Monday, November 29, 2021

ஸ்ரீத: ஸ்ரீச: ஸ்ரீநிவாஸ:

ஸ்ரீத3: ஸ்ரீ: ஸ்ரீநிவாஸ: ஸ்ரீநிதி4: ஸ்ரீவிபா4வந: | 
ஸ்ரீத4ர: ஸ்ரீகர: ச்ரேய: ஸ்ரீமாந் லோகத்ரயாச்ரய: || 


ஸ்ரீத: - திருவனைத்தும் அருளும் திருமால் 

ஸ்ரீச: -- திருவுக்கும் திருவாகிய செல்வர் 

ஸ்ரீநிவாஸ: - அகல்கில்லேன் என்று திருமகள் மருவும் திருமால் 

ஸ்ரீநிதி: -- திரு பொருந்தி உறைகின்ற பிரான் 

ஸ்ரீவிபாவந: -- ஜீவர்களின் கர்மங்கள் பலவாய் இருப்பினும் அனைவரும் பகவானை அடையச் செய்யும் அன்னையின் தயையை ஏற்பவர் 

ஸ்ரீதர: -- அனைத்து ஜீவர்களுக்கும் உற்ற தாயான ஸ்ரீயை என்றும் தமது மார்பில் தரித்தவர் 

ஸ்ரீகர: -- துதித்தல், நினைத்தல், அர்ச்சனை செய்தல், பூஜித்தல் முதலிய பல வழிகளிலும் ஜீவர்களுக்கு மங்களம் பெருகும்படிச் செய்பவளான ஸ்ரீ என்றும் அனைத்து அவதாரங்களிலும் தம்மைத் தொடர்ந்து இருக்கும்படிச் செய்து கொள்பவர் 

ச்ரேய: ஸ்ரீமாந் -- அனைவருக்கும் உய்யவேண்டிப் புகலாக இருக்கும் அன்னையை என்றும் தன்னை விட்டுப் பிரியாத நித்ய யோகத்தை உடையவர் 

லோகத்ரயாச்ரய: -- விட்டுப் பிரியாத திருமகள் கேள்வனாகிய திருமாலை மூவுலகத்து உயிர்களும் சரணடைந்து உய்வு பெறும். 

***  


அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சி2வ: | 
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || 


அநிவர்த்தீ -- உலகப் பலன்களை விரும்பி அதற்காக முயற்சி செய்பவர்களை அந்தப் பலன்களை அடைந்து அவர்களே அது அல்பம், நிலையில்லாதது என்று உணரும்வரை அவர்களை அந்த வழியிலிருந்து திருப்புவதில்லை 

நிவ்ருத்தாத்மா -- உலகப் பலன்களை விரும்பாது பகவானுக்கே அர்ப்பணமாகக் கர்மங்கள் புரிவோரைத் தம் பக்தர்களாகக் கொண்டவர் 

ஸங்க்ஷேப்தா -- உலகியல் வழியான பிரவிருத்தி மார்க்கத்தில் போவோரின் ஞானம் சுருங்கிவிடும் வகையில் அமைத்திருப்பவர் 

க்ஷேமக்ருத் -- நிவ்ருத்தி மார்க்கமான மோக்ஷவழியில் போவோர்க்கு ஞானம் விரிவடையுமாறு அமைத்திருக்கின்றவர் 

சிவ: -- பிரவிருத்தியோ, நிவிருத்தியோ எந்த மார்க்கத்தில் போவோருக்கும் அவரவர்க்கு வேண்டிய வளத்தை அருள்பவர் 

ஸ்ரீவத்ஸவக்ஷா: -- சிவம் என்றால் மங்களம் என்பதற்கேற்பத் தமது மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மங்களமான மறுவுடையவர் 

ஸ்ரீவாஸ; -- அகல்கில்லேன் என்று திருமகள் விரும்பியுறையும் மார்பினர் 

ஸ்ரீபதி: -- திருமகள் கேள்வர் 

ஸ்ரீமதாம்வர: -- திரு நிறைந்த பெற்றியரில் தலை சிறந்தவர் 

***

Saturday, November 27, 2021

சுபாங்க: சாந்தித: ஸ்ரஷ்டா

சுபா4ங்க3: சாந்தித3: ஸ்ரஷ்டா குமுத3: குவலேய: | 
கோ3ஹிதோ கோ3பதிர் கோ3ப்தா வ்ருஷபா4க்ஷோ வ்ருஷப்ரிய: || 


சுபாங்க: -- பக்தர்களும், யோகிகளும் தம்மிடம் ஈடுபட்டு மனம் லயிக்க வேண்டி உயர்ந்த மங்களமான வடிவங்களைத் தரிப்பவர் 

சாந்தித: -- பக்தி யோகத்தால் ஸாயுஜ்யமாகிய உயர்நிலை தந்து சாந்தி அருள்பவர் 

ஸ்ரஷ்டா -- பக்குவமாகிய ஜீவர்களுக்கு மோக்ஷம் தந்துவிட்டு மீண்டும் பக்குவமடையாத ஜீவர்கள் மோக்ஷத்திற்கான பக்குவம் பெறவேண்டி ஸ்ருஷ்டியைச் செய்பவர் 

குமுத: -- புவியைப் படைத்து அதில் உயிர்கள் பக்குவத்தால் பரிணமிப்பது கண்டு மகிழ்பவர் 

குவலேசய: -- தமக்குத் தாமே யஜமானர்கள் என்று நினைத்துப் பொல்லாவழிகளில் போகும் ஜீவர்களையும் அடக்கியாண்டு அவர்களை மோக்ஷவழியில் செலுத்துபவர் 

கோஹித: -- ஜீவர்கள் முத்திக்கு முனையவேண்டிய இடமாகிய பூமி என்னும் கோ என்பதற்கு என்றும் நன்மையே செய்பவர் 

கோபதி: -- புண்ணியங்களை அனுபவிக்கும் இடமாகிய சுவர்க்கம் என்னும் கோ என்பதற்கும் அவரே தலைவர் 

கோப்தா -- ஜீவர்கள் பக்குவம் அடைந்து முக்தி அடையவேண்டி ஸம்ஸாரச் சக்கரத்தை நன்கு காப்பவர் 

