று போற்றப்படுகிறார். 

வீதபய: - அறிவும் அறிவோனும் அவரே ஆக இருப்பதால் அவருக்கு அந்நியமாக ஒன்று இல்லாமையால் பயம் என்ற ஒன்று இல்லாதவர் என்பதாலும் தம்மைப் புகலடைந்தோருக்குத் தம்மைப் பற்றிய நினைவாலேயே பயத்தை இல்லாமல் செய்பவராகவும் இருப்பதால் வீதபய:

புண்யச்ரவணகீர்த்தந: - தம்மைப் பற்றிய சரித்திரங்களையும், புகழ்த்துதிகளையும் கேட்பதனாலேயே ஜீவர்களின் அசுபங்கள் நீங்கவும், அவ்வாறு கேட்பதுவே மிகவும் பெரிய புண்ணியமாக அமைந்தவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்யச்ரவணகீர்த்தந: என்று போற்றப்படுகிறார். 

***



அரௌத்ர: குண்டலீ சக்ரீ

அரௌத்3ர: குண்ட3லீ சக்ரீ விக்ரம்யூர்ஜித சாஸந: | 
ப்3தா3திக3: ப்3த3ஸஹ: சிசிர: ர்வரீகர: || 


அரௌத்ர: - ஜீவர்களின் பாபங்களை நோக்கில் மிகக் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்பு இருப்பினும் தமது குற்றமற்ற கல்யாண குணங்களின் மிகுதியாலும், திருமகள் என்றும் தம்மை விட்டுப் பிரியாமல் நின்று ஏற்படுத்தும் தயையாலும் கொடும் செய்கையோ, விருப்போ, குரோதமோ இன்றி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அரௌத்ர: என்று போற்றப்படுகிறார். 

குண்டலீ - ஆதிசேஷரூபியானவர் ஆதலாலும், ஸாங்க்யம், யோகம் என்னும் இரண்டையும் தம் காதுகளில் அழகிய குண்டலங்களாகத் தாம் அணிபவர் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குண்டலீ என்று அழைக்கப்படுகிறார். 

சக்ரீ - ‘மிகவும் அசைவதும், மிகுந்த வேகமுடன் நகர்வதுமான அந்தக்கரணமாகிய மனம் என்னும் தத்துவத்தைச் சக்ரமாகக் கையில் கொண்டவர்’ என்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் சொல்வதற்கேற்ப, மனம் என்பதையே தம் கையில் ஆழியாகத் தரித்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சக்ரீ என்று தொழப்படுகிறார். 

விக்ரமீ - தாளால் உலகளந்த தாயோன் என்னும் சிறப்பு தமக்கே வாய்த்த பிரான் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விக்ரமீ என்று கொண்டாடப்படுகிறார். 

ஊர்ஜிதசாஸந: - ஊழிதோறூழி ஒன்றும் பிறழாமல், ஒருவராலும் கடக்கலாகாக் கட்டளைகள் தந்த பிரான் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஊர்ஜிதசாஸந: என்று போற்றப்படுகிறார். 

சப்தாதிக: - சப்தம் என்னும் சாத்திரங்களால் எல்லையிட்டு வரையறை செய்து கூறிவிட முடியாதவர், எவ்வளவு விவரித்தாலும் அதனினும் மிக்குத் திகழும் இயல்பினர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தாதிகர் எனப்படுகிறார். 

சப்தஸஹ: - யானை முதலான தெளிவான பேச்சு இல்லாத உயிரினங்களின் தீனக் குரலையும் பொறுப்புடன் தாம் தாங்கித் துயர் துடைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தஸஹர் எனப்படுகிறார். 

சிசிர: - ஜீவர்களின் தாபக்குரல் எழுந்ததுமே விரைவு மயமாக ஆகிவிடுபவர், யானையின் அழுகுரலுக்கு விரைவாகி வந்து தாபம் போக்கிக் குளிரச் செய்தது போல் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சிசிர: என்று போற்றப்படுகிறார். 

சர்வரீகர: - ஸம்ஸாரமாகிய கொடிய மடுவில் சிக்கி அலறும் ஜீவனைக் காக்க வேண்டி அனைத்துக் காப்புகளையும் அனைத்து விதத்திலும் விரைவில் செய்பவர் என்பதாலும், உலக நாட்டம் கொண்டவர்க்கு இரவாகத் தெரியும் ஆன்மிகப் பாதையைத் தம் அடி அணைந்த பக்தர்களுக்குப் பகலாக ஆக்குகிறார் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சர்வரீகர: என்று தொழப்படுகிறார். 

***