Sunday, October 31, 2021

விக்ஷரோ ரோஹிதோ மார்க:

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ3 ஹேதுர் தா3மோத3ரஸ்ஸஹ: | 
மஹீத4ரோ மஹாபா4கோ3 வேக3வாநமிதாந: ||


விக்ஷர: -- தம் பக்தர்களிடத்தில் எத்துணையும் குறையாத அன்புடையவர் 

ரோஹித: -- தம் பக்தர்களை ஸம்ஸாரத்திலிருந்து காப்பாற்றியதும் மகிழ்ச்சியில் சிவக்கும் திருமுகம் கொண்டவர் 

மார்க: -- அடியார்களால் உயர்வுக்கான மார்க்கமாய் விரும்பப்படும் பாதையானவர் 

ஹேது: -- அத்தகைய பக்தி மார்க்கத்திற்கான அடிப்படை ஹேதுவாகவும் அமைந்திருப்பவர் 

தாமோதர: -- கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய திருவயிறு உடையவர் 

ஸஹ: -- ஆய்ச்சிக் கைத்தாம்பிற்கும், கோபியரின் ஏச்சுக்கும் மகிழ்ச்சியுடன் சகிக்கும் பண்பினர் 

மஹீதர: -- உலகத்தைத் தாங்கும் உத்தமர் 

மஹாபாக: -- ஆயர் குவித்த பேரன்னத்தை விரும்பி உண்டவர்; நாயகிபாவத்தில் பக்தர்களைத் துய்க்கும் நாயகர் 

வேகவாந் -- அதிவேகத்தில் சாகசங்களை இயற்றும் அவதார மஹிமை கொண்டவர் 

அமிதாசந: -- உலகையுண்டும் அமையாது ஆயர் குவித்த அன்னமலையையும் உண்ட ஆச்சரியர் 

*** 

Saturday, October 30, 2021

அதுல: சரபோ பீம:

அதுல: ரபோ4 பீ4ம: ஸமயக்ஞோ ஹவிர்ஹரி: | 
ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: || 


அதுல: -- ஸமம் என்று யாரும் எவையும் இல்லாதவர் 

சரப: -- எல்லா சரீரங்களிலும் அந்தராத்மாவாய் இருப்பவர் (ஸ்ரீஆதிசங்கரர்) 
நெறி தவறுவோரைத் தண்டித்து நல்வழிக்குக் கொணர்பவர் (ஸ்ரீபட்டர்) 

பீம: -- தம்மீதுள்ள பயத்தால் தேவர்கள் அனைவரும் முறைதிறம்பாமல் இருக்கும்படித் திகழ்பவர் 

ஸமஜக்ஞ: -- அனைவரையும் ஸமமாகக் கருதுதலாகிய உயர்ந்த பூஜையை விரும்புபவர் 

ஹவிர்ஹரி: -- யக்ஞத்தில் படைக்கப்படும் ஹவிஸ் ரூபமானவர்; பக்தர்களின் பாபங்களைப் போக்கும் ஹரி ஆனவர். 

ஸர்வலக்ஷணலக்ஷண்ய: -- அறியப்படுகின்ற, அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தின் தன்மைகளும் அவரையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அனைத்து அறிவும் அனுபவமும் சென்று முடியும் நிலை அவரே 

லக்ஷ்மீவாந் -- அகலகில்லேன் என்று திருமகள் உறையும் மார்பர்; நித்யயோகமாக அவருடன் அன்னையாகிய ஸ்ரீ திகழ்கிறாள் 

ஸமிதிஞ்ஜய: -- ஜீவனுக்கும் அவருக்கும் உண்டாகும் வழக்கில் ஸ்ரீ இருவருக்கும் இடையில் திகழ்ந்து தயாரூபமாய் பகவானுக்கே வெற்றியைத் தருகிறாள் 

***

Friday, October 29, 2021

பத்மநாபோSரவிந்தாக்ஷ:

பத்3மநாபோ4Sரவிந்தா3க்ஷ: பத்3மக3ர்ப4: ரீரப்4ருத் | 
மஹர்த்3தி4ர்ரித்3தோ4 வ்ருத்3தா4த்மா மஹாக்ஷோ க3ருட3த்4வஜ: || 