வ்ருஷபாக்க்ஷ: -- வ்ருஷப: என்னும் தர்மத்தின் நாபியாக (அக்ஷ: ) இருப்பவர் 

வ்ருஷப்ரிய: -- ஜீவர்கள் பின்பற்றும் அனைத்து தர்மங்களையும் கண்டு மகிழ்ந்து அதற்கான பலன்களைத் தருபவர் 

***

த்ரிஸாமா ஸாமக: ஸாம

த்ரிஸாமா ஸாமக3: ஸாம நிர்வாணம் பே4ஷஜம் பி4ஷக் | 
ஸந்யாஸக்ருச்ச2ம: சாந்தோ நிஷ்டா2 சாந்தி: பராயணம் || 


த்ரிஸாமா -- மூன்றுவித ஸாமவேத மந்திரங்களால் துதிக்கப்படுபவர் 

ஸாமக: -- ஸாமகானத்தைப் பாடுபவர் 

ஸாம: -- ஸாமவேதமே வடிவாய் இருப்பவர்; தம்மைக் குறித்துப் பாடுவோரின் பாபங்களைப் போக்குபவர் 

நிர்வாணம் -- பாபங்களைப் போக்கி மயர்வற மதிநலம் தந்து உயர்ந்த ஆனந்தத்தைத் தருபவர் 

பேஷஜம் -- ஸம்ஸாரம் ஆகிய கொடிய நோய்க்கு உற்ற மருந்து அவர் 

பிஷக் -- ஸம்ஸாரம் என்னும் நோயை அகற்றும் பிரம்ம வித்யையை அளித்த மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் 

ஸந்யாஸக்ருத் -- பிரபுவிடம் அனைத்து பாரங்களையும் அர்ப்பணித்துவிடுதலாகிய பரந்யாஸம் என்னும் பிரபத்திக்குப் பெயரே ஸந்யாஸம் என்பது. அந்த ஸந்யாஸம் ஆகிய சரணாகதியைத் தந்தருள்பவர் 

சம: -- காம கோப தாபங்களை அடக்கி அமைதி எய்தும் வழியை போதிப்பவர் 

சாந்த: -- சாந்தமே வடிவாக இருப்பவர் 

நிஷ்டா -- சிறந்த யோகிகளின் ஆழ்ந்த நிஷ்டைக்குரிய வடிவம் கொண்டவர் 

சாந்தி: -- அவரிடமே மனத்தைச் செலுத்தி பக்தி புரிபவர்கள் அவரிடமே தாமும், தம்முடைய அனைத்தும் லயித்துவிடுவதான சாந்தியை அடைகிறார்கள் 

பராயணம் -- மிகச்சிறந்த இலட்சியமாகவும், அதை அடைவிக்கும் மிகச்சிறந்த வழியாகவும் தாமே இருப்பவர் 

***

Friday, November 26, 2021

ஸுதந்வா கண்டபரசு:

ஸுத4ந்வா க2ண்ட3பரசுர் தா3ருணோ த்3ரவிணப்ரத3: | 
தி3விஸ்ப்ருக்ஸர்வத்3ருக்3வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: || 


ஸுதந்வா -- அஹங்கார தத்வத்தை ஸுதந்வா என்னும் வில்லாகக் கொண்டவர் 

கண்டபரசு: -- எதிரிகளால் ஒரு நாளும் வெல்ல முடியாத பரசு (கோடரி) என்னும் ஆயுதம் தரித்தவர் 

தாருண: -- பக்தர்களுக்குத் தீங்கிழைக்கும் புறப்பகையையும், அகப்பகையையும் கடிபவர் 

த்ரவிணப்ரத: -- உயர்ந்த செல்வமான சாத்திரங்களையும், அதன் ஆழ்பொருட்களையும் ஒரு சேரத் தரும் வியாசராக அவதரித்தவர் 

திவிஸ்ப்ருக் -- மிகச்சிறந்த பிரம்ம வித்யையின் மூலமாகப் பரமபதத்தின் சிறந்த பொருளைத் தொட்டுக் காட்டுபவர் 

ஸர்வத்ருக்வ்யாஸ: -- பரம்பொருளின் ரூபம், குணம், விபவம், விபூதி ஆகிய அனைத்து தத்வார்த்தங்களையும் உள்ளபடிக் கண்டு, சாத்திரங்களை நன்கு விளக்கமுறப் பகுத்துத் தந்தவர் 

வாசஸ்பதி: அயோநிஜ: -- வாக் என்னும் வித்யைகளுக்குத் தலைவர்; தம் இயல்பினால் என்றும் பிறவாதவர். 

***

Thursday, November 25, 2021

பகவாந் பகஹா நந்தீ

ப4க3வாந் ப4க3ஹா நந்தீ3 வநமாலீ ஹலாயுத4: | 
ஆதி3த்யோ ஜ்யோதிராதி3த்ய: ஸஹிஷ்ணுர்க3திஸத்தம: || 


பகவாந் -- அனைத்து கல்யாண குணங்களும் முழுமையாக உடையவர் 

பகஹா -- ஐஸ்வர்யம், வீர்யம், ஸ்ரீ, ஞானம், வைராக்கியம், யசஸ் என்னும் ஆறு நன்மைகளும் பூர்ணமாக அடைந்திருப்பவர் 

நந்தீ -- ஆனந்தவடிவானவர்; சங்கர்ஷணனாக வடிவெடுத்தவர் 

வநமாலீ -- ஸூக்ஷ்ம பூததத்துவங்களை வனமாலை என்னும் மாலையாகத் தரித்தவர் 

ஹலாயுத: -- உழவின் தொடக்கத்தில் தொழப்படும் தெய்வமாகக் கலப்பையை உடையவர் 

ஆதித்ய: -- அதிதியின் மகனான வாமனர்; ஆ என்னும் அக்ஷரத்தால் நினைக்கத் தகுந்த பொருளாய் இருப்பவர் 

