Sunday, December 12, 2021

பூதாவாஸோ வாஸுதேவ:

பூ4தாவாஸோ வாஸுதே3வ: ஸர்வாஸுநிலயோSநல: | 
த3ர்பஹா த3ர்பதோ3Sத்3ருப்தோ து3ர்த4ரோSதா2பராஜித: || 


பூதாவாஸ: -- தம்மிடத்திலேயே அனைத்து உயிர்களும் இருந்து வாழ்ந்து இலயிக்கும்படியாக இருப்பவர் 

வாஸுதேவ: -- அனைத்து உலகையும் தம் மாயையால் மூடியிருப்பவர்; விசித்ரமான மாயையால் வஸுதேவர்க்கு நன்மகவாய்த் தோன்றியவர் 

ஸார்வாஸுநிலய: -- அனைத்துப் பிராணன்களுக்கும் உயிராய் இருப்பவர்; கோகுலத்தில் ஆயர்களால் தங்கள் உயிராகக் கொண்டு அன்பு செலுத்தப்பட்டவர் 

அநல: -- பக்தர்களுக்கு அருள்வதில் போதும் என்ற மனம் ஏற்படாதவர் 

தர்பஹா -- தேவர்களும் தங்களைத் தாங்களே தருக்கிக் கொண்டு வரும்பொழுது அதை அடக்குபவர் 

தர்பத: -- பக்தர்களுக்கு அன்பின் உரிமையால் ஏற்படும் கர்வத்தைக் கண்டு இரசிப்பவர் 

த்ருப்த: -- உலகியலில் மூழ்கிப் போகும் ஒரு ஜீவன் அதனின்றும் விலகித் தன்னை வந்து சரணடையும் போது அதில் மிகவும் மகிழ்ந்து பெருமிதமும், கர்வமும் கொள்பவர் 

துர்தர: -- மனம் வாக்குக்கு எட்டா மறைபொருளாய் இருந்தாலும் பக்தியுடன் தியானிக்கும் யோகியர்க்குத் தம்மைத் தியானத்தில் உணரும்படி வைப்பவர்; ஆயர்பாடியில் யார் கையிலும் சிக்காத குழந்தையாக லீலைகள் புரிந்தாலும் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயர் 

அபராஜித: - தம்மைப் பக்தியுடன் போற்றும் அடியார்க்கு உட்பகையாலோ வெளிப்பகையாலோ வெல்லமுடியாத நிலையைத் தருபவர் 

***

Saturday, December 11, 2021

ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா

ஸத்3க3தி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்3பூ4தி: ஸத்பராயண: | 
சூரஸேநோ யது3ச்ரேஷ்ட2: ஸந்நிவாஸ: ஸுயாமுன: || 


ஸத்கதி: -- மயர்வற மதிநலம் அளித்து அடியார்களை உயர்ந்த பேற்றை அடையச் செய்பவர் 

ஸத்க்ருதி: -- பக்தர்கள் நினைத்து மகிழ்ந்து உய்வடைய வேண்டி அவதாரங்கள் எடுத்துப் பல தெய்விகச் செயல்களைச் செய்பவர் 

ஸத்தா -- அனைத்து உயிர்களுக்கும் உயிர்நிலையாயும், சாதுக்களுக்குத் தாங்கி நிற்கும் உயிராகவும் இருப்பவர் 

ஸத்பூதி: -- பக்தர்களுக்குத் தாயாய்த் தந்தையாய் உறவாய்ச் சுற்றமாய் நட்பாய் எல்லாமும் ஆனவர் 

ஸத்பராயண: -- தெளிந்த ஞானிகளுக்கு உற்ற பெரும் புகலாய் இருப்பவர் 

சூரஸேந: -- தீமையை அகற்றி நன்மையை நிலைநாட்ட தீரர்களைத் தம்மைச் சூழ உடையவர் 

யதுச்ரேஷ்ட: -- யதுகுலத்தில் உலகுய்யப் பிறந்த ஸ்ரீகிருஷ்ணர் 

ஸந்நிவாஸ: -- ஞானியர்க்கு என்றும் உற்ற நிலையாய் இருப்பவர் 

ஸுயாமுன: -- யமுனை நதிக்கரையில் விண்ணகத்தை மண்ணகத்தில் நட்டது போல் திகழச் செய்தவர் 

