Thursday, September 24, 2015

தியான சுலோகம் - ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்

க்ஷீரோத3ந்வத் ப்ரதே3சே சுசிமணி விலஸத்ஸைகதே மௌக்திகாநாம் 
மாலாக்லுப்தாஸநஸ்த2: ஸ்ப2டிகமணிநிபை4: மௌக்திகை: மண்டிதாங்க3: | 
சுப்4ரை: அப்4ரை: அத3ப்4ரை: உபரிவிரசிதை: முக்த பீயூஷவர்ஷை: 
ஆநந்தீ3 ந: புநீயாத் அரிநலிநக3தா3 ங்க2பாணி: முகுந்த3: || 

தூயமணிகள் மணற்குன்றுகளாய்த் திகழும் திருப்பாற்கடலில் முத்துமாலைகள் ஆரமிடும் திவ்ய ஆஸனத்தில் எழுந்தருளியிருப்பவரும், ஸ்படிகமணிகள் போன்று விளங்கும் முத்தாரங்களால் அணிதிகழும் திருமேனியுடையவரும், மேலே திரியும் வெண்மேகங்கள் பலவும் அவ்வப்பொழுது வர்ஷிக்கும் அமுததாரைகளில் ஆநந்திப்பவரும், சங்கம், சக்கரம், பதுமம் கதை ஆகியன ஏந்தும் கரங்கள் திகழ்பவரும் பக்தர்களுக்கு வேண்டிய இகபர நலன்களை அருளுபவருமான ஸ்ரீமந்நாராயணர் நம்மைப் பரிசுத்தப்படுத்தட்டும். 

பூ4:பாதௌ3 யஸ்ய நாபி4: வியத3ஸுரநிலச்சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ரே 
கர்ணாவாசா: சிரோத்3யௌ: முக2மபி த3ஹநோ யஸ்ய வாஸ்தேயம் அப்3தி4: | 
அந்தஸ்த2ம் யஸ்ய விச்வம் ஸுரநரக2க3கோ3 போ4கி3க3ந்த4ர்வதை3த்யை: 
சித்ரம் ரம்ரம்யதே தம் த்ரிபு4வனவபுஷம் விஷ்ணுமீம் நமாமி || 

யாருக்குப் பூமி பாதங்களோ, ஆகாயம் நாபியோ காற்று பிராணனோ, சந்திரசூரியர் கண்களோ, திசைகள் காதுகளோ, சிரம் விண்ணோ, அக்னி திருப்பவளச் செவ்வாயோ, சமுத்திரம் அடிவயிறோ, யார் வயிற்றில் தேவர், மனிதர், பறவை, மிருகம், நாகர், கந்தர்வர், தைத்தியர் என விசித்ரமாக விரிந்த உலகம் விளையாடிக் களிக்கிறதோ அந்த மூவுலகும் தம் மேனியாய்க் கொண்டு நிற்கும் ஈசரான விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன். 

ஓம் நமோ ப4க3வதே வாஸுதே3வாய - பரம்பொருளாகிய பகவான் வாசுதேவருக்கு நமஸ்காரம் 

சாந்தாகாரம் பு4ஜக3யனம் பத்3மநாப4ம் ஸுரேம் 
விச்வாதா4ரம் க3க3னஸத்3ரும் மேக4வர்ணம் சுபா4ங்க3ம் | 
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகி3ஹ்ருத்3 த்4யானக3ம்யம் 
வந்தே3 விஷ்ணும் ப4வப4யஹரம் ஸர்வலோகைகநாத2ம் || 

சாந்தமே வடிவெடுத்து அரவணைமேல் பள்ளிகொண்டு, அழகிய பதுமம் மலர்ந்த நாபியும் திகழ, தேவர்தம் நாயகனாய், அனைத்திற்கும் ஆதாரமாய், ஆகாயத்தை ஒத்தவராய், மேகம் போன்ற நிறத்தினராய், சுபமான அங்கங்கள் திகழ்பவராய், திருமகள் விரும்பும் நம் செந்தாமரைக் கண்ணழகர், யோகிகளின் இதயத்தில் தியானத்தால் அடையப்படுபவர், பவபயத்தைப் போக்குபவர், அனைத்துலகிற்கும் ஒரு நாதராய் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன். 

மேக4ச்யாமம் பீதகௌசேயவாஸம் 
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோ4த்3பா4ஸிதாங்க3ம் | 
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம் 
விஷ்ணும் வந்தே3 ஸர்வலோகைக நாத2ம் || 

மேகம்போல் கார்வண்ணம் மஞ்சள்பட்டாடையும் உடுத்தி, திருமறுமார்வனாய், கௌஸ்துப மணி திகழும் மேனியனாய், புண்ணியரான சாதுக்களால் சூழப்பட்டு, தாமரைக் கண்கள் திகழ அனைத்துலகும் ஆளும் ஒரே நாதராய் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன். 

நம: ஸமஸ்த பூ4தானாம் ஆதி3பூ4தாய பூ4ப்4ருதே | 
அநேக ரூப ரூபாய விஷ்ணவே ப்ரப4விஷ்ணவே || 

அனைத்துப் பொருளுக்கும் ஆதியாய்த் தாம் என்றும் விளங்கிப் பூமியைத் தாங்குபவராய், அநேக ரூபங்களைக் கொண்டிலகும் உருவினராய், பிரபுவாய் உட்கலந்து எங்கும் விளங்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம். 

ங்க2 சக்ரம் ஸகிரீட குண்ட3லம் 
ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் 
ஸஹார வக்ஷஸ்த2ல சோபி4 கௌஸ்துப4ம் 
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்பு4ஜம் || 

சங்கும் சக்ரமும், கிரீடகுண்டலங்களும், பொன்னாடையும், அரவிந்தத்திருவிழியும், மாலை திகழும் மார்பில் மன்னும் கௌஸ்துபமும், நான்கு கரமும் கொண்டிலகும் விஷ்ணுவைத் தலையால் வணங்குகிறேன். 

சா2யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸனோபரி | 
ஆஸீனம் அம்பு3த3ச்யாமம் ஆயதாக்ஷம் அலங்க்ருதம் || 

சந்த்3ரானனம் சதுர்பா3ஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் | 
ருக்மிணீ ஸத்யபா4மாப்4யாம் ஸஹிதம் ஸ்ரீக்ருஷ்ணமாச்ரயே || 

பாரிஜாதத் தருநிழலில் பொன்னாசனத்தில் அமர்ந்தவராய், மேகநிறத்தவராய், நீண்ட அகன்ற திருக்கண்கள் அணிபெறத் திகழ, சந்திரன் ஒத்த முகம், நான்கு புஜங்கள், ஸ்ரீவத்ஸம் என்னும் திருமறுமார்பு, ருக்மிணீ சத்யபாமையுடன் அருள்புரியும் ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***