ஜ்யோதிராதித்ய: -- ஒளிகளிலெல்லாம் வேறுபட்ட சிறந்த பேரொளியாக இருக்கும் நாராயணர் 

ஸஹிஷ்ணு: -- யாஎ செய்த பிழையையும் பொறுப்பவர் 

கதிஸத்தம: -- முக்திக்கான உயர்ந்த கதியான ஆசைகளைத் துறத்தலைப் போதித்தவர் 

***

Wednesday, November 24, 2021

வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஷ்ணோ

வேதா4: ஸ்வாங்கோ3Sஜித: க்ருஷ்ணோ த்3ருட4: ஸங்கர்ஷணோSச்யுத: | 
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || 


வேதா: -- பிரபஞ்சம் அனைத்தையும் அளிக்கும் பிரான் 

ஸ்வாங்க: -- படைத்தளிப்பதில் பிற உதவி எதுவும் இன்றி அளிப்பவன் 

அஜித: -- ஸ்ரீவைகுண்டமென்னும் மாற்றத்திற்கு அப்பாற்பட்ட நித்யவிபூதியில் உறைபவன் 

க்ருஷ்ண: -- கண்ணன் என்னும் கருந்தெய்வம் 

த்ருட: -- பக்தர்கள் கண்டு பழகித் தொட்டுணரும்படி அவதார வடிவுகள் எடுப்பவன் 

ஸங்கர்ஷண: அச்யுத: -- சித் அசித் என்னும் அனைத்தையும் தன்னுள் அடக்குபவன்; எந்தப் பிரளயத்தும் மாறாமல் நிலைத்து இருப்பவன் 

வருண: -- பிரபஞ்சத்தை முழுவதும் தன்னுள் அடங்க மூடியிருக்கும் பெரும் தத்துவம் அவனே 

வாருண: -- வருணன் என்னும் ஜலதத்துவத்தின் மீது கருணை கொண்டு சயனித்திருப்பவன் 

வ்ருக்ஷ: -- பக்தர்களுக்கு ஞானமும், பக்தியும், முத்தியும் ஆகிய பழங்களையும், ஸம்ஸார தாபத்தைப் போக்கிப் பகவானிடம் ஈடுபாடு ஆகிய நிழலையும் தரும் வாசுதேவன் என்னும் பெரும் மரம் அவன் 

புஷ்கராக்ஷ: -- திருக்கண் நோக்கால் தெய்விக நன்மைகளைப் பொழிபவன் 

மஹாமநா: -- பக்தர்களுக்கு எத்தனை தான் அருளினும் போதாது என்று மேலும் மேலும் அருளும் பெரும் மனம் கொண்டவன் 

***

Tuesday, November 23, 2021

மஹாவராஹோ கோவிந்த:

மஹாவராஹோ கோ3விந்த3: ஸுஷேண: கனகாங்க3தீ3 | 
கு3ஹ்யோ க3பீ4ரோ க3ஹநோ கு3ப்தச்சக்ர க3தா3த4ர: || 


மஹாவராஹ: -- அமிழ்ந்துபோன பூமியைக் கோட்டிடைக் கொண்டெழுந்த பெரும்வராகர் 

கோவிந்த: -- கோ என்னும் பூமியை மீட்டதால் கோவிந்தர்; கோ என்னும் வாக்கிற்குத் தலைவர் ஆகையால் கோவிந்தர்; கோ என்னும் வேதாந்த சூத்ரங்களின் ஸாரதமமான பொருளாக இருப்பவர் ஆகையாலே கோவிந்தர். 

ஸுஷேண: -- தேவகணங்களையும், பக்தகோடிகளையும் என்றும் தம்மைப் புடைசூழ இருப்பவர் ஆகையாலே ஸுஷேணர் 

கனகாங்கதீ -- பொன்னாரணிகள் கணக்கில பூண்டவர் 

குஹ்ய: -- இரகசியங்கள் எனப்படும் உபநிஷதங்களால் விளக்கப்படுபவர்; இதய குகையில் என்றும் இருப்பவர் 

கபீர: -- உலக அறிவால் என்றும் அறியவியலாத, எல்லையற்ற, என்றும் உபநிஷதங்கள் மூலமாகவே அறியக் கூடிய கல்யாண குணங்களை உடையவர் 

கஹந: -- ஆழம் காண இயலாத் தன்மையர்; மூன்று அவஸ்தைகளிலும் அளவுபடாமல் இருப்பவர் 

குப்த: -- மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத இயல்பை உடையவர் 

சக்ரகதாதர: -- மனம், புத்தி ஆகியவற்றிற்கு எட்டாதவர் ஆயினும் மனம், புத்தி ஆகிய தத்துவங்களையே சக்ரம், கதை என்னும் ஆயுதங்களாகத் தரிப்பவர் 

***

Monday, November 22, 2021

மஹர்ஷி: கபிலாசார்ய:

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதக்ஞோ மேதி3நீபதி: | 
த்ரிபத3ஸ்த்ரித3சாத்4யக்ஷோ மஹாச்ருங்க3: க்ருதாந்தக்ருத் || 


மஹர்ஷி: கபிலாசார்ய: -- வேதங்கள் அனைத்தையும் முழுவதும் உணர்ந்து தூய ஆத்ம ஞானத்தையே உபதேசித்த கபில மஹர்ஷி என்னும் ஆசார்யர் 

க்ருதக்ஞ: -- தம் ஆத்மாவைப் போல் பிறரையும் உணர்வதால் சினம் போன்று தோன்றினும் அருளே நிறைந்தவர் 

மேதிநீபதி: -- கபிலரின் உருவில் பூமியைக் காப்பாற்றும் அருள்வடிவம் அவர் 

த்ரிபத: - சித் அசித் ஈச்வரன் என்று தத்வத்ரயமாகத் தாம் ஆனவர்; பிரணவத்தின் மூன்று எழுத்துக்கள் ஆனவர் 

த்ரிதசாத்யக்ஷ: -- முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பவர்; மூன்று அவஸ்தைகளிலும் நிலைத்தவர் 

மஹாச்ருங்க: -- உலகத்தைத் தன் ஒரு கோட்டிடைக் கொண்டு காத்த கோலவராகர் 

க்ருதாந்தக்ருத் -- அழிவையும் அழித்த அழகு வராகர் 

*** 


Sunday, November 21, 2021

அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ

அஜோமஹார்ஹ: ஸ்வாபா4வ்யோ ஜிதாமித்ர; ப்ரமோத3ந: | 
ஆநந்தோ3 நந்த3நோ நந்த3: ஸத்யத4ர்மா த்ரிவிக்ரம: || 


