சோம்பேறிகளுக்கும் கருணை கிடைக்கும் என்பதை அம்மா பார்வதியின் வாயால் நிச்சயம் ஆன பின்னர்தான் எனக்கே கொஞ்சம் நிம்மதி வருகிறது.
பிரஸ்தான திரயம் என்னும் உபநிஷதங்கள், கீதை, பிருஹ்ம சூத்திரம் என்னும் மூன்று பிரமாண நூல்களின் கருத்துகளும் இந்த ஆயிர நாமாவளியில் கிடைக்கும் என்பதே சுருக்கு வழி.
என்னைப் போல் சோம்பேறிகளுக்கு அதுவும் பத்தாது. ஆயிர நாமாவளியையும் சொல்வதற்குப் பதில் சுருக்கமாக ஏதாவது வழி உண்டா? இப்படி நான் கேட்பேன் என்று தெரியும் போலும்! அன்னை பார்வதியே ஈசுவரனிடம் எனக்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறாள்.
'எந்த எளிமையான உபாயத்தால் விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமத்தையும் நித்தியம் பண்டிதன் ஒருவன் படித்தவனாக ஆகிறான். பிரபுவே! அதைக் கேட்க எனக்கு இச்சை'.
ஆனால் இங்கு ஒரு சின்ன சூக்ஷுமம் வைக்கின்றாள் அன்னை. என்ன? அந்த எளிய உபாயம் யாருக்கு? எதுவும் தெரியாத என்னைப் போன்றாருக்கு இல்லை. யார் 'பண்டிதன்' என்று சொல்லமுடியுமோ அவனுக்கு. யார் பண்டிதன் என்று கீதை டெஃபெனிஷனே தருகிறதே! பண்டிதா: சமதர்சின:
அன்னை கேட்கிறாள்:
கேந உபாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்|
பட்யதே பண்டிதைர் நித்யம்
ச்ரோதும் இச்சாமி அஹம் ப்ரபோ:||
இன்பம் துன்பம், நன்மை தீமை, லாபம், நஷ்டம், சுகம் துக்கம் என்று எல்லா
நிலைகளிலும் எவன் சமநிலையில் நழுவாமல் இருக்கிறானோ அவனே பண்டிதன். அப்படிப்பட்ட பண்டிதர்கள் ஆயிரம் நாமங்களையும் உள்ளடக்கிய இலகுவான வழியாக எந்த உபாயத்தைக் கைக்கொள்கிறார்களோ அதைப் பற்றிக் கேட்க எனக்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது.
ஈச்வரன் அதற்குச் சொன்ன பதில்:
ஸ்ரீராம ராம ராம இதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே ||
ஸ்ரீராமனிடத்தில் முற்றிலும் இயலித்த உள்ளத்தனாய் ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா என்று சொல்வதுவே என் மனத்திற்கு முற்றிலும் இன்பமாக இருக்கிறது. ஆயிர நாமங்களுக்கும் ஸ்ரீராம என்ற திருநாமம் ஒன்று துல்யமானது என்றே கருதுகிறேன்.
இன்பம் துன்பம், நன்மை தீமை, லாபம், நஷ்டம், சுகம் துக்கம் என்று எல்லா
நிலைகளிலும் எவன் சமநிலையில் நழுவாமல் இருக்கிறானோ அவனே பண்டிதன்.
அப்படிப்பட்ட பண்டிதர்கள் ஆயிரம் நாமங்களையும் கூறினால் என்ன ஆழ்ந்த
தியானத்துடனும் ஞானத்துடனும் கூறுவார்களோ அந்த தியானம், ஞானம் என்பது
அவர்களுக்கு ஸ்ரீராம என்ற ஒரு நாமத்தைச் சொல்வதனாலே சித்தி அடைகிறது என்று
பொருள். ராம நாமத்தின் மகிமையைச் சொல்கிறாள் அன்னை. ஆனால் நானோ என்
சோம்பேறித்தனத்திற்கு அவள் வழி சொல்லிவிட்டாள் என்று மகிழ்ந்து போகிறேன்.
பரவாயில்லை இந்த மட்டும் அந்த அளவிலாவது ஊக்கம் வருகிறதே என்றுதான்
சிரித்துக்கொள்வாள்.
***
தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம், அதிகதமமான தர்மம் உங்கள் கருத்தின்படி என்ன? என்று கேட்டான் தருமன் பீஷ்மனை.
பீஷ்மனும் சூக்ஷுமமாகச் செய்தியை உரைக்கின்றான்.