பத்மநாப: -- படைப்பின் கேந்த்ரமான நாபிக்கமலம் அழகியவர் 

அரவிந்தாக்ஷ: -- தாமரைக் கண்ணழகர் 

பத்மகர்ப: -- இதயகமலத்தின் உள்ளே தஹராகாசத்தில் விளங்குபவர் 

சரீரப்ருத் -- உடல்மிசை உயிரென உயிர்களைத் தம் உடலாய்த் தாங்குபவர் 

மஹர்த்தி: -- அனைத்துவித ஐஸ்வர்யங்களையும் உலக க்ஷேமத்திற்காகப் பாதுகாப்பவர் 

ருத்த: -- தம் ஐஸ்வர்யங்களைத் தம் குழந்தைகள் குதூகலிப்பதைக் கண்டு மகிழ்பவர் 

வ்ருத்தாத்மா -- பிரபஞ்சம் அனைத்தும் அடங்கியும் அடங்காது பொலியும் தன் தன்மை மிக்கவர் 

மஹாக்ஷ: -- அழகிய பெரிய திருக்கண்கள் உடையவர்; வேதவடிவாம் கருடனை வாகனமாய்க் கொண்டவர் 

கருடத்வஜ: -- வேதவடிவாம் கருடனைத் தம் கொடியிலும் கொண்டவர் 

***

அசோகஸ்தாரணஸ்தார:

சோகஸ்தாரணஸ்தார: சூர: சௌரி: ஜநேச்வர: |
அநுகூல: தாவர்த்த: பத்3மீ பத்3மநிபே4க்ஷண: || 



அசோக: - சோகம், மோஹம், ஜரை, ம்ருத்யு, க்ஷுத், பிபாஸை என்னும் சோகம், மோகம், மூப்பு, சாவு, பசி, தாகம், என்ற ஆறு ஊர்மிகள் (அலைகள்) ஸம்ஸார சாகரத்தின் வேகங்களாய் ஜீவர்களை நலியும் குற்றங்கள் ஆகின்றன. இந்த ஆறுக்கும் உபலக்ஷணமாகச் சொல்வது சோகம். இந்த ஆறும் இல்லாதவன் மட்டுமன்று, தம்மை அண்டியவர்களுக்கு இவை இல்லாமல் ஆக்குபவர் என்பதால் அசோக: 

தாரண: - ஸம்ஸார சாகரத்தைத் தாண்டுவதற்கு உதவும் பெருநல் உதவியாக இருப்பவர் 

தார: - பவக்கடலினின்றும் சரணடைந்தவர்களை பயமில்லாமல் அக்கரையாகிய மோக்ஷத்திற்குக் கடத்துபவர். 

சூர: - எத்தகைய இடர்ப்பாட்டிலும் தாமே மீட்பவர் ஆகையாலே சூர: 

சௌரி: - பக்தர்களை இடர்ப்பாட்டினின்றும் மீட்பதற்காகத் தாமே அவர்களை நாடிச் செல்பவர். 

ஜநேச்வர: - உயிர்கள் அனைத்தையும் வியாபிக்கும் சீலத்தால் ஜநேச்வரர் 

அனுகூல: - அனைத்துப் பொருட்களிலும் தாமே உள்ளே ஆத்மாவாக இருப்பதால் அனுகூலமாக இருப்பவர். 

சதாவர்த்த: - வீழ்ச்சிக்குப் பல சுழல்கள் உடைய பவக்கடல் போல் அன்றிக்கே தம்மிடம் பக்தியால் அகப்பட்டவர்கள் தாமே கருதினாலும் மீள முடியாத அளவிற்கு வாழ்ச்சிக்கு ஆன சுழல்கள் அளவிறந்து உடையவர். 

பத்மீ - கையில் லீலையாகிய காலப்பதுமத்தை உடையவர் 

பத்ம நிபேக்ஷண: - அன்றலர்ந்த தாமரை மலரைப் போன்ற மலர்ச்சியும், குளிர்ச்சியும் கொண்ட கடாக்ஷம் கொண்டவர். 

***

ஸ்கந்த3: ஸ்கந்த3த4ரோ து4ர்யோ

ஸ்கந்த3: ஸ்கந்த3த4ரோ து4ர்யோ வரதோ3 வாயுவாஹன: | 
வாஸுதே3வோ ப்3ருஹத்3பா4னு: ஆதி3தே3வ: புரந்த3ர: || 


ஸ்கந்த: - நற்பேற்றிற்கு எதிரான அசுர சக்திகளை வலிமை வற்றச் செய்பவர் 

ஸ்கந்ததர: - அவ்வாறு தீய சக்திகளை வலியிழக்கச் செய்யும் ஆற்றல்கள் அத்தனையையும் தாங்குபவர் 