அஜ: -- உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து அனைத்துக்கும் அடிப்படையாய், முதன்முன்னம் தானே தோன்றும் அகாரம் போன்று, வடமொழி எழுத்துக்களை வரிசையாக எழுதினால் முதல் 24 எழுத்துக்களால் குறிக்கப்படும் பிரகிருதி தத்துவங்களுக்குள்ளும், பின்னர் 25 ஆவது எழுத்தான மகாரத்தால் குறிப்பிடப்படும் ஜீவதத்துவத்திற்குள்ளும் உள்ளுயிராய் நின்று காப்பதால், அகாரத்தின் பொருளாக நமக்குக் காட்சியளிப்பதால் அவர் அஜ: 

மஹார்ஹ: -- ஜீவர்கள் தம்மை அர்ப்பணிக்கத் தகுந்த புகல் அவரே 

ஸ்வாபாவ்ய: -- ஜீவர்களால் தமக்கு மிகவும் இயல்பாக உரிமை பூண்ட பிரபுவாகப் பக்தி செலுத்தத் தகுந்தவர் 

ஜிதாமித்ர: -- தம்மைச் சரணடைந்தோரைக் காமம் முதலிய அகப்பகையை வெல்லுபடிச் செய்பவர் 

ப்ரமோதந: -- தம்மிடம் பக்தி செலுத்தும் அடியார்களின் ஆத்ம சாதனத்தில் பெரும் ஆநந்தத்தைப் பெருகச் செய்பவர் 

ஆநந்த: -- கபிலாவதாரம் போன்று ஆநந்தமே வடிவானவர் 

நந்தந: -- பிரம்மானந்தத்தைத் தருபவர் 

நந்த: -- நித்யவிபூதியில் வந்தடைந்த ஜீவர்களுக்கு அளவிலா ஆனந்தம் அளிப்பதால் பெருகும் ஆநந்தம் மிகுபவர் 

ஸத்யதர்ம: -- மாறாத நிலைத்த ஞானம், ஆனந்தமே நிலையான ஸ்வரூபமாகக் கொண்டு பக்தர்களின் உண்மையான பக்திக்கு என்றும் உறுதுணையாய் நிற்பவர் 

த்ரிவிக்ரம: -- த்ரி என்பதே மூன்று வேதங்களையும் குறிக்கும் ஒரே பெயராகவும் ரிஷிகள் கூறுவதின்படி வேதத்தின் ஊடு எங்கும் தாத்பர்யமாகப் பரவி நிற்பவர் 

***

Friday, November 19, 2021

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ3Sமிதவிக்ரம: | 
அம்போ4நிதி4ரநந்தாத்மா மஹோத3தி4யோSந்தக: || 


ஜீவ: -- ஜீவர்களை ரக்ஷித்துத் தம்முடைய சேஷத்வத்தை உணர்ந்து தம்மிடம் கைங்கரியத்திலே ஊக்கம் கொள்ளச் செய்பவர் 

விநயிதாஸாக்ஷீ -- ஜீவர்களை ரக்ஷிக்கும் போதும் அவர்களை ராஜகுமாரர்கள் போல் நயத்துடன் நடத்தி நல்வழியில் கண்ணும் கருத்துமாய் நடத்துபவர் 

முகுந்த: -- மோக்ஷம் தரவேண்டி ஜீவர்களின் இதயத்திலேயே எப்பொழுதும் உறைபவர் 

அமிதவிக்ரம: -- தமது அளவற்ற ஆற்றலால் பக்தர்கள் உய்ய வேண்டி பல வடிவங்களைக் கொள்பவர் 

அம்போநிதி: -- ஆழத்தில் நீர்வளமாக நின்று தாங்கும் கூர்மம் அவர் 

அநந்தாத்மா -- காலம், தேசம், வஸ்து ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து ஆதிசேஷ உருவினர் 

மஹோததிசய: -- பெருங்கடல் வடிவில் பள்ளிகொள்ளும் பரமர் 

அந்தக: -- உலகனைத்தையும் தம்முள் ஒடுக்கும் முடிவே வடிவானவர் 

***

Thursday, November 18, 2021

ஸோமபோSம்ருதப: ஸோம:

ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: | 
விநயோ ஜய: ஸத்யஸந்தோ4 தா3சார்ஹ ஸாத்வதாம் பதி: || 


ஸோமப: -- அனைத்து வழிபாடுகளின் ரஸமான பகுதி அவரால் அருந்தப்படுகிறது 

அம்ருதப: -- வேள்விகளில் மந்திரங்களால் அளிக்கப்படும் ஹவிஸ் அனைத்தும் அம்ருதம் ஆகி அவருக்கே சேருகிறது 

ஸோம: -- நிலவுபோல் காண்பதற்கு இனியராய் உயிர்களைப் போஷிக்கின்றவர் 

புருஜித் -- அனைத்தையும் பலவழிகளாலும் வெற்றி கொள்பவர் 

புருஸத்தம: -- ஹனுமான் போன்ற உத்தம சாதுக்களிடம் எப்பொழுதும் நீங்காமல் உறைபவர் 

விநய: -- தீமை செய்வோரைத் தண்டிப்பவர் 

ஜய: -- தம்மிடம் தூய பக்தி கொண்டவர்களிடம் என்றும் தோற்று இருப்பவர் 

ஸத்யஸந்த: -- பொய்யாகாத சங்கல்பங்களைக் கொண்டவர் 

தாசார்ஹ: -- பக்தர்கள் தம்மை அர்ப்பணிக்கும் புகலாகவும், பக்தர்களுக்குத் தம்மையே தந்துவிடும் அருள்மிக்கவராகவும் இருப்பவர் 

ஸாத்வதாம்பதி: -- ஸாத்வத ஸம்ஹிதையைத் தந்து பக்தர்களைக் காப்பவர் 

***

Monday, November 15, 2021

உத்தரோ கோபதிர் கோப்தா

உத்தரோ கோ3பதிர் கோ3ப்தா ஜ்நாநக3ம்ய: புராதந: | 
ரீரபூ4தப்4ருத்3 போ4க்தா கபீந்த்3ரோ பூ4ரித3க்ஷிண: || 