"அப்பா! உலகில் ஆகமங்கள் பல இருக்கின்றன. ஆகமம் என்றால் கடவுள் இன்னார் என்று சொல்லி அவரை அடைய வழிகாட்டும் மார்க்கம். ஆகமங்கள் எல்லாம் எதை அடிப்படையாய்க் கொண்டிருக்கின்றன என்று நீ அறிவாயா? நீ அத்தனை ஆகமங்களையும் ஒன்றுவிடாமல் நன்கு படித்துப் பரிட்சை கொடுத்துத் தேறி மஹாவித்வானாக இருக்க வேண்டும் ஆகம சித்தாந்தங்களில் என்பது அவற்றின் நோக்கமன்று தருமா! ஆகமங்களுக்கு நோக்கம் நீ அதை வாழ்க்கையில் அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்பதுதான். நீ அதை ஆசரிப்பதில்தான் அந்த ஆகமங்கள் இருக்கின்றன. வாய் வார்த்தைகளில், பக்கம் பக்கமாக எழுதுவதில், பெரும் புத்தகங்கள் எழுதிப் படித்துக் குவிப்பதில் இல்லையப்பா உண்மையில் ஆகமங்கள்.
"நீ அதன்படி ஒழுகுகின்றாய் என்ற அந்த ஒழுக்கத்தில்தான் எந்த தர்மமும் நன்கு வெளிப்பட்டு நிலைபெறுகிறது.
"ஒன்று தர்மம் என்று எப்படி ஆகும்? எது உன்னை உடனே தன்னைக் கைக்கொண்டு ஒழுகும்படிச் செய்யுமோ அதுதான் தர்மத்தின் லக்ஷணம். அப்படிச் செய்யாத தர்மம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்ற அளவில்தான் நிற்கும்.
"ஒருவரை ஒரு வாக்கியத்தின் மூலம் ஒரு கட்டளையைச் சொல்லி அதன்படி நடக்க வைக்க மூன்று விதங்களில் முடியும் என்கிறது காவிய சாத்திரங்கள்.
"ஒன்று ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு இடித்துச் சொல்லி அறிவுறுத்திச் செய்ய வைப்பதுபோல் செய்யலாம். அப்படிச் செய்தால் அந்த மாதிரியான நூலுக்கு மித்ர ஸம்ஹிதை, 'நட்பால் ஏவும் நூல்' என்று பெயர்.
"சில நூல்கள் பல இனிய கதைகள், கவிதைகள் எல்லாம் சொல்லி சிந்தையைக் கொள்ளை கொண்டு அழகுடன் சேர்த்து இன்ன விதத்தில் இருக்க வேண்டும் என்று கனிவுடன் கூறிச் செய்ய வைக்கின்றன. அந்த நூல்களுக்கு 'காந்தா ஸம்ஹிதை' என்று பெயர்.
"சில நூல்கள் எந்த வித ஆடம்பரமுமின்றி இன்னது செய்ய வேண்டும், இன்னது தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடச் சுருக்கமாக நேரே தைக்கும் வண்ணம் உரைக்கின்றன. அதைப் படிக்கின்ற எவரும் முதல் காரியம் அதைச் செய்துவிட்டுத்தான் மறுவேலை என்று செயலில் ஈடுபடுகின்றனர். அதாவது ஒரு பிரபு கட்டளை பிறப்பித்தால் அவரிடம் வேலை செய்வோர் அந்தக் கட்டளைகளைச் செயலாக்குவது தம் தலையாய கடன் என்ற பொறுப்புணர்ச்சியில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்ட நூல்களை 'பிரபு ஸம்ஹிதை' என்று சொல்வார்கள்.
அத்தகைய பிரபு ஸம்ஹிதை போன்று நம்மை உடனே ஏற்று அனுஷ்டானம் செய்ய எது தூண்டுமோ அவைதான் தர்மங்கள்.
அப்படிப்பார்த்தால் எவைதான் தர்மங்கள்? யார்தான் எந்தத் தர்மங்களை ஏற்று எங்கு செய்கின்றனர்? என்று நினக்கிறாயா?
இந்த லக்ஷணங்கள் எந்த தர்மங்களில் பொருந்தி இருக்கிறதோ அதுதான் தர்மங்களில் எல்லாம் சிறந்த தர்மம்.
பகவந் நாமா என்ற தர்மத்தை யோசித்துப் பார். இந்த நாமங்கள் தாம் சாக்ஷாத் நேரடியான தர்மங்கள். இதைச் சொல் என்பதற்கும், அப்படியே இதை ஏற்று இதன்படி ஒழுகுவதாக இதைச் சொல்வதற்கும் இடையில் வித்யாசமே இல்லை.