துர்ய: - உலகனைத்தையும் தாங்குபவர் 

வரத: - ஆற்றல் மிகுந்த தேவர்க்கும் அவர்களுக்கு உரிய சக்தியை வரமாக அளிப்பவர் 

வாயுவாஹன: - வாழ்வின் அடிப்படையான உயிர்க்காற்றையும் நடத்துபவர் 

வாஸுதேவ: - உயிர்கள் அனைத்தையும் மூடிக் காத்து, தம்முள் அடக்கி ரக்ஷித்து அவற்றுள் அந்தர்யாமியாக நின்று நடத்தும் பெரும் தாய்மை உடையவர் ஆதலால் வாஸுதேவ: 

ப்ருஹத்பானு: - உலகினும் பலமடங்கு பெரியதான நித்ய விபூதியில் பேரொளியாய்த் திகழும் சூரியனாக இருப்பவர் 

ஆதிதேவ: - ஒளிதிகழும் அனைத்துக்கும் ஒளி தரும் தம் முதன்மைப் பேரொளியாய்த் திகழ்பவர்; இவ்வுலகைப் படைத்து லீலாவிபூதியை நடத்துபவர் 

புரந்தர: - ஒளியை மறைக்கும் மாயையின் கூடுகள் ஆகிய புரங்களை என்றும் அழிக்கும் வண்ணம் இருப்பவர் 

***

அச்யுத: ப்ரதி2த: ப்ராண:

அச்யுத: ப்ரதி2த: ப்ராண: ப்ராணதோ3 வாஸவாநுஜ: | 
அபாம் நிதி4ரதி4ஷ்டா2நம் அப்ரமத்த; ப்ரதிஷ்டி2த: || 



அச்யுத: - எவ்வித விகாரங்களும் இன்றி என்றும் ஒருபடித்தாய் இருக்கும் பெற்றியர் 

ப்ரதித: - எதனிலும் மிக்க புகழ் கொண்டவர் ஆகையாலே ப்ரதித: 

ப்ராண: - ஜீவகோடிகளுக்கு உயிரூட்டும் காரணமாய் இருப்பவர் 

ப்ராணத: - உயிர்கொண்டுலவும் ஜீவர்கள் முக்திக்கு முயல்வதற்காக அவர்களுக்குத் தொடர்ந்து வாழ்வு தருபவர் 

வாஸவாநுஜ: - அழியாமையாகிய அமுதத்தில் பெருவிருப்புள்ள இந்திரர்க்கு அதனை அளிக்க வேண்டி பின் பிறந்தவர் 

அபாம்நிதி: - உயிர்க்கு இன்றியமையாத நீரின் நிறை செல்வமாக இருப்பவர் 

அதிஷ்டாநம் - உலகம் நிலை நிற்றலுக்கான ஆதாரமாய் நின்று அருள்பவர் 

அப்ரமத்த: - உயிர்களுக்கான கர்ம கதியில் சிறிதும் தவறுதலின்றி அவற்றைப் பயிற்றி முன்னேற்றிச் செல்பவர் 

ப்ரதிஷ்டித: - ஏதொன்றையும் சார்ந்திராமல் தம் மகிமையிலேயே என்றும் நிலைத்திருப்பவர் 

***

இஷ்டோSவிசிஷ்ட:

இஷ்டோSவிசிஷ்ட: சிஷ்டேஷ்ட: சிக2ண்டீ3 நஹுஷோ வ்ருஷ: | 
க்ரோத4ஹா க்ரோத4க்ருத் கர்த்தா விச்வபா3ஹுர் மஹீத4ர: || 

*

இஷ்டோSவிசிஷ்ட: - பிரளயகாலத்தில் ஏதொன்றும் பிதிர்கதிர்படாமல் தம் வயிற்றில் வைத்துக் காக்கும் அளவிற்கு அனைத்திலும் தாய் போல் ஒத்த அன்புடையவர் ஆகையாலே இஷ்டோSவிசிஷ்ட:

சிஷ்டேஷ்ட: - மார்கண்டேயர் முதலிய மஹரிஷிகளாலும் மிகவும் விருப்பமுடன் போற்றப்படுபவர் ஆகையாலே சிஷ்டேஷ்ட:

சிகண்டீ - அளவிலாத அனைத்தினும் உயர்ந்த ஐஸ்வர்யமாகிற மகிமையைத் தமது தலையில் மயிலிறகாய் அணிபவர் ஆகையாலே சிகண்டீ

நஹுஷ: - தமது மாயையால் ஜீவர்களைக் கட்டுகிறவர் ஆகையாலே நஹுஷ: (ணஹ் பந்தனே - இலக்கணக் குறிப்பு)