உத்தர: -- இழந்ததை மீட்டுக் கொடுப்பவர்; பிரம்மாவிற்கு வேதத்தையும், ஜீவர்களுக்கு முக்தியையும் கொடுப்பவர் 

கோபதி: -- கோ என்னும் வேதவாக்குகளைக் காப்பவர் 

கோப்தா -- அனைத்து வித்யைகளையும் போற்றிக் காப்பவர் 

ஜ்நாநகம்ய: -- வேதஞானத்தால் அடையப்படுபவர் 

புராதந: -- கல்பம்தோறும் அவரே ஞானத்தை அனைவருக்கும் அளிக்கின்றார் 

சரீரபூதப்ருத் -- சித் அசித் அனைத்தும் தம் சரீரமாய்க் கொண்டிருப்பவர் எப்பொழுதும் 

போக்தா: -- அவரே அத்தனை யக்ஞ பலன்களின் பயன்களையும் துய்ப்பவராய் இருந்து அதில் ஜீவர்களுக்குப் பங்களிப்பவர், ஜீவர்களின் நலனுக்காக. 

கபீந்த்ர: -- உலகம் உய்ய வேண்டி வானரர்களாக வந்த தேவர்களின் தலைவர் 

பூரிதக்ஷிண: -- யக்ஞங்களில் அளவற்ற நலன்கள் பெருகுமாறுச் செய்பவர் 

***

Sunday, November 14, 2021

கபஸ்திநேமி: ஸத்வஸ்த:

க3ப4ஸ்திநேமி: ஸத்வஸ்த2: ஸிம்ஹோபூ4த மஹேச்வர: | 
ஆதி3தே3வோ மஹாதே3வோ தே3வேசோ தே3வப்4ருத்3கு3ரு: || 


கபஸ்திநேமி: -- ஒளிகளில் பேரொளியானவர்; சுதர்சன சக்கரத்தை உடையவர் 

ஸத்வஸ்த: -- பக்தர்களின் இதயத்தில் எப்பொழுதும் வீற்றிருந்து தீமை அண்டாதவாறு காப்பவர் 

ஸிம்ஹ: -- பக்தர்களுக்கு வரும் அல்லல்களை நீக்குவதில் சிம்மம் போன்றவர் 

பூதமஹேச்வர: -- அனைத்து தேவர்களுக்கும் தலைவர் அவரே 

ஆதிதேவ: -- தேவர்கள் அனைவருக்கும் மூலம் அவரே 

மஹாதேவ: -- தேவர்கள் உள்ளடக்கிய படைப்பனைத்தையும் லீலையாகக் கொண்டவர் 

தேவேச: -- தேவர்களின் உள்நின்று நியமிப்பவர் 

தேவப்ருத்குரு: -- தேவர்களைத் தாங்கி நின்று அவர்களுக்குக் குருவாகவும் இருப்பவர் 

***

Saturday, November 13, 2021

தர்மகுப்தர்மக்ருத் தர்மீ

த4ர்மகு3ப்3த4ர்மக்ருத்3 த4ர்மீ ஸத3க்ஷரமஸத்க்ஷரம் | 
அவிக்ஞாதா ஸஹஸ்ராம்சு: விதா4தா க்ருதலக்ஷண: || 


தர்மகுப் -- தர்மவழியில் நிற்பவரைப் போற்றிக் காப்பவர் 

தர்மக்ருத் -- தமது அருளால் நல்லவர்களை தர்மவழியில் நிலைக்கச் செய்பவர் 

தர்மீ -- தர்மத்தையே தம் படையாகக் கொண்டவர் 

ஸத் -- எப்பொழுதும் தர்மமே வடிவாக நிற்பவர் 

அக்ஷரம் -- எப்பொழுதும் கல்யாண குணங்களே நிறைந்தவர் 

அஸத் -- நல்லோர் அல்லாதார்க்கு அவர் புகலாக இருப்பதில்லை 

க்ஷரம் -- தீயவர்களுக்கு அழிவாக இருக்கின்றவர் 

அவிக்ஞாதா -- பக்தர்களிடம் ஏற்படும் அறியாத் தவறுகளைக் கவனத்தில் கொள்ளாதவர் 

ஸஹஸ்ராம்சு: -- எல்லையற்ற ஞானக்கதிர்கள் அவரிடம் வீசும்படி இருப்பவர் 

விதாதா -- பக்தர்களின் விதியைத் தாமே நிர்வஹிப்பவர், எமனும் தலையிட முடியாதவாறு. 

க்ருதலக்ஷண: -- அனைத்து சாத்திரங்களும் ஜநார்த்தனனிடமிருந்தே வருகின்றன என்றவாறு இருப்பவர் 

***

Friday, November 12, 2021

ஸ்வாபநஸ்ஸ்வவசோ வ்யாபீ

ஸ்வாபநஸ்ஸ்வவசோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் | 
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நக3ர்போ4 த4நேச்வர: || 


ஸ்வாபந: -- தம் சௌந்தர்யத்தால் ஜீவர்களைக் கவர்ந்து நல்வழியில் நடத்துபவர்; அறிதுயில் அழகர் 

ஸ்வவச: -- என்றும் தம் நிலையில் பெயராதவர் 

வ்யாபீ -- அனைத்திலும் அந்தர்யாமியாய் நீக்கமற வியாபித்தவர் 

நைகாத்மா -- அனைத்து ஆத்மாக்களிலும் அந்தராத்மாவாய் விளங்கும் பரமாத்மா அவரே 

நைககர்மக்ருத் -- பிரபஞ்சத்தின் பல செயல்களையும் தாம் செய்தவண்ணம் இருப்பவர் 

வத்ஸர: -- ஜீவர்களின் இதயத்தில் மேவியுறைந்து அவர்களை உயர்ந்த இலட்சியத்தின்பால் உய்ப்பவர் 

வத்ஸல: -- சரணடைந்தோரைக் கன்றைத் தாய்ப்பசு காப்பதைப் போலக் கனிந்து காப்பவர் 

வத்ஸீ -- அத்தனை உயிர்களையும் தம் கன்றுகள் போல் கருதுபவர் 

ரத்நகர்ப: -- அனைத்து உயிர்களுக்கும் அனைத்து வளங்களையும் இடையறாது கொடுக்கும் பெருவளம் மிக்கவர் 