தர்மம் ஒன்று தனியாக இருக்கிறது. அதை ஏற்று அதன்படி நடத்தல் என்ற ஆசாரம் என்பது தனியாக இருக்கிறது என்பதை பகவந் நாமங்கள் விஷயத்தில் சொல்ல முடியாது. நாம ஜபம் விஷயத்தில் எது தர்மமோ அதுவேதான் ஆசாரமும்.
இதைச் சொல் என்பவனும் அதைச் சொல்கிறான். அதைச் சொல் என்று காதால் கேட்பவனும் அதையே அந்தக் கேட்கும் கணத்திலேயே, மனத்தால் வாங்கும் கணத்திலேயே சொல்பவனாய் ஆகிவிடுகிறான். தர்ம உபதேசமும், அந்த தர்மத்தை ஆசரிக்கிற ஆசாரமும் ஒரே கணத்தில் நடைபெறுவதை நீ பகவந் நாம ஜபம் ஆகிய இந்தச் சிறந்த தர்மம் ஒன்றில்தான் பார்க்க முடியும்.
"அப்படிப்பட்ட பகவந் நாம ஜாபம் ஆகிய தர்மத்தைவிட வேறு எந்த தர்மம் முழுக்க முழுக்க பிரபு ஸம்ஹிதை என்பதற்கு ஒவ்வியதாய் வருகிறது? யோசித்துப் பார். ஆகவே இந்த அழிவில்லாத தர்மம் ஆகிய பகவந் நாம ஜபம் என்னும் தர்மத்திற்கு யார் பிரபு? பிரபு ஸம்ஹிதை என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் அவ்வாறு செய்யப் பணிக்கும் ஆணைசக்தி உடைய அந்தப் பிரபு யார் என்கிறாயா? அழியாத, பொய்க்காத, மாறாத இந்தத் தர்மத்திற்கு பிரபு மாறாதவனாகிய அச்சுதன்.
ஸர்வ ஆகமாநாம் ஆசார: ப்ரதமம் பரிகல்பித:|
ஆசார ப்ரபவோ தர்ம: தர்மஸ்ய ப்ரபு: அச்யுத:||
அனைத்து ஆகமங்களிலும் அவற்றின்படி நடப்பதே முக்கியமாக முதலில் விளக்கப்படுவது ஆகும். அவ்வாறு நடக்கும் ஒழுக்கமே தர்மத்தை நன்கு வெளிப்படுத்தும். (இந்த பகவந் நாம ஜபம் என்ற) தர்மத்திற்கு பிரபு அச்சுதன்.
எனவே நீ தர்மம் என்று கவலைப் பட்டாலும் இதைவிடச் சிறந்த தர்மம் இல்லை. தனம் என்று கவலைப் பட்டாலும் இதைவிட அருந்தனம் எதுவும் இல்லை. இன்பம் என்று கவலைகொண்டவனாய் இருந்தாலும் இதைவிடப் பேரின்பம் எது உண்டு? மோக்ஷம் என்று கவன்றால் நாமஜபம் சொன்னால் அன்றே அப்பொழுதே வீடு வீடாமே என்பது அன்றோ பக்த சமுதாயத்தின் அனுபவமாக இருப்பது.
எனவே ஒரு கல்லில் நான்கு மாங்காய் என்பதுபோல் நீ நான்கு புருஷார்த்தங்களையும் ஒன்றில் பெற விரும்பினால், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்காகவும் நிற்கும் அந்த மிகச்சிறந்த ஆத்ம தர்மம் என்பது பகவந் நாம ஜபம்"
என்கிறான் பாட்டன். கேவலம் ஜடப் பொருள்கள் இரும்பாலாகிய அம்புகள். அவற்றுக்கே நாம ஜபத்தின்பால் ஆசை வந்து அவன் உடலை ஊன்றிச் சுவைக்கின்றன என்னும் போது நாம் அறிவுள்ள உயிர்கள் ஆயிற்றே!
***
வழிவழியாக வரும் ஆசாரிய புருஷர்கள் அனைவருமே இந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்பதை நாமாவளி ரூபத்தில் இருக்கும் வேதாந்தச் செப்பு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வேதாந்த மறைபொருளைத் தன்னிடத்தே இந்தக் கடவுள் நாமங்கள் செறிவாகக் கொண்டுள்ளன என்ற உறுதியில்தான் அவர்தம் உரைகள் எழுந்துள்ளன. பெயர்களின் பட்டியலில் அப்படிப் பெரும் வேதாந்தக் கருத்துகளைப் பொதிந்து வைத்த வியாசர்தாம் என்ன தயை மிக்கவர்!