வ்ருஷ: - தர்மத்தின் உருவமாகி மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்பவர் ஆகையாலும், ஸம்ஸாரக் கடலில் அலைந்து வருந்தும் சாதுக்களின் வருத்தத்தை நீக்கி பரமானந்தத்தை ஏற்படுத்தும் மழையாக இருப்பவர் ஆதலாலும் வ்ருஷ:

க்ரோதஹா - சாதுக்களுக்கு நேரும் தீமையை அழித்த பின்பே தம் குரோதம் நீங்குபவர்

க்ரோதக்ருத் - தீமையை எதிர்த்து எழும் நியாயமான குரோதத்தைச் செய்பவர்

கர்த்தா - தீமைக்குத் தக்க தண்டனைகளை வழங்குபவர்

விச்வபாஹு: - தீமைக்கு எதிராக உயர்த்தும் தர்மத்தின் கைகள் உலகமெங்கும் முளைத்தது போன்று எழும் அளவற்ற தோள்கள் உடையவர். (தோள்கள் ஆயிரத்தாய் - ஆழ்வார்)

மஹீதர: - உலகத்தைத் தாங்கும் உன்னத ஆதாரமாய் இருப்பவர்.

***

யுகா3தி3க்ருத்

யுகா3தி3க்ருத் யுகா3வர்தோ நைகமாயோ மஹாந: | 
அத்3ருச்யோ வ்யக்தரூபச்ச ஸஹஸ்ரஜித் அநந்தஜித் || 


ஆலிலைமேல் மாயனின் ஆச்சரியமான ரூபம் தியானிக்கப் படுகிறது.

யுகாதிக்ருத் - பிரளயத்தில் அனைத்தும் முடிந்து அதனால் ஒரு நஷ்டமும் நேராதபடி மீண்டும் யுகங்களைத் தொடங்கி நடத்துகிறவர் ஆகையால் யுகாதிக்ருத்

யுகாவர்த்த: - யுகங்கள் அவற்றின் கால க்ரமங்கள், தன்மைகள் எதுவும் முறையாகத் தொடரும்படி சுழற்றுகிறவர் ஆகையால் யுகாவர்த்த:

நைகமாய: - ஆலிலைமேல் வளரும் குழந்தையாய் அநேகமான மாயைகளையும், அற்புதங்களையும் உடையவர்

மஹாசந: - பெருந்தீனிக்காரர். இவரை விட பெருந்தீனி உண்பவர்கள் இருக்க முடியாது என்னும் படி பிரளயத்தில் உலகனைத்தையும் தம் வயிற்றில் ஒடுக்குபவர்.

அத்ருச்ய: - உலகெலாம் அழிந்த பிறகு பிரளய ஜலத்தில் ஓர் ஆலிலையும், அதன் மேல் ஒரு குழந்தையும் மட்டும் எப்படி இருக்க முடியும் என்று மார்க்கண்டேயர் போன்ற மகரிஷிகளுக்கும் உண்மை புலப்படாதவர்.

வ்யக்தரூப: - 'காயம்பூ நிறமும் திருமார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் அடையாளமும் கொண்டு திருமகள் உறையும் திருமார்பனாக எப்பொழுதும் காட்சி தருகிறார்' என்று மார்கண்டேயரே சொல்லும் அளவிற்கு திவ்ய மங்கள திருமேனி கொண்டவர். யோகிகளுக்குப் புலப்படும் இதயவெளி உருவர்.

ஸஹஸ்ரஜித் - அளவற்ற விதங்களில் வெற்றி திகழ்பவர்

அநந்தஜித் - எல்லையற்ற வெற்றி உருவராய்த் திகழ்பவர்

***

பூ4தப4வ்ய ப4வந்நாத2:

பூ4தப4வ்ய ப4வந்நாத2: பவன: பாவனோSநல: | 
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத3: ப்ரபு4: || 



பூதபவ்யபவந்நாத: - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தும் உள்ள அனைத்துக்கும் நாதர் ஆகையாலே பூதபவ்யபவந்நாத:

பவந: - எங்கும் சென்று தூய்மையை உண்டாக்குபவர் ஆகையாலே பவந:

பாவந: - தம்மால் தூய்மை அடைந்தோர் தாம் பிறரைத் தூய்மைப் படுத்தும் அளவிற்குச் செய்பவர் ஆகையாலே பாவந:

அநல: - தம் பக்தர்களுக்கு எத்தனை அருள் செய்த போதும் போதாமையால் பரபரப்பு கொண்டவர் ஆகையாலே அநல:

காமஹா - தம்மிலும், தம் குணங்களிலும் ஈடுபட்டவர்களை மற்றை காமங்கள் அனைத்தையும் அறவே மாற்றும் இயல்பினர் ஆகையாலே காமஹா

காந்த: - ரசிக்கத் தெரிந்தவர்களுக்குத் தம் வடிவழகைக் காட்டியே உய்யக் கொள்கிறவர் ஆகையாலே காந்த:

காம: - விரும்பப் படும் அனைத்தினும் சிறந்த காமமாக, குணங்கள் நிறைந்தவர் ஆகையாலே காம:

காமப்ரத: - தம்மை அண்டினோர் வேண்டுவன தந்தருளும், தம்மை வேண்டுவோருக்குத் தம்மையே தந்தருளும் இயல்பினர் ஆகையாலெ காமப்ரத:

ப்ரபு: - அவ்வாறு தம்மையே தந்து அவர்களைத் தமக்கே எழுதி வாங்கிக் கொள்பவர் ஆகையாலே ப்ரபு:

***

அம்ருதாம்சூத்3ப4வோ

அம்ருதாம்சூத்3ப4வோ பா4நு: சசபி3ந்து3: ஸுரேச்வர: | 
ஔஷத4ம் ஜக3த: ஸேது: ஸத்யத4ர்மபராக்ரம: || 


அம்ருதாம்சூத்பவ: - இறப்பை நீக்கி அமரத் தன்மையைத் தரும் உன்னத நிலவொளியாக இருப்பவர் ஆகையாலே அம்ருதாம்சூத்பவ: 

பாநு: - எதற்கும் விலகாத உள்ளிருளைப் போக்கும் ஞான ஒளியாக இருப்பவர் ஆகையாலே பாநு: 

சசபிந்து: - அஞ்ஞானத்தால் தீய வழியில் போவோரைக் கடிந்து நல்வழிக்கு உய்க்கும் தண்ணொளியாக இருப்பவர் ஆகையாலே சசபிந்து: 

ஸுரேச்வர: - நல்வழியில் செல்பவர்களே தேவர்கள் என்னும்படி, அவர்களை மிக உயர்ந்த பேறான தம்முடைய உலகை அடையும் படிச் செய்பவர் ஆகையாலே ஸுரேச்வர: 

ஔஷதம் - ஸம்ஸாரம் என்னும் கொடிய பிணிக்கு மருந்தாய் இருப்பவர் ஆகையாலே ஔஷதம் 

ஜகதஸ்ஸேது: - கடக்கலாகா கொடிய ஸம்ஸாரக் கடலில் கடந்து நற்கதிக்கு உய்க்கும் அணையாக இருப்பவர் ஆகையாலே ஜகதஸ்ஸேது: 

ஸத்யதர்மபராக்ரம: - ஜீவர்கள் தம் அஞ்ஞானத்தால் நன்மையினின்றும் விலகி ஓடுபவர்கள் ஆகையாலே அவர்களாலும் கடத்தற்கரிய குணங்களும், தவறாமல் அவர்களைக் கரையேற்றும் அவதார பராக்ரமங்களும் உடையவர் ஆகையாலே ஸத்யதர்மபராக்ரம: 

***

ஓஜஸ்தேஜோ த்3யுதித4ர:

ஓஜஸ்தேஜோ த்3யுதித4ர: ப்ரகாசாத்மா ப்ரதாபந: | 
ருத்3த4: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரச்சந்த்3ராம்சுர் பா4ஸ்கரத்3யுதி: || 



ஸ்ரீமஹாவிஷ்ணுவின் விச்வரூபத்தைப் பற்றிய திருநாமங்கள் தொடர்கின்றன. பொருட்களை விளங்கச் செய்வது ஒளி என்று சாத்திரங்கள் கூறும். புறப்பொருட்களையும், மனத்தில் இருக்கும் பொருட்களையும் அவ்வவ்வொளிகள் விளக்கும். அனைத்து ஒளிகளாகவும் திகழ்வதோ நாராயண: பரோ ஜ்யோதி: என்னும் ஸ்ரீமந்நாராயணனே என்று காட்ட வேண்டி பீஷ்மாசாரியார் ஒளியின் திகழ்ச்சிகளைக் கூறுகிறார். 