தநேச்வர: -- தம் குழந்தைகளுக்கு ஐஸ்வர்யங்களை விரைந்து அருளும் தந்தை அவரே 

***

Thursday, November 11, 2021

ஸுவ்ரத: ஸுமுகஸ்ஸூக்ஷ்ம:

ஸுவ்ரத: ஸுமுக2ஸ்ஸூக்ஷ்ம: ஸுகோ4ஷ: ஸுக2த3: ஸுஹ்ருத்| 
மநோஹரோ ஜிதக்ரோதோ4 வீரபா3ஹு: விதா3ரண: || 


ஸுவ்ரத: -- உறவுகளுக்காக, ஒரு சமயம் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஆனால் அனைத்து ஜீவர்களையும், தம்மைச் சரணடைந்தாரைக் காப்பதையே நித்யமான விரதமாகக் கொண்டவர் 

ஸுமுக: -- விரதத்தினால் முகம் மேலும் மேலும் மகிழ்ச்சியும், இனிமையும் கூடியிருப்பவர் 

ஸூக்ஷ்ம: -- உபாதிகள் ஏதுமற்ற சமாதி நிலையில் உணரப்படும் சூக்ஷ்ம ரூபம் உடையவர் 

ஸுகோஷ: -- உபநிஷதங்களால் கோஷிக்கப்படுபவர் 

ஸுகத: -- தவறாமல் நன்னெறியில் நிற்போருக்கு உயர்ந்த ஆனந்தம் தருபவர் 

ஸுஹ்ருத் -- அனைவருக்கும் உபகாரம் செய்ய விழையும் நல்லிதயம் ஆனவர் 

மநோஹர: -- தம் கனிவால் அனைவருடைய மனத்தையும் கவர்பவர் 

ஜிதக்ரோத: -- குரோதமே அற்ற இயல்பானவர் 

வீரபாஹு: -- அழகிய பல தடந்தோள் வீரர் 

விதாரண: -- அதர்மத்தில் ஈடுபட்டோரை அறுத்துவிடுபவர் 

***

Tuesday, November 9, 2021

யக்ஞ இஜ்யோ மஹேஜ்யச்ச

யக்ஞ இஜ்யோ மஹேஜ்யச்ச க்ரதுஸ்ஸத்ரம் ஸதாங்க3தி: | 
ஸர்வத3ர்சீ நிவ்ருத்தாத்மா ஸர்வக்ஞோ ஜ்நாநமுத்தமம் || 


யக்ஞ: -- வேள்வி ரூபமாய் இருப்பவர் 

இஜ்ய: -- யாரைக் குறித்து வேள்வி செய்யினும் தாமே அஃது சென்று அடையும் இலட்சியமாய் இருப்பவர் 

மஹேஜ்ய: -- யாதொரு பலத்தையும் கருதாது தமக்கே அர்ப்பணமாக வேள்வி புரிவோர்க்கு மோக்ஷபலத்தை அருள்பவர் 

க்ரது: -- க்ரதுவே தம் ஸ்வரூபமாய் இருப்பவர்; அக்னிஷ்டோமங்களுக்கு இலட்சியமாய் இருப்பவர் 

ஸத்ரம் -- வேள்விகள் அனைத்தும் நிலைபெறும் இடமாய் இருப்பவர் 

ஸதாங்கதி: -- ஸத்துக்களின் ஒரே புகலாய் இருப்பவர் 

ஸர்வதர்சீ -- அனைத்திற்கும் சாக்ஷியாய்ப் பார்த்துக் கொண்டிருப்பவர் 

நிவ்ருத்தாத்மா -- நிவ்ருத்தி மார்க்கத்தின் பரம இலட்சியமாய் இருப்பவர்; பதரியில் நிவ்ருத்தி மார்க்கத்தை உபதேசித்தவர் 

ஸர்வக்ஞ: -- அனைத்தையும் பூர்ணமாக அறிவதே இயல்பாகக் கொண்டவர் 

ஜ்நானமுத்தமம் -- உத்தம ஞானங்கள் அத்தனையாகவும், உத்தம ஞானங்கள அனைத்தையும் வழங்குபவராகவும் இருப்பவர். 

***

Monday, November 8, 2021

அநிர்விண்ண: ஸ்தவிஷ்டோ பூ:

அநிர்விண்ண: ஸ்த2விஷ்டோ2 பூ4ர்த4ர்மயூபோ மஹாமக2: | 
நக்ஷத்ரநேமிர்நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாமஸ்ஸமீஹந: || 


அநிர்விண்ண: -- ஜீவர்கள், தம் முயற்சியை எத்தனை தோற்பித்தாலும் அதனால் சிறிதும் அயர்வின்றி, அவர்களைக் கடைத்தேற்ற முனைந்திருக்கும் தன்மையர் 

ஸ்தவிஷ்ட: -- சிம்சுமாராக்ருதியில் விவரிப்பது போல் பிரபஞ்சமே தம் சரீரமாகக் காட்சியளிப்பவர் 

அபூ: (பூ: ) -- பிரபஞ்ச உருவாகக் காட்சியளிக்கும் அவரே பூமியாக நின்று உயிர்களைத் தாங்குகிறார் 

தர்மயூப: -- அனைத்தும் நெறி பிறழாதபடி அவரிடம் கட்டி வைக்கப் பட்டிருப்பதால் அவர் தர்ம யூபர் 

மஹாமக: -- யக்ஞங்களைத் தம் அங்கங்களாகக் கொண்டு திகழும் யக்ஞமூர்த்தி 

நக்ஷத்ரநேமி: -- நக்ஷத்ரவடிவான பிரபஞ்ச சரீரத்திற்கு இதயம் போன்றவர் 

நக்ஷத்ரீ -- சிம்சுமார வடிவான பிரபஞ்ச வடிவினுள் திகழும் நாராயணர் 

க்ஷம: -- சிறிதும் வருத்தமே இன்றி அனைத்து உலகங்களையும் தாங்கிப் பொறுப்பவர் 

க்ஷாம: -- அவாந்தரப் பிரளயத்தின் போது அனைத்து நக்ஷத்திரங்களும் அழிந்துபடத் தாம் மட்டுமே இருப்பவர் 