ஸ்ரீபராசர பட்டர் கூறுகிறார் --
"இந்த ஸம்சாரமாகிய உலகம் பகவானின் இயல்பு முதலிய ஆன்மிக விஷயங்களில் ஏற்கனவே அறிவில்லாத ஒன்று. அதுவும் கலி காலத்தில் கேட்கவே வேண்டாம். அறியாமை இன்னும் அதிகம். அது மட்டுமில்லை. தமக்குத் தெரியாது என்ற குறைபாடே தங்கள் நெஞ்சில் சிறிதும் தோன்றாமல், தங்களை எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்களிடத்தில் வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லத் துணிவது சாகசமே! இந்த விஷயத்தில் ஸஹஸ்ர நாமத்தை வெளியிட்ட வியாசரும், துதிக்கப்படும் ஸ்ரீமந் நாராயணனும் இப்படித் துணியும் என் அறியாமையைப் பொறுத்துக் கொள்வார்களாக!"
என்ன சார்! ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று சொல்லும் நாமாவளியில் அப்படி என்ன வேதாந்தம் என்று அலட்சியமோ, பொறாமையோ எதுவுமின்றி தயவு செய்து உங்கள் உள்ளத்தை உட்செலுத்திக் கேளுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார் அன்றைக்கே!
உரைக்காரர்கள் நாமங்களின் எண்ணிக்கையையும், வகைகளையும் பற்றிப் பலவாறாக யோசித்திருக்கின்றனர். பொதுவாகச் சொன்னால் ஆயிரம் நாமங்கள் என்பது இயல்பாக நூறு நூறாக வகைபடுத்தும் முறையைத் தந்திருக்கிறது.
ஸ்ரீ ஆதிசங்கரர் வகைபடுத்தும் பத்து நூறுகள் ஒருவகை. ஸ்ரீபராசர பட்டர் வகைபடுத்தும் பத்து நூறுகள் ஒருவகை. எல்லாம் அதே நாமாங்கள்தாம். ஆனால் அங்கங்கே ஒவ்வொரு நூறும் எந்த நாமத்தோடு முடிவடைகிறது என்பதில் கமாவை முன்னரும் பின்னரும் தள்ளி வைக்கின்றார்கள்.
மொத்தம் நாமங்கள் 1034. ஆனால் ஆயிரம் என்று நூலுக்குள்ளேயே வரையறை செய்துள்ளதனால் தனித்தனி நாமங்களாகக் கணக்கிடும் நாமங்களின் எண்ணிக்கை, பலசொற்கள் சேர்ந்து கணக்கிடப்படும் நாமங்கள் என்று வித்யாசங்கள் வருகின்றன. ஒருவர் ஒரு சொற்கோவையையே ஒரு நாமமாகக் கொண்டால் மற்றவர் அதையே இரண்டு அல்லது மூன்று நாமங்களாகக் கொள்கின்றனர். ஆக அனைவரும் அறுதியிடும் எண்ணிக்கை ஆயிரம்.
ஸ்ரீ ஆதிசங்கரரின் வகைபாடு --
100) விசவம் தொடங்கி அச்யுத: வரை
200) வ்ருஷாகபி: தொடங்கி ஸிம்ம: வரை
300) ஸந்தாதா தொடங்கி யுகாதிக்ருத் வரை
400) யுகாவர்த்த: தொடங்கி அநய: வரை
500) வீர: தொடங்கி போக்தா வரை
600) கபீந்த்ர: தொடங்கி சிவ: வரை
700) ஸ்ரீவத்ஸவக்ஷா: தொடங்கி ஸத்க்ருதி: வரை
800) ஸத்தா தொடங்கி ஸுவர்ணபிந்து: வரை
900) அக்ஷோப்ய: தொடங்கி அப்யய: வரை
1000) ஸ்வஸ்தித: தொடங்கி ஸர்வப்ரஹரணாயுத: வரை
ஸ்ரீபராசர பட்டரின் வகைபாடு ---
100) விச்வம் -----> ஸர்வாதி:
200) அச்யுத: -------> அம்ருத்யு:
300) ஸர்வத்ருக் ---> ப்ரபு:
400) யுகாதிக்ருத் --> நய:
500) அநய: ------------> புராதந:
600) சரீரபூதப்ருத் --> கோப்தா
700) வ்ருஷபாக்ஷ: ----> வாஸுதேவ:
800) வஸு: ----------------> ஸுலோசந:
900) அர்க்க: ----------------> கபிரவ்யய:
1000) ஸ்வஸ்தித: ------> ஸர்வப்ரஹரணாயுத:
இந்தக் கணக்கையெல்லாம் நிர்ணயித்துத் தருபவை நிர்வசன நூல்கள்.
இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் பகவந் நாமாவைச் சொல்லணுமா என்றால் அதெல்லாம் இல்லை. பக்திதான் முக்கியம். இவை என்னைப் போல ஆட்களுக்குப் போலும்! இதைத்தவிர ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பதிப்பில் ஸ்ரீஅண்ணா அவர்கள் நாமங்களின் வகைபாடுகளைப் பற்றி ஆய்வுக் குறிப்புகளே பல தந்துள்ளார். அதாவது ஒரே நாமம் எவ்வளவு தடவை மீண்டும் வருகிறது. ஆனாலும் அந்த அந்த இடத்தில் எப்படி அவற்றின் பொருள் வேறுபடுகின்றன, அ, ஆ, இ, ஈ என்று தொடங்கி வடமொழி அரிச்சுவடி வரிசையில் ஒவ்வொரு எழுத்திலும் ஆரம்பிக்கும் நாமங்கள் எவ்வளவு, ஸ்ரீஆதிசங்கரர் ஒரு நாமமாகக் கொண்டு ஸ்ரீபராசர பட்டர் ஒன்றுக்கு மேற்பட்ட நாமங்களாகக் கொண்டவை எவை எவை, அதே போல் இவர் ஒன்றாகவும் அவர் பலவாகவும் கொண்டவை என்று ஒரே கணக்கு மயம். அதாவது ஈடுபாடு அதிகம் ஆனால் எப்படி எப்படியெல்லாம் ஒன்றை அனுபவிக்கச் சொல்கிறது பாருங்கள்!
ஸ்ரீபராசர பட்டர் காட்டும் வகைபாட்டில் ஓர் அருமையான நயத்தைக் காட்டுகிறார், பாஞ்சராத்திர சித்தாந்த ரீதியாக. அதாவது ஸ்ரீபாஞ்சராத்திர சித்தாந்தம் என்பது பரமாத்மாவின் ஐந்து இறைநிலைகளைப் பற்றிப் பேசுவது. பரத்வ நிலை, வ்யூஹ நிலை, விபவ நிலை, அந்தர்யாமி நிலை, அர்ச்சை நிலை என்பன அந்த ஐந்து நிலைகள். மொத்த நாமாக்களையே இந்த ஐந்து நிலைகளை வைத்து வகைபடுத்திக் காட்டுகின்றார் ஸ்ரீபட்டர்.
ஸ்ரீஆதிசங்கரரின் உரை அத்வைத சித்தாந்தமான பிருஹ்மம் என்பது சத்யம், ஜகத் என்பது மிதயை, இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே, வேறு அன்று என்ற கருத்தில் நிற்பது என்றாலும் ஸ்ரீஆதிசங்கரரின் கூற்றுப்படி, 'அந்த பிரம்மம் மாயாவிசிஷ்டமாகக் கொண்டு சகுண பிரம்மமாக இந்த ஆயிர நாமங்களுக்குப் பொருளாகிறது' என்றாலும் பல இடங்களிலும் ஸ்ரீஆதிசங்கரர் பக்தியிலேயே நெகிழ்ந்து போகிறார்.
உதாரணத்திற்கு 'நாராயண;' என்னும் நாமத்திற்கு உரை எழுதுகையில் ஸ்ரீஆதிசங்கரர் எழுதிவைத்திருக்கும் வரிகள்தாம் இவை --
"நரன் என்னப்படும் ஆத்மாவினிடத்து உண்டானதால் நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய கார்ய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்; நரர்கள் என்னப்படும் ஜீவர்களுக்குப் பிரளய காலத்தில் ஆதாரமாயிருப்பவர்; நரம என்னப்படும் ஜலமாகிய ப்ரளயசாகரத்தில் சயனித்திருப்பவர்; 'விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற ஸந்யாசிகள் ஸம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய 'நாராயணாய நம:' என்னும் இந்த ஸத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் உபதேசிக்கிறேன்' என்பது நரஸிம்ம புராணம்."
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
No comments:
Post a Comment