ஓஜஸ்தேஜோத்யுதிதர: - ஒளியின் திகழ்ச்சிக்கு அடிப்படை ஒன்று தன் சொந்த இயல்பில் பொருந்தி நிற்பது. அவ்வாறு சுயநிலை நிற்கும் ஆற்றல் ஓஜஸ்; சுயநிலையினின்றும் பிறழச் செய்யும் வேகங்களைத் தடுத்து விலக்கல் தேஜ: தன்னிலையில் நின்று தன்னியல்பில் ஒளிர்தல் த்யுதி. த்யுதியை தரித்து நிற்பவர் த்யுதிதர: இத்தகைய முத்திறன்கள் விளங்கும் இடமெல்லாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சாந்நித்யம் ஆகும். எனவே அவருக்கு ஓஜஸ்தேஜோத்யுதிதர: என்றே திருநாமம். 

ப்ரகாசாத்மா - அனைவருக்கும் பொதுவாக விளக்கம் தரும் பேரொளியாவது ஆத்ம ஒளி. எனவே ப்ரகாசாத்மா. 

ப்ரதாபந: - பிரகாசத்தை விரும்பாமல் வெறுக்கும் அவற்றைத் தபித்து வற்றச் செய்யும் காரணத்தால் ப்ரதாபந: 

ருத்த: - அனைத்து கல்யாண குணங்களும் கடல் போன்று நிரம்பி நிறைவாக இருப்பவர் ஆதலால் ருத்த: 

ஸ்பஷ்டாக்ஷர: - எழுத்தும் சொல்லும் பத சக்தியினால் விளக்கம் தரும் ஒளிகளாம். சொற்களில் மிக்குயர்ந்த சொல்லான வேதங்கள் பரம்பொருளை விளக்கும் ஆகையாலே ஸ்பஷ்டாக்ஷர: 

மந்த்ர: - தம்மை விளக்கும் மந்த்ரங்களை தியானிப்போருக்கு காப்பாக இருப்பவர் ஆகையாலே மந்த்ர: 

சந்த்ராம்சு: - தியானத்தில் ஜீவனுக்குக் குளிர்த்தியைத் தரும் நிலவொளியாய் இருப்பவர் ஆகையாலே சந்த்ராம்சு: 

பாஸ்கரத்யுதி: - பக்தியால் துய்ப்போருக்கு நிலவொளியாய் மகிழ்விக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஞானத்தால் உணருங்கால் பகலொளியாய், ஞாயிறாக நின்று அறிவுப் பகல் செய்பவர் ஆகையாலே பாஸ்கரத்யுதி: 

***

ஸுபு4ஜோ து3ர்த4ரோ வாக்3மீ

ஸுபு4ஜோ து3ர்த4ரோ வாக்3மீ மஹேந்த்3ரோ வஸுதோ3 வஸு: | 
நைகரூபோ ப்3ருஹத்3ரூப; சிபிவிஷ்ட: ப்ரகாந: || 



ஸுபுஜ: - சரணாகதி அடைந்தவர்களைக் கரையேற்றுவதிலும், காத்து ரக்ஷிப்பதிலும் மும்முரமாகவும், தவறாமலும் இருக்கும் கைகளை உடையவர் ஆதலாலே ஸுபுஜ: 

துர்தர: - அவ்வாறு கரையேற்றும் போதும், காக்கும் போதும் எதனாலும், சரணாகதி அடைந்தவர்களாலுமே மீற முடியாத திருக்கரங்கள் ஆகையாலே துர்தர: 

வாக்மீ - அவ்வாறு தம்மைச் சரணடைந்தவர்களைத் தவறாமல் காப்பாற்றுவேன் என்று அவதாரங்கள் தோறும் ஜீவர்களுக்கு நிச்சயமான வாக்கு தந்திருப்பவர் ஆகையாலே வாக்மீ 

மஹேந்த்ர: - சர்வ உலகங்களும் சேர்ந்தாலும் ஒரு சிறு பிடி என்னும் அளவிற்கு அளவிலா ஐஸ்வரியம் உடையவர் ஆகையாலே மஹேந்த்ர: 

வஸுத: - அல்பம், அஸ்திரமான செல்வங்களைக் கேட்பவர்களுக்கு அவற்றைத் தருபவர் ஆயினும், அருஞ்செல்வம் ஆகிய தம் தாளிணைகளையே வேண்டுபவர்க்கு அந்த மிக்க பெரும் செல்வத்தை மிக உவந்து தருபவர் ஆகையாலே வஸுத: 

வஸு: - உவந்து தரும் அரும் பெரும் செல்வமும் தாமேவாக இருப்பதால் அவரே வஸு: 