ஸமீஹந: -- பிரபஞ்சத் தோற்றத்தில் அனைத்து சக்திகளையும் உந்திச் செயலாற்ற வைப்பவர் 

***

Sunday, November 7, 2021

விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு:

விஸ்தார: ஸ்தா2வரஸ்தா2ணு; ப்ரமாணம் பீ3ஜமவ்யயம் | 
அர்தோ2Sநர்தோ2 மஹாகோசோ மஹாபோ4கோ3 மஹாத4ந: || 


விஸ்தார: -- பிரபஞ்ச விரிவனைத்தும் தம்முள் அடங்க இருப்பவர்; வையம் உய்ய வேதப் பொருள் விரிப்பவர் 

ஸ்தாவரஸ்தாணு: -- அசையாமல் நிலைத்து நிற்கும் பெரும் தத்துவம்; வேத வழியை நன்கு ஸ்தாபித்துத் திடப்படுத்துபவர் 

ப்ரமாணம் -- அனைத்தையும் உணரும் சைதன்யத்திற்கும் அடிப்படைத் தத்துவமாய் இருப்பவர்; நல்லது தீயது ஜீவர்களுக்காகத் தாமே நன்கு பிரித்துக் காப்பவர் 

பீஜமவ்யயம் -- அனைத்திற்கும் ஆதிகாரணமாய் இருந்தும் எந்தவித மாற்றமும் அற்றவர் 

அர்த்த: -- அனைவராலும் விரும்பப்படும் உறுதிப்பொருள் அவர் 

அநர்த்த: -- உலகியலில் முழுகியவர்களால் பொருட்படுத்தப் படாமல் இருப்பவர் 

மஹாகோச: -- தீராத பல செல்வங்களையும், ஐஸ்வர்யங்களையும் உடையவர்; ஐந்து கோசங்களுக்கும் தாண்டி நிற்பவர் 

மஹாபோக: -- அத்தனை விதமான ஜீவர்களும் விரும்பும் போகங்களைத் தம்முள் கொண்டவர் 

மஹாதந: -- ஞானம், தர்மம் முதலிய அத்தனை விதமான தனங்களையும் உடையவர் 

***

Saturday, November 6, 2021

ருதுஸ்ஸுதர்சந: கால:

ருதுஸ்ஸுத3ர்ந: கால: பரமேஷ்டீ2 பரிக்3ரஹ: | 
உக்3ரஸ்ஸம்வத்ஸரோ த3க்ஷோ விச்ராமோ விச்வத3க்ஷிண: || 


ருது: -- பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவர்; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவர் 

ஸுதர்சந: -- தம்மைக் காண்பதாலேயே உயர்ந்த நன்மைகள் பெருகும்படி இருப்பவர் 

கால: -- காலம் என்ற வடிவில் அனைத்தையும் அளந்து அடக்குபவர் 

பரமேஷ்டீ -- பரமபதத்தைத் தம் உயர்ந்த ஸ்தானமாகக் கொண்டவர் 

பரிக்ரஹ: -- தம்மோடு தொடர்பு கொண்ட அனைத்திற்கும் மோக்ஷம் தரும் இயல்பினர் 

உக்ர: -- ஜீவர்களின் நலனுக்கு வேண்டி பிரளயத்தைக் கடுமையுடன் நடத்துபவர் 

ஸம்வத்ஸர: -- ஸ்ருஷ்டியின் சுழற்சியை மாறாத கடும் நியமத்துடன் நடத்துபவர் 

தக்ஷ: -- செயல் திறமையே வடிவானவர் 

விச்ராம: -- பவநோயால் நலிந்தோர்க்கு உய்வும் ஓய்வும் நல்குபவர் 

விச்வதக்ஷிண: -- அனைத்திற்கும், அனைவருக்கும் உரிய திருப்தியை அளிப்பவர் 

***

Friday, November 5, 2021

வைகுண்ட: புருஷ: ப்ராண:

வைகுண்ட2: புருஷ: ப்ராண: ப்ராணத3: ப்ரணவ: ப்ருது2: | 
ஹிரண்யக3ர்ப4ச் த்ருக்4நோ வ்யாப்தோ வாயுரதோ4க்ஷஜ: || 


வைகுண்ட: -- குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர் 

புருஷ: -- அந்தர்யாமியாய் நின்று ஜீவர்களின் பாபங்களைப் பொசுக்கித் தூய்மை நல்குபவர் 

ப்ராண: -- மோக்ஷத்திற்காக அனைவருக்கும் வாழ்வு நல்குபவர் 

ப்ராணத: -- சோர்ந்து போகும் ஜீவர்களுக்குப் புத்துயிரூட்டி முத்திவழியில் தூண்டுபவர் 

ப்ரணவ: -- வேதங்களிலேயே பரம்பொருளுக்கான மிகச்சிறந்த ஸ்துதியாக இருக்கும் ப்ரணவமாக இருப்பவர் 

ப்ருது: -- எல்லையற்று விரியும் மஹிமையுடையவர் 

ஹிரண்யகர்ப: -- திவ்யமான சௌந்தர்யத்துடன் இதய கர்ப்பத்தில் குடிகொண்டிருப்பவர் 

சத்ருக்ந: -- இதயத்தில் எழுந்தருளியிருந்து காமம், குரோதம், லோபம் முதலிய ஆறு சத்ருக்களையும் அழிப்பவர் 

வ்யாப்த: -- அத்தனை உயிர்களின் இதயத்திலும் இருந்து தந்தை தம் மக்களைக் காப்பது போல் காப்பவர் 

வாயு; -- காற்று போல் தாமே அனைவர்பாலும் சென்று வாழ்விப்பவர் 

அதோக்ஷஜ: -- ஆரா அமுதாய்ப் பெருகும் ஆனந்தர் 

***

Thursday, November 4, 2021

ராமோ விராமோ விரதோ

ராமோ விராமோ விரதோ மார்கோ3 நேயோ நயோSநய: | 
வீரச்க்திமதாம் ச்ரேஷ்டோ2 த4ர்மோ த4ர்ம விது3த்தம: || 