***

Friday, December 10, 2021

மநோஜவஸ் தீர்த்தகரோ

மநோஜவஸ் தீர்த்த2கரோ வஸுரேதா வஸுப்ரத3: | 
வஸுப்ரதோ3 வாஸுதே3வோ வஸுர்வஸுமநா ஹவி: || 


மநோஜவ: -- மனத்தினும் வேகம் மிக்குப் பக்தர்களுக்கு அருள்செய்பவர் 

தீர்த்தகர: -- உயர்ந்த தீர்த்தங்கள் என்று சொல்லப்படும் சாத்திரங்கள், வித்யைகள் என்று அனைத்தையும் ஜீவர்கள் தூய்மை பெறவேண்டி அருள்செய்திருப்பவர் 

வஸுரேத: -- ஒளிதிகழ் பிறப்பாய் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர் 

வஸுப்ரத: -- வஸுதேவர்க்கும், தேவகிக்கும் வரமாய் வந்து அவதரித்தவர்; இவ்வுலகத்திற்கான நன்மையைத் தருபவர் 

வஸுப்ரத: -- அழியாத கீர்த்தியைப் பெற்றோர்க்குத் தந்து பிறந்தவர்; மோக்ஷம் என்னும் அவ்வுலகச் சிறப்பையும் தருபவர் அவரே 

வாஸுதேவ: -- பாற்கடல் விட்டு வசுதேவர்க்கு நன்மகவாய் அவதரித்தவர் 

வஸு: -- ஜீவர்களின் அழைப்புக் குரல் கேட்க என்றும் பாற்கடலில் பள்ளிகொள்பவர்; ஜீவர்களின் இதயத்தில் என்றும் இருப்பவர் 

வஸுமநா: -- திருவுக்கும் திருவாகிய செல்வராகப் பாற்கடலில் இருப்பினும் என்றும் வஸுதேவரை மனத்தில் நினைப்பவர் ஆகையால் வஸுமநா: 

ஹவி: -- ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம ஹவி: என்று சுருதி வசனத்திற்கேற்ப வஸுதேவரும், தேவகியும் தாம் பெற்றும் பேணி வளர்க்கும் பேற்றைத் துறந்து நந்தகோபர்க்கும், யசோதைக்கும் உரியவராய் ஹவிஸாக அளிக்க வளர்ந்தவர் 

***

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துத: ஸ்தோதா ரணப்ரிய: | 
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்திரநாமய: || 


ஸ்தவ்ய: -- வாக்கினால் செய்யப்படும் கைங்கரியமான துதி என்பதற்கு முற்றிலும், எக்காலத்தும், மாறாத நல்ல இலக்கு அவரே 

ஸ்தவப்ரிய: -- பக்தர்களின் உண்மையான உள்ளத்தைப் பார்க்கின்ற காரணத்தால் எவ்வளவு எளியோர் துதித்தாலும் அதில் உவப்பு கொள்கின்றவர் 

ஸ்தோத்ரம் -- உலகில் கருத்திழந்து உலழும் ஜீவர்களுக்குத் தம்மைத் துதிக்கும் எண்ணத்தையும் தந்து அந்தத் துதியாகவும் தாமே இருக்கிறார் 

ஸ்துத: -- என்றென்றும் அவரே துதிகப்படுகின்றவராக இருக்கின்றார் 

ஸ்தோதா -- தம்மைத் துதிப்பவரை உலகில் துதிகப்படுகின்றவராகவும், மெய்ப்புகழ் வாய்ந்தவராகவும் ஆக்குகின்றார் 