இனி விச்வரூபம் சொல்லப் படுகிறது - 

நைகரூப: - அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர்க்கு அருள்பாலிக்க வேண்டி பல ரூபங்களை எடுப்பவர் ஆகையாலே நைகரூப: 

ப்ருஹத்ரூப: - தாம் எவ்வுருவம் எடுப்பினும் அதுவே அனைத்துமாக ஆகும் வண்ணம் விரிந்த ரூபம் ஆகையாலே ப்ருஹத்ரூப: 

சிபிவிஷ்ட: - யக்ஞ மயமாகவே தாம் இருப்பதாலும், ஒளியின் கிரணங்களாகிய தம்மிடமிருந்து கிரணங்களாக வெளிப்போந்த ஜீவர்கள், பொருட்கள் அனைத்திலும் உள் புகுந்து நிலவும் மூர்த்தி ஆகையாலே சிபிவிஷ்ட: 

ப்ரகாசந: - இவ்வாறு ஒளியுருவாய் உலவும் மூர்த்தி ஆயினும் அவரே காட்டினாலன்றி காண இயலா பேரொளி உருவர் ஆகையாலே, பக்தர்கள் விரும்பிக் கேட்கில் தம் உண்மை உருவைக் காட்டுபவர் ஆகையாலே ப்ரகாசந: 

***

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர்

வ்ருஷாஹீ வ்ருஷபோ4 விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோத3ர: |
வர்த4னோ வர்த4மானச்ச விவிக்த: ச்ருதிஸாக3ர: ||




வ்ருஷாஹீ - அவரை அடையும் தினமே அனைத்து மங்களங்களுக்கும் வித்தாக விளங்க தர்மமே பகலாக ஒளிர்பவர் ஆகையாலே வ்ருஷாஹீ

வ்ருஷப: - ஸம்ஸாரமென்னும் தீயினால் வெந்த ஜீவர்களுக்கு புத்துயிரூட்டும் அமுதமாய் அருள் பொழிபவர் ஆகையாலே வ்ருஷப:

விஷ்ணு: - பல விதமாக அருள் செய்தும் தாம் பக்தர்களை என்றும் பிரியாமல் கூடவே இருப்பவர் ஆகையால் விஷ்ணு:

வ்ருஷபர்வா - தர்மத்தையே தம்மை அடையும் படிக்கட்டாக உடையவர் ஆகையாலே வ்ருஷபர்வா

வ்ருஷோதர: - அனைத்து உலகங்களையும் தர்மம் என்னும் தம் வயிற்றினுள் வைத்துக் காப்பவர் ஆகையாலே வ்ருஷோதர:

வர்தந: - தம்மைச் சரணடைந்தோரைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் ஆகையாலே வர்தந:

வர்த்தமாந: - உயிர்களைக் கருணையினால் வளர்ப்பதில் தாம் பெரும் மகிழ்வு கொண்டு வளர்பவர் ஆகையாலே வர்த்தமாந:

விவிக்த: - அனைத்திலும் விலக்ஷணமான சிறந்த சரித்திரங்களை உடையவர் ஆகையாலே விவிக்த:

ச்ருதிஸாகர: - தம்முடைய குணங்களையும் அற்புத சரித்திரங்களையும் கூறும் வேதங்கள் கணக்கற்றவை கொண்டவர் ஆகையாலே ச்ருதிஸாகர:

***

அஸங்க்யேயோSப்ரமேயாத்மா

அஸங்க்2யேயோSப்ரமேயாத்மா விசிஷ்ட: சிஷ்டக்ருச்சு2சி: |
ஸித்3தா4ர்த்த2: ஸித்3த4ஸங்கல்ப: ஸித்3தி4த3: ஸித்3தி4ஸாத4ந: ||




அஸங்க்யேய: - எண்ணிக்கையால் அளவிடப்படும் தன்மை இல்லாதவர் என்பதால் அஸங்க்யேய:

அப்ரமேயாத்மா - இன்னதென்று பிரித்தறியும் அறிவால் அறிந்து புரிந்து கொள்ள முடியாத ஆத்ம ஸ்வரூபர் ஆகியாலே அப்ரமேயாத்மா

விசிஷ்ட: - அறியப்படு பொருள் அனைத்திலும் தனிப்பட்டுத் தனிச்சிறப்போடு இருப்பவர் ஆகையாலே விசிஷ்ட:

சிஷ்டக்ருத் - தம்மைப் புகலாக அடைந்தவர்களைத் தம்மை அடையத்தக்க ஆன்மிக குணங்கள் நிறைந்தவராக ஆக்கும் தன்மையார் ஆகையாலே சிஷ்டக்ருத்

சுசி:- பிறிதொன்றால் பிரகாசப்படுத்தத் தேவையின்றி அனைத்திற்கும் பிரகாசம் நல்கும்படி சுயம் ஒளியாக இருப்பவர் ஆகையாலே சுசி:

ஸித்தார்த்த: - அடைய வேண்டியதெல்லாம் முன்னரே தம்மிடம் பூரணமாக அமையப் பெற்றவர் ஆகையாலே ஸித்தார்த்த:

ஸித்தஸங்கல்ப: - தமது சங்கலபங்களுக்கும் அடைய வேண்டியதற்கும் கால வித்யாசம் அற்றவர் ஆகையாலே ஸித்தஸங்கல்ப:

ஸித்தித: - அனைத்து விதமான மிகை ஆற்றல்களையும் தருபவர் ஆகையாலே ஸித்தித:

ஸித்திஸாதந: - அவரை அடைய வேண்டும் என்ற இலட்சியமும், அந்த இலட்சியத்தை அடைவிக்கும் வழியான சாதநமும் வேறு வேறாக இல்லாமல் அடையப்பட வேண்டியவரான அவரே, அதாவது ஸித்தியே, அடைவிக்கும் ஸாதநமாக இருப்பவர் ஆகையாலே ஸித்திஸாதந:

***

ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா

ஸுப்ரஸாத3: ப்ரஸந்நாத்மா விச்வத்4ருக் விச்வபு4க் விபு4: |
ஸத்கர்தா ஸத்க்ருத: ஸாது4ர்ஜஹ்நுர் நாராயணோ நர: ||


*

ஸுப்ரஸாத: - தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அநந்தமான பலன்களைத் தந்து மிக்க அருளைச் செய்கிறவர் ஆகையாலே ஸுப்ரஸாத:

ப்ரஸந்நாத்மா - வேண்டுதல் வேண்டாமை இலாததால் கலக்கம் அற்ற தன்மை கொண்டவர் ஆகையாலெ ப்ரஸந்நாத்மா

விச்வத்ருக் - (விச்வச்ருக்) - ஜீவர்கள் உய்வதற்காகவே சிருஷ்டியை உண்டாக்குபவர்; உலகத்தை அநாயாசமாகத் தாங்குபவர்;

விச்வபுக்விபு: - படைத்த உலகனைத்தையும் பிரளய காலத்தில் தம் திருவயிற்றில் வைத்து போஷிப்பவர். உலகங்களையெல்லாம் வியாபிப்பதன் மூலம் அவற்றைக் காப்பாற்றுபவர்.

ஸத்கர்த்தா - ஸாதுக்களை என்றும் பூஜிப்பவர்

ஸத்க்ருத: - சாதுக்கள் தம்மைப் பூஜிக்கும் இடத்து மிகச் சிறிய பொருளாயினும் பெரும் கௌரதையோடு அபிமானிப்பவர்.

ஸாது; - பக்தர்களின் ஏவல்களையெல்லாம் மிக்க ஆனந்தத்துடன் செய்பவர்.

ஜஹ்நு: - பக்தர்கள் அல்லாதார்க்குத் தம்மை முற்றிலும் மறைத்து விடுபவர்.


நாராயண: -

ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் -
1) நரன் என்னப்படும் ஆத்மாவினிடம் உண்டான நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய காரிய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்

2) நரர்கள் என்னும் ஜீவர்களுக்குப் பிரளயகாலத்தில் ஆதாரமாய் இருப்பவர்

3) நாரம் என்னப்படும் பிரளயஜலத்தில் சயனிப்பவர்

4) 'விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற சந்யாஸிகள் சம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய 'நாராயணாய நம;' என்னும் இந்த சத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் சபதமிட்டுச் சொல்கிறேன்' என்று நரஸிம்ம புராணம் கூறுவதால் முக்கியத்துவம் நன்கு விளங்குவது நாராயண நாமம்.

ஸ்ரீபராசர பட்டர் -
அழியாத நித்ய வஸ்துக்களாகிய ஆத்மாக்களின் கூட்டத்திற்கு சேருமிடமாக, அந்தர்யாமியாக இருப்பவர் ஆகையாலே நாராயண;
*


நர: - சேதனம் அசேதனம் ஆகிய நித்ய வச்துக்களின் திரளை நடத்துபவர்.