ராம: -- நித்திய ஆனந்தமாய், யோகிகள் எல்லையற்று ஈடுபடும் பரம்பொருள்; உத்தமமான கல்யாண குணங்களால் பக்தர்களின் மனத்தை மகிழ்விக்கும் ராமர் 

விராம: -- யாரிடம் ஈடுபடுவதால், யாருடைய சரிதத்தைக் கேட்பதால் நம் உலகக் கவலைகள் முடிவுக்கு வருகிறதோ அந்தப் பரமபுருஷர் 

விரத: -- வைராக்கியம், தியாகமே உருவாய் இருப்பவர் 

மார்க: -- முக்திக்கான உன்னத வழியாக இருப்பவர் 

நேய: -- வேதாந்த ஞானத்தால் முக்திக்கு வழிநடத்துபவர் 

நய: -- வழிநடத்துபவரெனினும், பக்தியால் கட்டுண்டு பின் தொடர்பவர் 

(திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் திருவீதி எழுந்தருளும் போது வேதங்கள் பின்தொடர்வதையும், பெருமாள் திவ்யப் பிரபந்தத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் நினைவு கொள்ளலாம்) 

அநய: -- தம்மை வழிநடத்தத் தக்க தலைமை ஒரு போதும் இல்லாதவர் 

வீர: -- அசுரர்கள் அஞ்சி நடுங்கும் பெருவீரர் 

சக்திமதாம்ச்ரேஷ்ட: -- ஆற்றலும், வீரமும் கொண்டோரில் சிறந்து ஒப்பாரில்லாதவர் 

தர்ம: -- சநாதன தர்மமாய்த் தாமே இருப்பவர் 

தர்மவிதுத்தம: -- தர்மம் சூக்ஷ்மமானது ஆகையாலே எது தர்மம் என்பதை அறிவதில் அவரே பிரமாணம் ஆனவர் 

***

Wednesday, November 3, 2021

வ்யவஸாயோ வ்யவஸ்தாந:

வ்யவஸாயோ வ்யவஸ்தா2ந: ஸம்ஸ்தா2ந: ஸ்தா2நதோ3 த்4ருவ: | 
பரர்த்3தி4: பரமஸ்பஷ்ட: துஷ்ட: புஷ்ட: சுபே4க்ஷண: || 


வ்யவஸாய: -- முக்தியை நோக்கி ஜீவர்களைப் பரிணமிக்கச் செய்வதில் அயராது முனைபவர்; துருவன் என்ற குழந்தையிடம் பக்தியை ஊட்டிப் பெருநிலைக்கு உய்த்தவர் 

வ்யவஸ்தாந: -- தம் அருளில் அனைத்தும் இயல்பாகவே ஒழுங்கில் இயங்கும்படி அமைப்பவர். துருவனை நக்ஷத்திர நிலையாக்கி அண்டத்தையே அதனைச் சுற்றி முறையாகச் சுழலச் செய்பவர் 

ஸம்ஸ்தாந: -- உயிர்க்குலம் அனைத்தும் அடைய வேண்டிய முக்திப் பெருநிலையாய்த் திகழ்பவர் 

ஸ்தாநத: -- துருவன் போன்ற பக்தர்களுக்கு மிகச் சிறந்த ஸ்தாநம் தருபவர் 

த்ருவ: -- தாம் மாறாமல் என்றும் நிலைத்தவர்; உயர்ந்த ஸ்தானமாகிய த்ருவ ஸ்தானமாய்த் தாமே இருப்பவர் 

பரர்த்தி: -- உயர்வற உயர்நலம் கொண்டவர்; சகல கல்யாண குணங்களும் உடையவர் 

பரமஸ்பஷ்ட: -- மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர் 

துஷ்ட: - சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர் 

புஷ்ட: -- குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர் 

சுபேக்ஷண: -- முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும், பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும், முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும், அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர் 

***

Monday, November 1, 2021

உத்பவ: க்ஷோபணோ தேவ:

உத்3ப4வ: க்ஷோப4ணோ தே3வ: ஸ்ரீக3ர்ப4: பரமேச்வர: | 
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா க3ஹனோ கு3ஹ: || 


உத்பவ: -- பவக்கடலில் இருந்து பக்தர்களை விடுவிப்பவர்; அவருடைய அவதார லீலைகளை நினைப்பதால் ஸம்ஸாரபந்தம் விடுபடுகிறது. 

க்ஷோபண: -- நல்வழியில் செல்லாதோரை நடுங்கச் செய்பவர்; படைப்பிற்கு முன்னர் இருந்த ப்ரக்ருதியைக் கலக்கிச் சிருஷ்டியை வெளிப்படச் செய்பவர் 

தேவ: -- அனைத்தின் உள்ளுயிராய் ஒளிர்பவர்; மாயையில் ஜீவர்களைக் கட்டி விளையாடுபவர் 

ஸ்ரீகர்ப: -- படைப்பின் எந்நேரத்திலும் தம்மோடு பிரியாமல் திருமகள் திகழ நிற்பவர் 

பரமேச்வர: -- உயர்வற உயர்நலம் உடையவராய்த் திகழும் திருமால் அவரே 

கரணம் -- தம்மை அடையத் தாமே தகுந்த துணையாக இருப்பவர் 

காரணம் -- அனைத்துவித காரணமாகவும் அவரே திகழ்பவர் 

கர்த்தா -- காரணம் கொண்டு இயற்றும் ஆக்குவோனாகவும் அவரே திகழ்கிறார் 

விகர்த்தா -- விசித்திரமான படைப்பை இயற்றுபவர்; பக்தர்களின் ஆனந்தம், துயரங்களைத் தம்முடையதாகக் கருதுபவர் 

கஹந: -- நம் புலனுக்கும் கருத்திற்கும் புலப்படா மஹிமை உடையவர்; பக்தர்களிடம் அவர் கொள்ளும் அன்பை நம்மால் புரிந்துகொள்ள இயலாது இருப்பவர் 

குஹ: -- ஜீவர்களிடத்தில் அவர்களே அறியாமல் அவர்தம் இதய குகையில் வீற்றுக் காப்பவர் 

***