ரணப்ரிய: -- உலகில் நன்மைக்கு எதிரான தீமையையும், பக்தர்களுக்குத் தீமை புரிபவரையும் எதிர்க்கும் போரைத் துதியைப் போலவே என்றும் விரும்புகின்றார் 

பூர்ண: -- தாம் என்றும் நிறைந்தவரும், எதையும் வேண்டாதவருமாக இருந்தாலும் பக்தர்கள் உள்ளம் உருகிச் செய்யும் துதியை விரும்புகிறார் 

பூரயிதா -- அவ்வாறு பூர்ணராக இருந்தாலும் பக்தர்களின் துதிகளை விரும்பும் காரணம் அவர்களுடைய பிரார்த்தனைகளை பூர்த்தி ஆக்குவதற்கேயாம் 

புண்ய: -- பாபிகளும் அவரைத் துதிப்பதால் பாபம் நீங்கிப் புண்யம் வாய்ந்தவராய் ஆகின்றனர் 

புண்யகீர்த்தி: -- பாபத்தை நீக்கிப் புண்யத்தைத் தரும் கீர்த்தியுடையவை அவருடைய நாமங்கள் 

அநாமய: -- மிகக் கொடிய வியாதியானதும், ஞானத்தையே போக்கிவிடுவதுமான உலகியல் என்பதையே நீக்குவது நாவால் அவருடைய திருநாமத்தைத் தீண்டலே ஆகும் 

***

Thursday, December 9, 2021

மஹாக்ரமோ மஹாகர்மா

மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக3: | 
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயக்ஞோ மஹாஹவி: || 


மஹாக்ரம: -- உலகியலில் மூழ்கி இருக்கும் ஜீவர்களைப் படிப்படியாக ஆத்ம குணங்களை உண்டாக்கிப் பகவத் பக்தியில் ஈடுபாட்டை ஏற்படுத்தி உயர்ந்த முக்திக்கு அழைத்துச் செல்லும் பெரிய கிரமத்தில் அருள் செய்பவர் 

மஹாகர்ம: -- உலகியலில் மூழ்கிக் கடவுள் என்ற விருப்பமே இல்லாமல் இருக்கும் ஜீவனை மிக உயர்ந்த ஞான நிலையான முக்திக்கு அழைத்துச் செல்லும் மகத்தான செயலைச் செய்பவர் 

மஹாதேஜ: -- தாமே மிக உன்னதமான பூர்ண ஞானத்தின் ஒளியாக இருப்பதால் ஜீவனின் அஞ்ஞான இருளைப் போக்கி அருள்பவர் 

மஹோரக: -- இந்த மகத்தான கர்மத்தை அவர் ஜீவனின் இதயத்தில் ஆதிமுதலே வீற்றிருந்து பரிபாகம் வரச்செய்கிறார் 

மஹாக்ரது: -- கிரது என்னும் யக்ஞத்திற்கெல்லாம் யக்ஞம் என்று கொண்டாடப்படும் ஜபம் ஆகிய யக்ஞத்தால் திருப்தியடைபவர் 

மஹாயஜ்வா -- ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகிய பெரும் வேள்வியைத் தாமே விடாது இயற்றிக்கொண்டிருப்பவர் 

மஹாயக்ஞ: -- சரணாகத உள்ளத்தோடு கைகூப்பும் செய்கையைக் கூடப் பெரும் யக்ஞமாகக் கருதுபவர் 

மஹாஹவி: -- சரணாகதி என்பதில் ஜீவன் தன்னையே பரமாத்மாவிற்கு ஹவிஸாக அர்ப்பணித்து விடுவதால் அந்த மஹா ஹவிஸை ஏற்பவர் அவரே 

***

Wednesday, December 8, 2021

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா

ப்3ரஹ்மண்யோ ப்3ரஹ்மக்ருத்3 ப்3ரஹ்மா ப்3ரஹ்ம ப்3ரஹ்மவிவர்த்த4ந: | 
ப்3ரஹ்மவித்3 ப்3ராஹ்மணோ ப்3ரஹ்மீ ப்3ரஹ்மக்ஞோ ப்3ராஹ்மணப்ரிய: || 


ப்ரஹ்மண்ய: -- ப்ரஹ்மா என்னும் சொல்லின் பொருளாக வருவன வேதம், தவம், ஞானம், ஜீவாத்மா, பிரகிருதி போன்று பலபொருள் உடைய சொல் ப்ரஹ்மா என்பது. இவை அத்தனைக்கும் உள்ளிருந்து நன்மை செய்பவர் ஆகையாலே அவர் ப்ரஹ்மண்யர் எனப்படுகிறார். 

ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா -- நான்முகனுக்குள் அந்தர்யாமியாக இருந்து இவையனைத்தையும் படைத்தான். 

ப்ரஹ்ம: -- உயர்வற உயர்நலம் உடையவர்; மயர்வற மதிநலம் தருபவர் 

ப்ரஹ்மவிவர்த்தந: -- ப்ரஹ்மா என்னும் பதத்தால் குறிக்கப்படும் வேதம், தவம், ஞானம் ஆகியவற்றை மேலும் மேலும் வளர்ப்பவர் 

ப்ரஹ்மவித் -- வேதங்கள் அநந்தம் ஆகையால் அவை அனைத்தையும் அறிந்தவர் அவர் ஒருவரே 

ப்ராஹ்மண: -- வேதப் பொருள் விரிக்க வேண்டித் தத்தாத்ரேயராக அவதாரம் செய்தவர் 

ப்ரஹ்மீ -- அறியப்பட வேண்டியதும், அறிவதற்கான வழியும் அவரே 

ப்ரஹ்மக்ஞ: -- வேதத்தின் அர்த்தம் தாமாகவே இருப்பதால் அவரே உள்ளபடி ப்ரம்மஞானம் ஆனவர் 

ப்ராஹ்மணப்ரிய: -- ப்ரம்மஞானம் அடைந்த ஞானிகளுக்குப் பிரியமானவர்; அத்தகைய ஞானிகளிடத்துத் தாமும் எல்லையற்ற பிரியம் கொண்டவர். 

***

Tuesday, December 7, 2021

காமதேவ: காமபால:

காமதே3வ: காமபால: காமீ காந்த: க்ருதாக3ம: | 
அநிர்தே3ச்யவபுர்விஷ்ணு: வீரோSநந்தோ த4நஞ்ஜய: || 


காமதேவ: -- ஜீவர்களின் அனைத்துப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கும் தேவர் அவரே 

காமபால: -- ஜீவர்களை அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த நல்வழிகளில் காப்பாற்றிச் செலுத்துபவரும் அவரே 

காமீ -- நல்லதை விழைபவருக்கு அவர்கள் கேட்டதினும் மிக அதிகமாகத்ஹ் தருவதில் ஆசை மிக்கவர் 

காந்த: -- பூர்ண பக்தியுடன் தீவிரமாக விரும்பத் தக்கவர் அவரே 

க்ருதாகம: -- சக்திக்கெல்லாம் நாதர் ஆகையாலே அனைத்து ஆகமங்களுக்கும் அவரிடமிருந்தே ஆகும் 

அநிர்தேச்யவபு: -- குணைங்களைக் கடந்தவர் ஆகையாலே இவ்வாறு என்று அறியவொண்ணாதவர் 

விஷ்ணு: -- தமது சக்தியால் பிரபஞ்சம் அனைத்தையும் வியாபித்திருப்பவர் 

வீர: -- எல்லையற்ற சக்தியால் நினைத்துப் பார்க்கவும் ஒண்ணாத வேகத்தில் செய்லகளைச் செய்பவர் 

அநந்த: -- எல்லையற்ற ஆற்றலும் பெருமையும் மிக்கவர் 

தநஞ்ஜய: -- வாழ்க்கையில் அனைத்து ஜீவர்களும் ஈட்ட வேண்டிய ஒரே பெரும் நிதி அவரே 

***